அடுத்து என்ன? - ஜோ டி குரூஸ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வேர்பிடித்த விளைநிலங்கள் படம் : கே.ராஜசேகரன்

ப்போது எனது பள்ளி, கல்லூரிக் கால அனுபவ நினைவுகளை  எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘வேர்பிடித்த விளைநிலங்கள்’ என்ற தலைப்பில் அது விரைவில் புத்தகமாக வரவிருக்கிறது.

நெல்லை மாவட்டம், உவரியைச் சேர்ந்தவன் நான். பால்யத்தில் அந்த ஊருக்கு வெளியே உலகமே இல்லை என்று நம்பிக்கொண்டிருந்தேன். எனது எட்டாவது வயதில் பள்ளிக்கூடத்திலிருந்து ‘ஞான சௌந்தரி’ படத்துக்கு அழைத்துப் போனார்கள். திசையன்விளையில் இருந்தது தியேட்டர். அந்த வயதில் எனக்கு அது ஒரு புதிய உலகைப் பார்க்கும் அனுபவமாக இருந்தது. கல்லூரி, இலக்கியம் என பிறகு புதிய புதிய உலகங்களால் என் ஆளுமை விரிவடைந்தது. இந்த அனுபவங்களையெல்லாம் அதில் பதிவுசெய்திருக்கிறேன்.

எனக்கு எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவு எப்போதும் இருந்தது இல்லை. 2004–ம் ஆண்டில் திடீரென்று ஓர் அலை மாதிரி ஏதோ கொண்டுவந்து இங்கு சேர்த்துவிட்டது. எழுதுவதற்கென்று மெனக்கெட்டு உட்கார்ந்தது இல்லை. பல சமயங்களில், நள்ளிரவில் பணி முடித்து, களைத்து வீடு திரும்பும் வேளையில் எழுத வேண்டும் என்று அழுத்தம் உருவாகியிருக்கிறது. அப்படியான நள்ளிரவுகளில் நிறைய எழுதியிருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம், நாம் எழுத நினைப்பதைப் பெரும்பாலும் எழுத முடியாது என்பதுதான். அது பாட்டுக்கு இழுத்துக்கொண்டு போகும். நானும் அதன் போக்கில் போய்விடுவேன்.
   
இனி நாவல் எழுத வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டேன். பல்வேறு கதாபாத்திரங்கள், அவர்களின் தனித்தனி உலகம், அவர்களது பிரச்னைகள் என எல்லாவற்றையும் தூக்கிச் சுமக்க முடியவில்லை. `கொற்கை’ எழுதும்போது பெரும்பாடுபட்டேன். என்னிடம் இருக்கும் நல்ல பழக்கங்களில் ஒன்று, டயரி எழுதுவது. பெரும்பாலும் தினமும் எழுதிவிடுவேன். ஆனாலும், இதுவரை புனைவுப் பயன்பாட்டிற்காக டயரியைத் திறந்தது இல்லை. ‘வேர்பிடித்த விளைநிலங்கள்’ டயரிக் குறிப்புகள் அல்ல. ஆழ்மனதில் சுருண்டெழும் பால்ய, இளமைக்கால நெய்தல் நினைவலைகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick