கல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன் | M S subbulakshmi - Vikatan Thadam | விகடன் தடம்

கல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : கே.ராஜசேகரன்

`பல ஆண்டுகளுக்கு முன்பு வானொலி நிலையத்தில் என் பெயர் கொண்ட இன்ஜினீயர் ஒருவர் இயந்திரங்களின் உதவியுடன் ஓர் ஆராய்ச்சி நடத்தினார்.

இம்மியளவும் ஆதார சுருதியினின்றும் பிறழாத சாரீரங்களில் எம்.எஸ்-ஸின் சாரீரம் தலைசிறந்தது என்று நிரூபித்தார். இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும்.

கச்சேரியின் தொடக்கத்திலிருந்து மங்களம் வரை, துளிக்கூட – ஒரு விநாடிகூட –சுருதியைவிட்டு விலகாமல் சாரீரம் நிலைத்து நிற்பது துர்லபம். தேகத்திலும் சாரீரத்திலும் ஏற்படும் உஷ்ணத்தினால் சாரீரம் சுருதியைவிட, ஓரளவு மேலே ஒலிக்கும். வேறு சிலருக்குப் பாடப் பாடக் களைப்புத்தட்டி, சுருதியை விட்டு விலகும்.

எம்.எஸ்-ஸுக்கு இந்தக் குறை சற்றுக்கூடக் கிடையாது. இரண்டு தம்பூராக்களை `தைரியமாய்’ வைத்துக்கொண்டு, அப்படியே ஆதார சுருதியில் மிதக்கக்கூடிய ஆற்றல் அன்னாருக்கு உண்டு.

சங்கீதத்திற்கே அடிப்படையான சுருதி லாகவமாக அமைந்துவிட்ட பின்பு, அவருடைய சங்கீதம் இளமை குன்றாது – அன்று முதல் இன்று வரை – சோபையுடன் விளங்குவதில் ஆச்சர்யமில்லை அல்லவா!’

- சுப்புடு (சாரதி எழுதிய ‘இசை உலகின் இமயம் எம்.எஸ்’ நூலின் அணிந்துரையில் இருந்து… வெளியீடு: வானதி பதிப்பகம்)என் பாட்டியிடம் ஐந்து தம்புராக்கள் இருந்தன. எல்லாமே பாட்டியின் சுருதிக்கு ஏற்ப ட்யூன் செய்யப்பட்டவை. அவற்றில் இரண்டு தம்புராக்கள்தான் முதலில் பாட்டியிடம் வந்தவை… 1940-ம் ஆண்டு இசைமேதை செம்மங்குடி சீனிவாச ஐயரால் பரிசாக வழங்கப்பட்டவை. அவரே இரண்டுக்கும் ‘சரஸ்வதி’, ‘லஷ்மி’ எனப் பெயரும் சூட்டியிருந்தார். அவற்றைத்தான் அதிகம் பயன்படுத்துவார் பாட்டி.

1963-ம் ஆண்டில் எடின்பரோவில் நடந்த சர்வதேச இசைவிழாவில் பாடினார்; 1966-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாடினார்; 1982-ம் ஆண்டு லண்டன் ஆல்பர்ட் ஹாலில் இசை பொழிந்தார்; 1987-ம் ஆண்டு இந்திய இசைவிழா மாஸ்கோவில் நடந்தபோது, அங்கேயும் பங்கேற்றார். 1977-ம் ஆண்டில் அமெரிக்காவில் வரலாற்றுப் பிரபலமான கார்னெகி ஹாலில் அவர் இசை நிகழ்ச்சி நடத்தியபோது, `சரஸ்வதி’, ‘லஷ்மி’ இரண்டு தம்புராக்களையும் கொண்டு சென்றார். இப்போதும் இவை பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையில் நன்றாக இருக்கின்றன.

இவை தவிர, பாட்டியிடம் இருந்த முக்கியமானவை மீரஜ் தம்புராக்கள். ஒன்று, நான்கு கம்பிகள் கொண்ட தம்புரா. அதை `மீரா பஜன்ஸ்’ பாடுவதற்குப் பயன்படுத்தினார் பாட்டி. இன்னொன்று, அரிதான ஆறு கம்பிகள் கொண்ட மீரஜ் தம்புரா. அது, நடனக்கலைஞர் பால சரஸ்வதியின் குடும்பத்தாரால் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. `விஷ்ணு சகஸ்ரநாமம்’ பாடுவதற்கு அதைத்தான் அவர் பயன்படுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick