“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : ப.சரவணகுமார்

“சுயம்புவப் பத்திச் சொல்றதுக்கு என்ன இருக்கு..? பிழைக்கத் தெரியாத பனங்காட்டுப் பெறப்பு. எதுவும் அவ்வளவு லேசா மண்டையில ஏறாது. சப்பாணிப் பய... குழந்தையில இருந்தே அவன் சீக்காளி. இப்போ, ரொம்ப வீக்காயிட்டான். இருதயமும் வீக்காயிருச்சு. வைத்தியம் பண்ணி மருந்து, மாத்திரை திங்கலாம்னா, டெஸ்ட் பண்ணக்கூட உடம்பு தாக்காதுங்கான் டாக்டர்...”

அவஸ்தைகளை மறைத்து, குழந்தையைப்போல குலுங்கிச் சிரிக்கிறார் மு.சுயம்புலிங்கம். கரிசக்காட்டுப் படைப்பாளி. எளிய மொழியில் விளிம்பு மனிதர்களின் வெள்ளந்தி வாழ்க்கையை பதிவு செய்தவர். `நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்’ கவிதைத் தொகுப்பும், `ஒரு பனங்காட்டுக் கிராமம்’ சிறுகதைத் தொகுப்பும் சுயம்புலிங்கத்தை இலக்கிய தளத்தில் ஆழப் பதிவுசெய்தவை. 28 சிறுகதைகள் அடங்கிய `நீர்மாலை’ சிறுகதைத் தொகுப்பு வெளியாக இருக்கிறது. பனங்காட்டு வாழ்க்கையின் வெம்மை தாங்காமல் சென்னைக்குப் பெயர்ந்து, பலசரக்குக் கடை தொடங்கி, சைக்கிளில் கருப்பட்டி கடலைமிட்டாய் விற்றது வரை வெம்பாடுபட்ட சுயம்புலிங்கம், எல்லா தருணங்களிலும் எழுத்தை தவம்போலச் சுமந்து திரிந்தவர். பெருங்களத்தூரின் ஓர் ஒதுக்குப்புறத் தெருவில், இடுப்பில் கட்டிய மேல்துண்டோடு, எனக்குக் கதவு திறந்தார் சுயம்புலிங்கம்.

“நான் பெறந்த ஊரு வேப்பலோடை. தூத்துக்குடிக்குப் பக்கத்துல சுத்திலும் பனங்காடு சூழ இருக்கு. என்னைப் பெத்த அம்மையும் அய்யாவும் ரொம்ப அருமையான ஆளுக்க. எங்க அய்யா பேரு முனியசாமி. தலைச்சுமை யாவாரி. கருப்பட்டி சீஸன்ல கருப்பட்டியும், கருவாடு சீசன்ல கருவாடும் சுமந்துபோயி சுத்துப்பட்டு கிராமங்கள்ல கூவி வித்துட்டு வருவாரு. ரொம்பச் சின்ன யாவாரம். பெருசா அவருக்குக் கை கொடுக்கலே. கொஞ்ச நாளு, உப்பளத்துல அத்தக்கூலியா வேலைக்குப் போனாரு. கடைசிக் காலத்துலயும், எங்க அம்மைகூடப் பொறந்த தம்பி வீட்டுல சோறு பொங்கிக் கொடுத்துக்கிட்டு இருந்தாரு.

எங்க அம்மை, எப்பவும் ரெண்டாளு வேலை பார்ப்பா. காட்டு வேலை, வீட்டு வேலைனு சாகுற வரைக்கும் ஓய்வே இல்லாம உழைச்சுக் கொட்டுனா. அம்மை பேரு, பெரிய பிராட்டி. ஆளு கல்லு மாதிரி... கஷ்டத்தைத் தாங்கித் தாங்கி காய்ச்சுப்போன சாமி. மொத்தம் எங்க அம்மை பெத்தது ஒம்போது பிள்ளை. முதல்ல பெறந்த ஆறு புள்ளைவளும் அடுத்தடுத்து செத்துப்போச்சு. எல்லாத்துக்கும் பத்து வயசு, பதினோரு வயசு... ஒரு பையன் செத்து, சுடுகாட்டுல புதைச்சுட்டு வீட்டுக்கு வந்தா, இன்னொரு பொண்ணு செத்துக்கிடப்பாளாம்... இப்படிப் பாவப்பட்ட கதை எங்க அம்மையோடது. எல்லாத்தையும் சகிச்சுட்டுத்தான் எங்களையும் பெத்தெடுத்தா. எனக்கு முந்தி ஒரு அக்கா, எனக்குப் பிந்தி ஒரு தங்கை. அக்காவும் தங்கையும் அம்மைக்கு இணையான உழைப்பாளிங்க.

நான்தான் கள்ளன். ஒரு வேலையும் செய்ய மாட்டேன். நோஞ்சான் கணக்காத் திரிவேன். படிப்பே வராது. ஒண்ணாப்புல ரெண்டு வருஷம், ஆறாப்புல ரெண்டு வருஷம் படிச்சேன். ரெண்டு முறை தேர்வு எழுதித்தான் பத்தாப்பு தேறுனேன். அம்மைக்கு ரொம்பவே ஆசை... “நீ பத்தாப்பு வரைக்கும் வந்துட்டே... அப்படியே வாத்தியாரு வேலைக்குப் படிச்சிரு. ஒரு வாத்தியாரு பொண்ணை கட்டிவச்சுர்றேன்”னு ரொம்ப அருமையாச் சொன்னா. ஆனா, எம் மண்டைக்குத்தான் எதுவுமே சரியா ஏறலே. எல்லா சர்ட்டிஃபிகேட்டையும் தீயைவெச்சுக் கொளுத்திட்டு, மதுரையில இருந்த ஒரு பலசரக்குக் கடையில வேலைக்குச் சேந்துட்டேன். அன்னைக்கு ஆரம்பிச்சதுதான் இந்த ஓட்டம். எங்கேயும் நாலைஞ்சு மாசத்துக்கு மேல தங்குறதில்லை. ஒரு வேலையை ஒழுங்காக் கத்துக்கலே. அப்பாவப்போலவே எனக்கும் யாவாரம் சரியா வரலே. விவசாயம் பண்ணாலும் நட்டம்தான் வருது. ஒரு கடை கண்ணியில போய் வேலை செஞ்சாலும் உடம்பு வணங்க மாட்டேங்கு. அம்மையும் அய்யாவும் கடுங்கஷ்டப்பட்டு சேத்துவெச்ச வயக்காட்டை வித்தேன். புஞ்சைக் காட்டை வித்தேன். இருக்கிற நகையெல்லாம் வித்தேன். இருந்த வீட்டையும் வித்தேன்... இருந்ததையெல்லாம் வித்து வித்துதான், சுயம்பு காலத்தைத் தள்ளியிருக்கான்.

சென்னைக்கு வந்து முப்பத்தொம்போது வருஷமாச்சு. எங்க பெரியம்மை மக பொட்டுக்கடை (மாட்டுத் தீவனக் கடை) வச்சிருந்தா. அவாதான் எனக்கு நெடுங்காலம் சோறு போட்டா. நல்லது கெட்டதெல்லாம் கத்துத்தந்தா. ஆனா, எதுவும் எம் மண்டைக்கு ஏறலே. முட்டாய் கடை வச்சேன். ஜவுளிக்கடையில வேலை பார்த்தேன். எல்லாப் பாடும் பட்டாச்சு.

எங்கூர்ல ஆத்தியப்பன்னு ஒருத்தன் இருந்தான். கூடப் படிச்ச ஆளு. நல்லா வரைவான். எழுதவும் செய்வான். ஆயன்னு பேரை மாத்திவெச்சுக்கிட்டான். அவன் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்துனான். ஒரு நாளு அதைக் கையில குடுத்து, `இதுக்குஒரு கவிதை எழுதித் தாடா’னு கேட்டான். யோசிச்சு யோசிச்சு ஒண்ணு எழுதிக் கொடுத்தேன். அதை அந்தப் பத்திரிகையில போட்டான். அதோட அம்புட்டுதான், நம்ப எழுத்து. பிழைப்பே தவிப்பாக் கிடக்கும்போது எழுத்து எங்கேயிருந்து வரும்..?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick