கதைகளின் கதை - வவுச்சரின் வரலாறு - சு.வெங்கடேசன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

சென்னைக் கோட்டைக்கு தினமும் கோரிக்கை மனுவோடு நூற்றுக்கணக்கானோர் வந்து குவிகின்றனர். விதவிதமான கோரிக்கைகள், விதவிதமான எதிர்பார்ப்புகள். அது ஆள்வோர்களால் தீர்த்துவைக்கப்படும் என்ற நம்பிக்கை. கோட்டையின் ஓரம் இருக்கும் புங்கமர நிழலில், கலங்கிய கண்களோடு மக்கள் காலங்காலமாகக் காத்திருக்கின்றனர். எவ்வளவு கசப்பான அனுபவம் ஏற்பட்டாலும், நம்ப ஆரம்பித்த ஒன்றின் மீதான நம்பிக்கையைக் கைவிடுவது அவ்வளவு சுலபம் அல்ல.

`சரி, சென்னைக்கு வந்து மனுகொடுக்கும் பழக்கம் எப்பொழுது ஆரம்பித்தது... முதன்முதலில் அதைத் தொடங்கிவைத்தது யார்... அது என்ன கோரிக்கையாக இருந்திருக்கும்?’ என்று கேள்வி எழுப்பினால், வென்றவர்களை, வீழ்ந்தவர்கள் நம்ப ஆரம்பித்த துரதிர்ஷ்டமான தொடக்கக் காலத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ளலாம்.

வந்தவாசி பாளையக்காரன்,  பிரிட்டிஷ்காரர்கள் கோட்டை கட்டுவதற்காக, 5 கி.மீ நீளமும், 2 கி.மீ அகலமும்கொண்ட இடத்தை  இரண்டு ஆண்டு காலம் பயன்படுத்திக்கொள்ள தானப்பத்திரம் எழுதிக் கொடுத்தபோது, நிலத்தின் சமநிலையில் மாற்றங்களுக்கான அறிகுறிகள் தொடங்கின. கிழக்கிந்திய கம்பெனியின் ‘ஃபிரான்சிஸ் டே’ (Francis Day) நவீன அகத்தியனாக தானம் பெற்ற நிலத்தில் வந்து நின்றதும், தமிழ் நிலத்தின் வடகிழக்கு முனை அழுத்தம் தாளாமல் கீழிறங்கத் தொடங்கியது. அது வரையில் தென் பகுதியிலும் மத்தியப் பகுதியிலும் இருந்த அதிகார மையங்கள் அனைத்தும் தானபூமியை நோக்கி, தானே சரிந்து வந்து விழுந்தன.

சங்க காலந்தொட்டு தமிழ்நிலத்தில் வணிகத்துக்கும் பயணத்துக்குமான எண்ணற்ற பெருவழிகள் இருந்ததை வரலாறு நெடுகிலும் பார்க்கலாம். அதியமான் பெருவழி, கொற்கைப் பெருவழி, பட்டினப் பெருவழி, தஞ்சாவூர் பெருவழி, ராஜகேசரிப் பெருவழி, கொங்குப் பெருவழி என எண்ணற்றப் பெருவழிகள், தமிழகத்தின் நகரங்களைப் பிற பகுதிகளோடு இணைத்தன. ஆனால், வரலாற்றில் இதுநாள் வரை இல்லாத ஒரு திசைவழி நோக்கி புதிதாக ஒரு பெருவழி அமைக்கப்பட்டது. அதுதான் தெற்கு மற்றும் மேற்குத் திசையில் இருந்து சென்னையை நோக்கி நீண்ட பெருவழி.

இப்பெருவழி அமைக்கப்பட்டு சில பத்தாண்டுகளில் உப்பிப் பெருகியது சென்னை. சென்னை நோக்கிய அந்தப் புதிய வழியில் முதலில் படைப் பிரிவுகளும், ராணுவத் தளவாடங்களும்தான் நகர்ந்தபடி இருந்தன. அதனைத் தொடர்ந்து வணிகத்துக்கான சாலை வழியாக அது மாற்றம் அடைந்தது. பாம்பின் கிளை பிரிந்த நீள்நாக்குபோல தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்குத் திசைநோக்கி நீண்ட இந்தச் சாலைகள் எல்லா வளங்களை சென்னையை நோக்கி இழுத்துக்கொண்டன. வளத்தின் பின்னே வாழ்வைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக நகரத் தொடங்கினர். நகரத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை கணக்கின்றிப்பெருகியது. வண்டிச் சாலைகளுக்குத் துணையாக ரயில் தண்டவாளங்களும் அமைக்கப்பட்டன. எழும்பூரிலும் சென்ட்ரலிலும் புகைவண்டிகள் வந்து முட்டி நிற்க, ஜனக்காடு இறங்கி கோட்டை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick