அன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : எல்.ராஜேந்திரன்

நிறையத் தயக்கங்களுக்குப் பின் நினைவும் புனைவுமாக நான் எனது ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்த சமயம். என் வாழ்வின் வெவ்வேறு சம்பவங்கள் ஒரு மாயம் போல, தாமாகவே ஒன்றுக்கொன்று முடிச்சிட்டுக் கொண்டு துயர் பாதியும் கேலி பாதியுமாக ஒவ்வொரு வாரமும் கதைக் கட்டுரைகளாக நீண்டுகொண்டிருந்தன. தட்டச்சு செய்வது ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் மதியத்தில் ஆரம்பித்து நடு இரவு வரை நீளும். திங்கட்கிழமை `அந்திமழை’ இணைய இதழில் வெளிவரும்.
 
விகடனில் நாவலாசிரியர் இதயன்,  ‘மனைவியின் நண்பன்’ என்று  ஒரு தொடர் எழுதியிருந்தார். அந்தக் கதை நினைவில்லை. எப்போதுமே அந்தத் தலைப்பு என்னைத் தொந்தரவு செய்கிற தலைப்பு. அன்றும்  எனக்கு அந்தத் தலைப்பு நினைவில் வந்து சுற்றிக்கொண்டிருந்தது. எதிர் வீட்டில் குடியிருந்த அப்பாவின்  சினேகிதர் ஒருவரும், அவர் மனைவியும்  அப்பாவிடம் நிறையப் பிரியத்துடன் இருப்பார்கள். அவர்கள் மூவரையும் வைத்து என் நினைவுகளை  எழுத நினைத்து எழுதிக்கொண்டிருந்தேன். உண்மையில் என் முடிச்சில் நானே கழுத்தை மாட்டிக்கொண்டிருந்தேன். எழுத எழுத கத்தி மேல் நடப்பது போன்ற விஷயத்தை எழுதுகிறோம் என்று தோன்றியது. முதலில் எழுதியிருந்த ஒரு முடிவைச் சற்று மாற்றி இன்னொரு சம்பவத்தை இதற்குப் பொருத்தி முடித்திருந்தேன். ரொம்ப  இயல்பாக வந்த முடிவு. மெயில் அனுப்பிவிட்டுப் படுக்கும்போது  இரவு மணி ஒன்று.

அதிகாலையில் தொலைபேசி அழைத்தது. “வணக்கம் கோபால், நான் கல்யாணி அண்ணன் பேசறேன். நான் நாற்பது வருடமாக எழுதியதை, நீ ஒரே கதையில் காலிபண்ணிட்டே, எனக்கு வேற ஒண்ணும் சொல்லத் தெரியலைப்பா” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். தூக்கக் கலக்கத்தில் எது குறித்துச் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. நேத்து எழுதினதைப் படித்திருப்பாரோ என்று அவசர அவசரமாக இணையத்தைத் திறந்து பார்த்தேன். ஆம், கட்டுரையைப் பதிவேற்றி இருந்தார்கள். அவரின் வார்த்தைகளின் ரீங்காரம் அடங்கவில்லை. என்ன இது. அவரது கதைகள் எங்கே. இது எங்கே. மனம் சந்தோஷமடைந்தாலும், சமாதானம் ஆகவில்லை.  ஆனால், அவர் எப்போதும் அப்படித்தான். பாராட்டுவதென்றால் மனதாரப் பாராட்டிவிடுவார். சமயத்தில் வீடு தேடி வந்துகூடப் பாராட்டி இருக்கிறார். குறைகளை, ‘இப்படி இருந்தா, இன்னும் நல்லாருக்கும்’ என்கிற மாதிரி, சொல்லிவிடுவார்.  ஆனால் இப்படி உணர்வு மீதூற, ‘நான் அர்த்தப்படுத்திக்கொண்டதே, நான் சொன்னது’ என்ற பாணியில் சொன்னது இல்லை. காதில் அவரது வார்த்தைகள் ஒலிக்க, மனதில் முகம் நிழலாட, நினைவு பின்னோக்கிப் போனது. அவரது  ‘அன்பகம்’ வீட்டு மாடி, நினைவில் அதன் வளமையான வெளிச்சத்துடன் விரிந்தது. நான்கு ஐந்து சன்னல்கள், நடுவில் அகல ஊஞ்சல், அழகான பாவூர்ச் செங்கல் பாவிய  தரை என உயிர்ப்புடன் இருக்கும் விசாலமான மாடி.

அன்பகம் என்பது தி.க.சி தங்கள் வீட்டுக்கு வைத்த பெயர். உண்மையில் அது எவ்வளவு பொருத்தமான பெயர் என்பது அதனுடன் உறவுகொண்ட எல்லோருக்கும் தெரியும். நான் ஒரு முறை கி.ராஜநாரயணன் மாமாவைப் பார்க்கப் போயிருந்தபோது, புதிதாக வந்திருந்த அவரது புத்தகத்தைக் காண்பித்தார். ஒரு பிரதிதான் இருந்தது. மாமா சட்டென்று ஏதோ ‘ரோசனை’ வந்தவர் போல,  ‘அன்பகவாசிகளுக்கும் அதை நேசிக்கிறவர்களுக்கும்’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து,  ‘கல்யாணியிடமும் வாசிக்கக் கொடுத்திரு’ என்றார். அந்த மனுஷரை அப்படி எழுதவைத்தது அவர் கைகளைக் ‘குளுர’ப் பற்றியிருக்கும் அன்பகத்தின் அன்புக் கரங்களாகத்தான் இருக்கும்.

அந்த அன்பகத்தின் மாடி அலமாரிகளில் எல்லாம் புத்தகங்கள் பிதுங்கி விழப் போவது போல நிறைந்திருக்கும். அவ்வளவு புத்தகங்கள். மாக் மில்லன் கம்பெனியின் வெளியீடுகளான தாகூரின் மொத்தப் புத்தகங்கள். நவயுகப் பிரசுராலயம், சக்தி காரியாலயம், பேர்ல் பதிப்பகம், வாசகர் வட்டம், கோபுலுவின் அட்டைப் படங்களுடன் காண்டம் காண்டமாக கம்பராமாயணம், சோவியத் லிட்டரேச்சர், சைனீஸ் லிட்டரேச்சர், விகடன், குமுதம் தொடர்கதைகளின், சினிமாப் பாட்டுப் புத்தகங்களின் பைண்ட் வால்யூம்கள் என்று பிதுங்கி வழியும் பீரோவும் அலமாரிப் பலகைகளும். அவற்றில் கொஞ்சத்தையாவது படித்ததை வைத்துத்தான், இப்போது ஏதாவது ஜல்லி அடிக்க முடிகிறது. அவருக்கு அண்ணனும் எங்கள் இருவருக்குமே குருநாதருமான கணபதியும், கல்யாணி அண்ணனும் பிரமாதமான ஓவியர்கள். வண்ணதாசனை ஓவியராக அறிந்திருப்பார்கள். ஆனால், அவரை அப்படி உணர்ந்தது நானாகத்தான் இருக்கும். சன்னலுக்கு மேல் உள்ள சுவரில் கல்யாணி அண்ணன் பெரிய படங்களாக வரைந்து வைத்திருப்பார். பிளாக் இங்க் கேக்கைத் தொட்டு வரைந்த நடராசர் படம் அதில் ஒன்று. மேசையிலும் சிறிய ஸ்டூல்களிலும் ‘ரீவ்ஸ்’ (Reeves) இந்தியன் இங்க்  பாட்டில்களும், வெவ்வேறு அளவிலான பிரஷ்களும், ‘கிட்டார்’ (Guitar) வாட்டர் கலர் பாக்ஸும் கிடக்கும். எத்தனையோ இண்டியன் இங்க் இருந்தாலும் ரீவ்ஸ்தான் இருவருக்குமே பிடித்தமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick