ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்

ஓவியங்கள் : டிராட்ஸ்கி மருது

2002.06.3

விசுவமடு, சோதியா படையணி முகாம்.

அக்காக்கள் அந்தப் பெரிய பள்ளத்தை நிரவிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி இருந்தாள் கெளஷல்யா. அவள் கையில் ஒரு குதிரை பொம்மை இருந்தது. தனிமையில் இருக்கும்போது அப்பொம்மையை வைத்தே விளயாடிக்கொண்டிருப்பாள். மாலதியக்கா இருக்கச் சொன்ன தென்னங்குற்றியில் கால்களைக் காற்றில் உலவவிட்டபடி கையில் குதிரை பொம்மையுடன், துர்க்கா அக்கா கொடுத்த கண்டோசைக் கடித்துக்கொண்டிருந்த கெளஷல்யாவைப் பற்றித்தான்  கிடங்கை  மூடிக்கொண்டிருக்கும் பெண் போராளிகளும் பேசிக்கொண்டிருந்தனர்.

“கெளசின்ர அப்பா நேற்றும் தாய்க்கு அடிச்சுப் போட்டாராமடி.”

“அந்தாள விதுசாக்காட்ட சொல்லி ஒருக்கா கூப்பிட்டு வொன் பண்ணிவிடோணும்.”

“கெளசி அழுதவளோ?”

“ஓம். பாவம் அவள் சின்னப்பிள்ளை. இஞ்சதான் ஓடி வந்தவள்.”

“பிறகு?”

நாங்கள் ஓடிப்போனம், அந்தாள் தூசணத்தால கெளசின்ர அம்மாவைப் பேசிக்கொண்டு  நிண்டது,  எங்களக் கண்டதும் ஆள் கப்சிப்பா வீட்டுக்கு பின்னால போட்டுது.’’

“பாவம் அவா.”

 “ஏன் சண்டையாம்?”

“கெளசிய ஏன் எங்கட பேசுக்கு விட்டதெண்டு கேட்டு அடிச்சவராம்.”

“அந்தாளுக்கு குடிச்சிச்சிட்டு மனிசிய அடிக்க ஒரு காரணம் தேவையடி துர்க்கா.”

கெளசியை எல்லோரும் பார்த்தனர், அவள் அவர்களைப் பார்த்து கண்ணை சிமிட்டிச் சிரித்தாள். அவளுடைய வட்ட முகம் அவள் அணிந்திருந்த பாவாடை சட்டையில் ஆங்காங்கே மின்னிய சிக்குவின்ஸ்களைப்போல பளிச்சிட்டது. எல்லாப் பாவத்தையும் கழுவிவிடும் ஒரு புன்னகை அவளிடமிருந்ததை அவர்கள் உணர்ந்தனர். ஆனால், யோகேந்திரநாதனுக்குத் தன்னுடைய குழந்தையின் தேவதைத் தன்மைகள் தெரிந்ததேயில்லை.

கெளஷல்யா பற்றி வீரவேங்கை நிலவழகி எழுதிய டயரிக்குறிப்பு:


யோகேந்திரநாதன் நெடுந்தீவில் இருந்து பஞ்சம் பிழைக்க தந்தையோடும் தாயோடும் விசுவமடுவில் குடியேறியவர். தன்னுடைய 20-வது வயதில் தந்தையின் வெற்றிலைக் கடையைப் பொறுப்பேற்றார். மேரி செபஸ்ரினாவை காதலித்து திருமணம் செய்தபோது அவருக்கு வயது 25. செபஸ்ரினா கொழும்பைச் சேர்ந்த இலங்கை பறங்கிய இனத்துப்பெண். நன்றாகத் தமிழ் கதைப்பாள். கொழும்பில் உறவினர் வீட்டுக்குப்போன இடத்தில் அவள் மீது காதல் கொண்டு அவளைக் கல்யாணம் செய்து அவளோடு அங்கேயே இருந்துவிட்டார். அங்கே பிறந்தவள்தான் கெளஷல்யா. தன்னுடைய பேர்த் சேட்டிபிக்கட்  இங்கிலீசில் இருப்பதாய் தன்னுடைய பள்ளிக்கூடத் தோழிகளுக்கும், பேசில் பெண் போராளிகளுக்கும் சொல்லி அவள் புளகாங்கிதம் அடைவதுண்டு. கெளஷல்யா  ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு வன்னிக்கான பாதை திறக்க, யோகேந்திரநாதன் விசுவமடுவிற்குத் திரும்பி மறுபடியும் தன்னுடைய வெற்றிலைக் கடையை ஆரம்பித்தார்.

அவர் திடீரென்று விசுவமடுவிற்குத் திரும்பியது ஏன் என்று செபஸ்ரினா கேட்கவில்லை. இராமன் இருக்கும் இடம்தானே சீதைக்கு அயோத்தியென்று வாழும் பெண்களில் ஒருத்தியாக இருந்தாள் அவள்.  அவர்களுடைய வீட்டிற்கு அருகில் எங்களுடைய சோதியா படையணியின் முகாம் இருந்தது. விதுசாக்காவின் பொறுப்பில் 60 பெண் போராளிகள் இருந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick