“பெரியாரின் பெருங்கனவு!” - சிற்பி ராஜன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கலை - சிற்பம் - கலகம் எழுத்தாக்கம்: இளமுரசு - படங்கள்: அ.குரூஸ்தனம்

“சின்ன வயசுல இருந்தே நான் கலகக்காரன்... யாரும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. 13 வயசுலயே நாத்திகன் ஆயிட்டேன். வீட்ல எல்லோரும் என்னை `பெரியார்’னுதான் அழைப்பாங்க. அண்ணனுங்கள்லாம் பெரியப் பெரிய வேலைகள்ல இருந்தாங்க. எனக்கு, செருப்பு தைக்கிறவர், லாடம் அடிக்கிறவர், கூடை முடையிறவர், பானை சட்டி செய்யிறவங்கதான் உலகமா இருந்தாங்க. அவங்க பக்கத்துல உட்கார்ந்து, பார்த்துக்கிட்டே இருப்பேன். பி.யூ.சி முடிச்சதும், `மேல படி’ன்னாங்க. நான், `சுவாமிமலைக்குப் போய் சிற்பத் தொழில் கத்துக்கப்போறேன்னு சொன்னேன். `சுவாமிமலைக்குப் போனா, இந்த வீட்டுப்பக்கமே வரக் கூடாது’ன்னாங்க. மோதிரம், கடிகாரம், செருப்பு எல்லாத்தையும் கழட்டி அப்பா முன்னாடி வெச்சுட்டு, என் பி.யூ.சி சர்டிஃபிகேட்டை கிழிச்சுப் போட்டுட்டு, `உங்க பேரையோ, நீங்க கொடுத்த படிப்பையோ எங்கேயும் பயன்படுத்த மாட்டேன். இனிமே இந்த வீட்டுக்குள்ள வர மாட்டேன். நீங்களும் என் வீட்டுக்கு வரக் கூடாது’ன்னு சொல்லிட்டு கைலி, சட்டையோட வெளியே வந்தேன். இன்னியோட 47 வருஷம் முடிஞ்சு ஒன்பது மாசம் ஆச்சு... இன்னைக்கு வரைக்கும் நானும் போகலே. அவங்களும்  வரலே...”   குழந்தையைப் போலச் சிரிக்கிறார் சிற்பி ராஜன்.

மடியில் உலோகச் சூடு வடியாத முக்கால் பாகத்தில் புத்தர் கிடக்கிறார். கைகளில் புகைந்துகொண்டிருக்கிறது சிகரெட். இடையிடையே அறம் வைத்துத் தேய்த்து புத்தரை உயிர்ப்பிக்கிறார்.

 `சிற்பி ராஜன்’ என்ற பெயர் பதிக்கப்பட்ட ஐம்பொன் சிற்பங்களுக்கு, உலக கலைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் மரியாதை உண்டு. இறை மறுப்பாளரான ராஜன் கைபட்டு உருவாகும் சிற்பங்களில் தெய்வீகம் ததும்புகிறது. பாரம்பர்ய செறிவு மாறாமல், நவீன உத்திகள்கொண்டு அவர் உருவாக்குகிற இறைச் சிற்பங்கள், உலகின் பெரும்பாலான மியூசியங்களில் இந்தியக் கலாசாரத்தின் சின்னங்களாக இருக்கின்றன. காஞ்சி சங்கர மடம் முதல் குஜராத்தில் உள்ள சுவாமி நாராயண் கோயில் வரை இந்தியாவெங்கும் உள்ள பெரும்பாலான கோயில்களின் உற்சவர்கள் தயாரானது, இந்த பெரியார் தொண்டரின் பட்டறையில்தான்.

பரம்பரை ஸ்தபதிகளே நிறைந்திருக்கும் சிற்பத் தொழிலுக்கு, தறி ஓட்டுபவரையும், விவசாயத் தொழிலாளரையும், செங்கல்சூளையில் வேலை செய்தவரையும் கொண்டுவந்து, ஒளிவுமறைவில்லாமல் முழுக் கலையையும் கற்பித்து தனி அடையாளங்கள்கொண்ட சிற்பிகளாக ராஜன் அவர்களை உருவாக்கியிருக்கிறார். ராஜனின் பட்டறையில் தொழில் பழகிய 216 சிற்பிகள் சுவாமிமலை மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளில் சோழர் காலத்துச் சின்னங்களான ஐம்பொன் சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், தலித்துகள். சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையே சமஸ்கிருதம்தான். ராஜன், அதைப் பயின்றிருக்கிறார். அவரது மாணவர்களுக்கும் பயிற்றுவித்திருக்கிறார்.

“நிறைய பேர் கேட்பாங்க... `கடவுளே இல்லைனு சொல்ற பெரியார் கட்சி ஆளு, ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?’னு. நான் எந்தத் தொழிலுக்குப் போயிருந்தாலும் பெரியார் தொண்டன்தான். ஐம்பொன் சிற்பம் செய்றது என்னோட தொழில்.  என் பார்வைக்கு இது, கலை வடிவான சிலை. இதை வாங்குறவர் கடவுளாகப் பார்க்கிறார். என் பட்டறையோட முகப்பிலேயே பெரியார், அம்பேத்கர் படங்களைப் பெருசா ஃபிரேம் பண்ணி மாட்டிவெச்சிருக்கேன். நாத்திகம் பேசித்தான் சிற்பத்தை வியாபாரம் பண்ணுவேன். ஆயுதபூஜை, தீபாவளியெல்லாம் எங்க பட்டறையில கொண்டாடுறதே இல்லை. பெரியார் பிறந்தநாள், அம்பேத்கர் பிறந்தநாள், மே தினம் இந்த மூணு நாளையும் ரொம்பவே சிறப்பா கொண்டாடுவோம். அன்னைக்கு எல்லாருக்கும் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நடக்கும். முக்கியமான ஆளுமைகள் வந்து, எங்க பிள்ளைகள் மத்தியில பேசுவாங்க. என்கிட்ட சிற்பம் கத்துக்கிட்டுப்போன 216 பிள்ளைகளும் அப்படித்தான் இருக்காங்க. அவங்க மூலமா உருவாகுற அடுத்த தலைமுறையும் அப்படித்தான் இருக்கும்” - புத்தனைச் செதுக்கியபடி புன்னகை மாறாமல் பேசுகிறார் ராஜன்.

உலகில் எந்த நாட்டில் கண்காட்சி நடந்தாலும் ராஜனையே பிரதிநிதியாக அனுப்புகிறது இந்திய அரசு. லண்டன், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி என உலகம் சுற்றுகிறார். வெளிநாடுகளுக்குப் போய் அங்கிருப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார். சிற்பத் திறனைப் பாராட்டிக் கிடைத்த விருதுகள், அங்கீகாரங்களை எல்லாம், `இது எனது தொழில்; நான் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை’ என்று புறம் தள்ளியிருக்கிறார். 
 
“நான் ஐம்பொன் சிற்பக் கலைஞனா ஆனது ஒரு விபத்து. எனக்கு லாடம் அடிக்கிற தொழில்ல நிறைய விருப்பம் உண்டு. முதல்ல அந்தத் தொழில்தான் செய்யணும்னு நினைச்சேன். ஆனா, அதை எனக்குக் கத்துக்கொடுக்க யாரும் தயாரா இல்லை. நான் சுவாமிமலைக்கு வந்ததுக்குப் பின்னால ஒரு கதை இருக்கு.

எங்களோடது ரொம்பவே செழிப்பான குடும்பம். அப்பா பெரிய விவசாயி. மொத்தம் 12 பிள்ளைங்க. நான் பதினோறாவது ஆளு. எல்லாப் பசங்களும் நல்லாப் படிச்சு பெரிய வேலைக்குப் போனாங்க. ஒருத்தன் பேராசிரியர். ஒருத்தன் பெல் நிறுவனத்துல பெரிய அதிகாரி... நானும் நல்லாப் படிக்கணும்னு வீட்டுல எதிர்பார்த்தாங்க. பி.யூ.சி இங்கிலீஷ் மீடியத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினேன். `இன்னும் ஒரு வருஷம் மட்டும் படிடா’னு சொன்னாங்க. ஆனா, அதுக்கு மேல எனக்குப் படிப்புல நாட்டம் இல்லை. எனக்குனு ஒரு வாழ்க்கை... மனசுக்குப் பிடிச்ச தொழில்னு தேட ஆரம்பிச்சுட்டேன். அந்த வயசுலயே, ரோட்டுல இருந்து எடுத்த தார்ல, களிமண்ணுல உருவங்கள் செஞ்சு ஸ்கூல்ல வைப்பேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick