நாய் குரைத்தது; மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... - ஆதவன் தீட்சண்யா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘சாதிகளிடம் ஜாக்கிரதை - மிர்ச்பூர்’

`தனிநபர்களுக்கிடையிலான பிரச்னையே, சாதிய வன்கொடுமைகளுக்குக் காரணம்’ என்று சொல்லப்பட்டுவருகிறது. உண்மையில், அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில், சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக, துலீனாவில் (15.10.2002) ஐந்து தலித்துகளை கல்லால் அடித்துக் கொன்றது,  கோஹானா (31.08.2005) மற்றும் சல்வான் ( 01.03.2007) கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்தழித்தது என ஊடகங்கள் வழியே தெரியவந்த வன்கொடுமைகள் ஒன்றிரண்டுதான். உண்மை நிலவரமோ, `ஒவ்வோர் அங்குலத்திலும் நொடிக்கு நொடி வன்கொடுமைகள் நிகழும் பகுதி’ என்று ஹரியானா  முழுவதையுமே அறிவிக்கும் அளவுக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவுமே ஹரியானாவுக்குச் சற்றும் குறையாத வன்கொடுமை பூமிதான்.

ஹரியானாவின் ஹிஸ்ஸார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்பூர், ஏற்கெனவே சாதிய வன்கொடுமைக்காக அறியப்பட்டதுதான். 1,700 ஜாட் குடும்பங்களும் 525 தலித் குடும்பங்களும் விரல்விட்டு எண்ணுமளவுக்கு பார்ப்பனர்களும் மிர்ச்பூரில் வசிக்கிறார்கள். சாதியத்தை ஏற்கிற யாவருமே பார்ப்பனர்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறபடியால், அவர்களது எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல. மிர்ச்பூரின் ஜாட் ஜமீன்தார்களில் ஒருவன் ஹோசியார் சிங். தன் மகனுக்கு ஓரினப் புணர்ச்சியில் நாட்டம் இருப்பதை அறிந்து, அவனது உறவாளிகளைக் காட்டுமாறு அவனை வெளுத்தெடுக்கிறான். உறவாளிகளைக் காட்டிக்கொடுக்க விரும்பாத மகனோ, மூன்று தலித்களின் பெயர்களைக் கூறிவிடுகிறான். ஹோசியார் சிங்கும் அவனது மனைவி நங்கி சிங்கும் தலித் குடியிருப்புக்குள் புகுந்து, இரண்டு தலித் இளைஞர்களையும் அவர்களது தாய்மார்களையும் பிடித்து அடித்திருக்கிறார்கள். அவர்களை நிர்வாணமாக்கி, தெருத்தெருவாக இழுத்துச் சென்றிருக்கிறார்கள். 02.05.2007 அன்று நடந்த இந்த வன்கொடுமை, நாடு தழுவிய கண்டனத்தைப் பெற்றாலும், அதற்காக சாதியவாதிகள் அகங்காரத்தை விட்டுவிடுவார்களா என்ன?

19.04.2010. குடிவெறியில் நிதானமிழந்த ஜாட் இளைஞர்களின் கும்பலொன்று, இருசக்கர வாகனத்தில் தலித் குடியிருப்புக்குள் நுழைந்திருக்கிறது. கரன்சிங் என்கிற தலித் வளர்க்கும் நாய் (ரூபி) அந்தக் கும்பலின் கொட்டத்தைப் பார்க்கச் சகியாமல் குரைத்திருக்
கிறது. உடனே ராஜீந்தர் பாலி - ஜமீன்தார் ஒருவரின் மகன், செங்கல்லால் நாயைத் தாக்கியிருக்கிறான்.  இதை ஆட்சேபித்த  கரன்சிங்கின் உறவினரான யோகேஸ், அந்தக் கும்பலால் தாக்கப்பட்டிருக்கிறார். அங்கு வந்த கரன்சிங், பிரச்னை பெரிதாகிவிடக் கூடாது என்கிற எண்ணத்தில், கும்பலிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பிவைத்திருக்கிறார். இயல்புக்குத் திரும்ப முடியாத கரன்சிங், தங்களது சமுதாயத் தலைவர் வீர் பானுடன் போய் ஜாட்டுகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால், வீர் பான் ஜாட்களால் தாக்கப்பட்டிருக்கிறார். ஜாட்களின் விபரீதத் திட்டத்தை யூகித்த தலித்கள், நர்னான்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 2007-ம் ஆண்டில் வன்கொடுமைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்தவரும், மிர்ச்பூர் ஜாட் தலைவன் ஒருவனுடைய மருமகனின் நண்பனுமான வினோத் குமார் காஜல் என்பவன்தான், இப்போதும் காவலதிகாரி. தன் நண்பனோடு தலித் குடியிருப்புக்குப் போன அந்த அதிகாரி, புகாரைத் திரும்பப் பெறுமாறு தலித்களை மிரட்டியுள்ளான். 21.04.2010 காலையில் அந்தக் காவலதிகாரியும் வட்டாட்சியரும் அழைத்ததன் பேரில், தலித்கள் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்த நேரத்தில், ஜாட்கள்,  தலித்களின் 18 வீடுகளை கொள்ளையடித்துவிட்டு, தீயிட்டுப் பொசுக்கினர். போலியோவால் நடக்க இயலாத சுமன்(17) என்கிற பெண்ணை வீட்டுக்குள்வைத்து கொளுத்தி இருக்கிறார்கள். மகளைக் காப்பாற்ற தாராசந்த் வீட்டுக்குள் ஓடியபோது, ஜாட்கள் கதவைப் பூட்டி இருவரையும் எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick