கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : கே.ராஜசேகரன்

`நாகமுனி’ என்றுதான் நான் அவனை அழைப்பேன். அவனது பெற்றோர் இட்ட பெயர் என்னவென்பது எனக்கு நினைவில்லை. அவனோடு மலைகள்தோறும் அலைந்து திரிந்திருக்கிறேன். `லட்சுமி’ என்று பெயர்வைத்திருந்த அவனது செல்ல நாயோடு, அவனும் நானுமாக இரவும் பகலும் மலைகளில் கிடந்திருக்கிறோம்.

சிறு மரங்கள் நிறைந்த கரட்டுக்காட்டில், அடர்ந்த புதருக்குள் போவது எளிதான காரியம் அல்ல. படுத்துக்கொண்டே உள்நுழைந்து போக வேண்டும், உடலைத் துளியும் மேலே தூக்க முடியாது, மேலே விரிந்துகிடப்பது முழுவதும் முள்பந்தல். பாம்பு ஊர்வதைப்போலத்தான் ஊர்ந்துகொண்டே உள்ளே போக வேண்டும். ஒருமுறை புதரொன்றுக்குள் நாகமுனி உள்ளே போனான். சுமார் 30 அடி தூரத்தைக் கடந்திருப்பான், உராய்ந்த நிலையில் உள்ளே போய்க்கொண்டிருக்கும்போது சுருண்டுகிடந்த கருநாகம் ஒன்று அவனது முகத்துக்கு அருகில் படம் விரித்து எழுந்தது. ஊர்ந்து போகிறவனின் கைகள் இரண்டும் மண்ணோடு மண்ணாக மார்புக்கு அடியில்தான் இருக்கும். கையைத் தூக்க முடியாது, கத்த முடியாது, அசைய முடியாது. அதைவிட முக்கியம் அவனைப்போலவே ஊர்ந்து பின்னால் போய்க்கொண்டிருந்த லட்சுமி, பாம்பைப் பார்த்துவிட்டால் பாய்ந்து முன் நகரும் அந்தச் சத்தம் கேட்டாலே, ஓர் அடி இடைவெளியில் இருக்கும் நாகமுனியின் முகத்தில் சீறி இறங்கும் கருநாகத்தின் படம்.

புதருக்கு வெளியில் உட்கார்ந்திருந்த எனக்கும் உள்ளுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் பயங்கர நிகழ்வு எதுவும் தெரியாது. மிக நீண்ட நேரம் கழித்து, நாகமுனி வெளியில் வந்தான். இடது கண் கருவிழியில் முள் இறங்கியிருந்தது. வலியால் துடித்தபடி இருந்தான். அவனது கையில் இருந்த துண்டால் கண்ணை அப்படியே கட்டலாம் என்று நான் முயன்றபோது “வேண்டாம் அதில் விஷம் இருக்கலாம்” என்றான். எனக்கு அப்போது புரியவில்லை.

பெரும்பாடுபட்டு மலையிலிருந்து இறங்கி வந்து, மருத்துவமனையில் சேர்த்தோம். நீண்ட சிகிச்சைக்குப் பின்னர் இடக்கண் கருவிழியின் வெள்ளைத்தழும்போடு, பார்வைக் குறைவோடு அவன் வீடு திரும்பினான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick