அவள் - ஆதிரன்

ஓவியம் : எஸ்.அய்யப்பன்

னது மார்புகளுடனான உறவைத் துண்டித்துக்கொண்டாள்

அவன் நுழையும்போது வாதாம் மரத்தில் செவ்வரளி
பூப்பதுபோன்ற கனவைக் காண்கிறாள்
நிலத்தடி நீரில் கூடிப்போன உப்பைக்கொண்டு
வனைகிறாள் ஒரு கப்பலை. அயர்ந்தெழும்
அவனது காதுகளில் சொல்கிறாள்:
அன்பே... உப்பாலான கப்பல் நீ… நானோ நன்னீர்க் கடல்.

தனது கண்களுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டாள்

நல்மனம் அவளுக்கு
அவளது வனாந்திரத்தில் வேறு ஒலிகள் இல்லை
தனது வெளிச்சத்தை சாவிதுவாரம் வழியாக அனுப்புகிறாள்
குளிரூட்டப்பட்ட அறையில் தனது நாற்காலிக்கு
முத்தமிடுகிறான் அவன்.
அவனது செவியில் கேட்கும் வண்ணம் சொல்கிறாள்:
அன்பே… நிலைகுத்திய பார்வை நீ… நானோ வெளிச்சத்தின் தசை.

தனது கூந்தலுடனான உறவைத் துண்டித்துக்கொள்கிறாள்

நீராடல். அவளுக்குக் குளியலறை அவனுக்கு மதுவறை
அவளுக்கும் நொதி மணம். மயிர்நுனியில் திரள்கிறது
மடுவின் காம்பென நீர். அவள் நினைத்துக்கொள்கிறாள்:
அன்பே… நீ ஒரு மட்டமான குடிகாரன்… நானோ வீணாய்ப்போன மது.

அவள் தனது உடலுடனான உறவைத் துண்டித்துக்கொள்கிறாள்

அன்பே… உனது சாவியைப் பத்திரப்படுத்து… ஏனென்றால்

நான் பூட்டைத் தொலைத்துவிட்டேன்.

தொடர்பற்றிருந்த தனது கால்களுடன் உறவைப் புதுப்பித்துக்கொண்டாள்

திசைகளும் பாதைகளும் நாணயத்தின் பக்கங்கள்
இருளும் ஒலியும் பசிதீராப் பிராணிகள்
மீண்டும் மீண்டும் தின்று கழிக்கின்றன பொழுதுகளை
கடைசியாக பூவொன்றைக் கொண்டுவரும் அவனிடம் சொல்கிறாள்:
மனிதகுலத்திற்கு ஆகச் சிறந்த விளக்கம் கால்கள்தானே அன்பே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick