ஆழ்தொலைவின் பேய்மை - அனார்

ஓவியம் : டிராட்ஸ்கி மருது

வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றமாக இருக்கிறேன்

மேகப்படைகள்
மழையை விரித்துக்கொண்டும்
சுருட்டிக்கொண்டும் இருந்தவேளை
மின்வெட்டாக…

சாம்பல் அந்திகளில் கரைந்தபடி
குறுக்குமறுக்காகப் பறக்கும்
ஒற்றைக் காகத்தின் பரிதவிப்பாக

இரு மலை உச்சிகளின் நடுவே
விழும் பெருநீர்ப்பரப்பின் ஜொலிஜொலிப்பு
குறைவான அமிர்தத்தின் குடுவை
கணத்தில் காணும் விபத்து

மரணத்தைக்கொண்டு நினைவூட்டும் அச்சம்

மிளகுக்கொடியின் அருகே பிறந்த
மலைப் பூனையின் வாசம்

பொங்கிவரும் நுரைத்துளிகளைக்
காய்ந்துறையச் செய்யும்
நினைவுகளின் வறண்ட பள்ளங்களில்
தேங்கிய கானல்

மலையைச் சுற்றிப்போகும் குளம்
ஆழ்தொலைவில்
பேய்த்தனமாய்ச் சிவந்து நீர்ச்சுடர்கள்
மினுங்கும்
நீயொரு மாறுதலற்ற நிழல்   
நான் பகலை முந்திச் செல்லும் இரவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick