“சினிமா கற்றுத்தர ஆள் இல்லை!” - அருண்

சந்திப்பு: பாலு சத்யா - படங்கள் : ஆ.முத்துக்குமார்

மிழில் சினிமா குறித்த புத்தகங்களும் பத்திரிகைகளும் விவாதங்களும் உரையாடல்களும் தொடர்ந்தபடி இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒன்றிணைக்கின்ற ஒரு மையம் என்பது இங்கு இல்லை. அதோடு, சினிமாவை அதன் தொழில்நுட்பங்களோடு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களோ, முறையாக அறிமுகப்படுத்தும் குறிப்பிடத்தக்க கல்விக்கூடங்களோ நம்மிடம் இல்லை. அதற்கான தேவை இன்று அதிகமாகியிருக்கிறது. நல்ல சினிமாவை நாம் உருவாக்காவிட்டாலும், நல்ல சினிமாவைக் கண்டுகொள்ள மக்களிடம் அதை எடுத்துச்செல்ல யாராவது வேலைசெய்யவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் முழுக்க முழுக்க சினிமாவுக்கெனவே உருவாகியிருக்கிறது ஒரு புத்தகக் கடை... ‘ப்யூர் சினிமா’.

சென்னை, வடபழனியில் ஓர் அடுக்குமாடி வளாகத்தில், இரண்டாவது மாடியில் அமைந்திருக்கிறது ‘ப்யூர் சினிமா’. ‘தமிழ் ஸ்டுடியோ’ அருணும் அவர் நண்பரும் இணைந்து இந்தக் கடையை ஆரம்பித்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படங்கள் (டிவிடி) நம்மை வரவேற்கின்றன. உள்ளே நுழைந்து சுற்றிப் பார்த்தால், தமிழில் ஒவ்வொருவரும் சினிமா தொடர்பாக படிக்கவேண்டிய நிறைய புத்தகங்கள்... ஜமாலன் எழுதிய ‘கிம்-கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்’, யமுனா ராஜேந்திரன் எழுதிய ‘உத்தம வில்லன்’, கான்ஸ்தன்தீன் ஸ்தனீஸ்லாவ்ஸ்கி எழுதிய ‘ஒரு நடிகர் உருவாகிறார்’... `காட்ஃபாதர்’ திரைக்கதை, என அசரவைக்கின்றன புத்தகங்கள்.

அருண், லண்டனில் சினிமா கோர்ஸ் படித்தவர். சினிமாவின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக, தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு, `தமிழ் ஸ்டுடியோ’ என்கிற அமைப்பை ஆரம்பித்து நடத்திவருபவர். கருத்தரங்குகள், இணைய இதழ், பத்திரிகை எனத் தொடர்ந்து சினிமா சார்ந்து இயங்கிவருபவர். அருணுடன் உரையாடியதிலிருந்து...

``இப்படி ஒரு புத்தகக் கடையை ஆரம்பிக்கக் காரணம் என்ன?’’

``Film appreciationதான் முக்கியக் காரணம். சினிமாவில் ஒரு காட்சியை எப்படி அணுகுறது, விஷுவல்ஸை எப்படி உள்வாங்கிக்கிறது, ஒரு கதையை சினிமாவாக நாம் எப்படி புரிஞ்சிக்கிறோம்கிறதெல்லாம் ரொம்ப முக்கியம். இந்தக் கடைக்குள்ள நுழையுற ஒரு பார்வையாளருக்குப் படத்தை எப்படி பார்க்கணும்னு பயிற்சியளிக்கவேண்டியிருக்கு. அதுக்கு உதவறதுக்கு நிறையப் புத்தகங்களும் இங்கே இருக்கு. அம்ஷன் குமாரோட ‘சினிமா ரசனை’, ஒரு படத்தைப் பார்க்கறதுக்கு பார்வையாளனுக்கு ரொம்ப உதவும். அதுக்கு முன்னாடி சினிமாவின் வரலாறு தெரிஞ்சிருக்கணும். சினிமா வரலாறைத் தெரிஞ்சுகிட்டா, நீங்க Film appreciationக்குள்ள போயிடலாம். தியடோர் பாஸ்கரனின் ‘பாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம்’ தமிழ் சினிமாவின் வரலாறை நுட்பமான முறையில் அறிமுகப்படுத்தும் புத்தகம். இது மாதிரி ஒரு ‘தமிழ் சினிமா ரசிகன்’ முதல்ல படிக்கவேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கு. அதையெல்லாம் படிச்சதுக்குப் பிறகு சினிமா தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்ள உதவும் புத்தகங்களைப் படிக்கலாம். ஸ்கிரிப்ட், நடிப்பு, எடிட்டிங், ஒளிப்பதிவுனு எல்லாத்துக்கும் புத்தகங்கள் இருக்கு. தொழில்நுட்பங்களுக்காகவே நிறையப் புத்தகங்களை வெளியிடப்போறோம். எங்களோட நோக்கம், வர்றவங்களை நிறையப் படிக்கவைக்கிறது... திரைப்பட ஆக்கத்துல இருக்குறவங்களுக்கு நிறைய கத்துக்குடுக்கிறது. இந்தியாவிலேயே இதுதான் சினிமாவுக்காக இருக்கிற ஒரே கடை. இதை ஓர் இயக்கமா நடத்துறோம். எங்களோட ‘தமிழ் ஸ்டுடியோ’ மாற்று சினிமாவுக்கான ஓர் இயக்கம். அதனோட ஒரு பகுதிதான் இந்த ‘ப்யூர் சினிமா’.’’

``தமிழில் சினிமா சம்பந்தமாக, குறிப்பாக தொழில்நுட்பம் தொடர்பான புத்தகங்கள் போதுமான அளவில் இல்லை என்கிறீர்கள். பிறகு தமிழ் சினிமாவுக்காக ஒரு புத்தகக் கடை எப்படி சாத்தியம்?’’

``அதேதான். புத்தகங்கள் இல்லைங்கறதாலதான் ஆரம்பிச்சோம். இப்படி ஒரு கடை இருந்தாத்தான் அதற்கான வெளி கிடைக்கும். ஆட்கள் வர வர, புத்தகங்களின் வரத்தும் அதிகமாகும். சினிமா தொடர்பாகப் படிக்கவும் கத்துக்கவும் விவாதிக்கவும் ஓர் இடம் கிடைக்கும்.’’

``இப்படி நல்ல நோக்கத்தோட நடத்தப்படும் புத்தகக் கடையில் ‘கிசுகிசு’ மாதிரியான புத்தகங்களும் வைத்திருக்கிறீர்களே... அவசியம்தானா?’’

``அது எதுக்குன்னா, ஆவணப்படுத்துவதற்கு (Documentation). எவ்வளவு மோசமான படமாக இருந்தாலும், அதை சேமிச்சுவைக்கணும்கிறது ஆவணப்படுத்துதலின் அடிப்படை விதி. இப்படி ஒரு படம் வந்ததுனு அடுத்த தலைமுறைக்குச் சொல்லவேண்டிய கடமை இருக்கு. `கிசுகிசு’ மாதிரியான புத்தகத்தை ஏன் வெச்சிருக்கோம்னா, வர்ற பார்வையாளருக்கு நாம போதனை (Preach) பண்ணக் கூடாது. அவங்களை யோசிக்கவைக்கிறதுக்கான சில வேலைகளைச் செய்யணும். அதாவது, `இந்தப் புத்தகங்களை எல்லாம் நீங்க படிங்க. ஆனா,  இது எந்த அளவுக்கு  முக்கியமானதுனு மறுபரீசிலனை பண்ணுங்க’னு சொல்லாம சொல்றது. உள்ள வந்ததுக்கு அப்புறம் அவங்களுக்கு வேற மாதிரி பயிற்சி குடுத்துடலாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick