இலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
2016-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு

மீபத்தில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பாப் இசைப் பாடகர், பாப் டிலனுக்கு அளிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

“பாப் டிலன் ஒரு பாப் இசைப் பாடகர் அவருக்கு கிராமி விருது வழங்கலாம்; ஆஸ்கார்கூட வழங்கலாம் (உண்மையில் பெர்னாட்ஷாவுக்கு அடுத்து ஆஸ்கார்மற்றும் நோபல் பரிசுகளை வாங்கியிருக்கும் இரண்டாவது நபர் பாப் டிலன்). ஆனால் நோபல்? அதுவும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு?” என்று கேள்விகளை எழுப்புகிறார்கள்.

ஆணையிட்டு எழுதப்படும் நமது திரைப்படப் பாடல்களையும், தன்னெழுச்சியாக எழுதி இசைக்கப்படும் மேற்கத்திய பாப் இசைப் பாடல்களையும் ஒரே தரத்தில் எண்ணுவது ஒரு பிழை எனில், மற்ற பாப் இசைப் பாடகர்களையும் பாப் டிலன், பிங்க் பிளாய்ட், ஜான் லென்னன், ஜோனி மிட்செல் போன்றவர்களையும் ஒரே இனத்தில் சேர்ப்பது இன்னொரு பிழை. முதலில் பாப் டிலனுக்காக, நோபல் கமிட்டி கழுத்தை நீட்டியிருப்பதின் பின்னணி பற்றி புரிந்துகொள்ள வேண்டும். சிரியக் கவி அடோனிஸ், பிலிப் ரோத், ஹாருகி முரகாமி போன்றவர்களைத் தாண்டி ஒரு பாடலாசிரியருக்கு ஏன் நோபல் கொடுக்கப்பட்டிருக்கிறது?

அதற்குள் போவதற்கு முன்னால், மரபாக ‘இலக்கியம்’ என்றழைக்கப்படும் கூடுகளிடம் இருந்து நோபல் பரிசுக் குழுவின் இலக்கியத்துக்கான வரையறைகள், விலகுவது இது முதன்முறை அல்ல. 1953-ம் ஆண்டில் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இரண்டாம்உலகப்போரின்
போது அவர் ஆற்றிய எழுச்சி உரைகளுக்காகவும் ‘திரளும் புயல்’ என்று அவர் இரண்டாம் உலகப்போர் உருவான காலகட்டத்தைப் பற்றி எழுதிய குறிப்புகளுக்காகவும் நோபல் வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரைப் பற்றியும் ஜெர்மனியில் நாசிசத்தின் எழுச்சி மற்றும் வீழ்தல் பற்றியும் அறிந்துகொள்ள இது ஒரு முக்கியமான ஆவணமாக இன்றும் நிலவுகிறது. கடந்த ஆண்டு இந்தப் பரிசு பெலாரசைச் சேர்ந்த ‘ஸ்வெட்லானா  அலெக்ஸ்சாண்டிராவினோ அலெக்சுவிட்ச்’ என்ற பெண் பத்திரிகையாளருக்கு வழங்கப்
பட்டது. இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்ற சோவியத் பெண்களைப் பற்றிய அவரது ‘போரின் பெண்மையற்ற முகங்கள்’ புத்தகம் ஒரு முக்கிய நூலாகும். இவருக்கும் சர்ச்சிலுக்கும் வழங்கப்பட்ட நோபல் பரிசு, இவர்களது போர் பற்றிய சித்திரங்களுக்காக என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், பாப் டிலனுக்கும் இதே காரணத்துக்காகத்தான் இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

அன்றைய ரஷ்யாவில், அவ்வப்போது நிகழும் யூத இன ஒழிப்புக் கலவரங்களில் இருந்து தப்பித்து, அமெரிக்காவுக்கு ஓடிவந்த குடியேறித் தம்பதிகளுக்கு மகனாக, 1941-ம் ஆண்டு பிறந்தார் பாப் டிலன். ‘இந்த இரவுக்குள் மென்மையாகச் சென்றுவிடாதே, ஒளியின் மரணத்துக்கு எதிராகச் சீற்றமுறு’ என்பன போன்ற அழியா வரிகளை எழுதிய கவி, ‘டிலன் தாமஸின்’ மீது இருந்த வியப்பில்  ‘ராபர்ட் ஆலன் ஜிம்மர்மேன்’ என்ற தனது இயற்பெயரை மாற்றி ‘பாப் டிலன்’ என்று சூட்டிக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick