கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

னந்த விகடனில் இயக்குநர் வெற்றிமாறன் எழுதிய `மைல்ஸ் டு கோ’ தொடரில் புகைபிடிப்பதைக் கைவிட்ட அனுபவத்தைப் பற்றியதொரு கட்டுரை இடம்பெற்றிருந்தது. அந்தத் தொடரில் அது வித்தியாசமான,  முக்கியமானதொரு கட்டுரையும்கூட. ஒரு நாளைக்கு 170 சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த ஒருவர், அதனை விட்டொழிக்க எடுத்த முயற்சிகள் பற்றியதொரு ஒப்புதல் வாக்குமூலம், கருகும் உண்மைகளால் எழுதப்பட்டுள்ளது.

புகையிலைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து பலரும் பேசியும் எழுதியும் வருவதைப் பார்க்கிறோம். ஆனால், இந்த விழிப்புஉணர்வு உருவாகாத காலத்தில், புகையிலையைப் பற்றி ஓர் இலக்கியம் தமிழில் படைக்கப்பட்டுள்ளது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பாக இராமநாதபுரம் சமஸ்தான வித்வானாகிய சர்க்கரைப் புலவரின் மகன் சீனிச்சர்க்கரைப் புலவர் `புகையிலை விடு தூது’ என்று ஒரு தூது இலக்கியத்தை எழுதியுள்ளார்.

மிகவும் சுவாரஸ்யமான தூது இது. தலைவியைப் பிரிந்து வாடும் தலைவன், அவளுக்கு அனுப்பும் தூதினையும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி அவனுக்கு அனுப்பும் தூதினையும்தான் அதுநாள் வரை தூது இலக்கியமாகப் புலவர்கள் பாடினர். ஆனால், முதன்முறையாக மிகவும் மாறுபட்டதொரு தூது இலக்கியம் தமிழில் படைக்கப்பட்டது. பழநி மலையில் குடிகொண்டுள்ள சுப்பிரமணியக் கடவுளின் மீது, ஒரு தலைவி புகையிலையைத் தூது அனுப்புவதாக இவ்விலக்கியம் படைக்கப்பட்டுள்ளது.

59 கண்ணிகளைக் கொண்ட இந்தத் தூது இலக்கியத்தில் 53 கண்ணிகள் புகையிலையைச் சிறப்பிக்கவே எழுதப்பட்டுள்ளன. சுப்பிரமணியன் மீதான காதலைவிட, புகையிலையின் மீதான காதலே உச்சத்தில் நிற்கிறது. இதுவும் ஒருவகையில் சீனிச்சர்க்கரைப் புலவரின் ஒப்புதல் வாக்குமூலம் என்றே கருதவேண்டியி ருக்கிறது. புகையிலை மீது கொண்ட காதலால் உருகும் உண்மைகளைக் கொண்டு எழுதிய கவிதைகள்.

இதில் முக்கியமானது புகையிலையின் வரலாற்றுக் கதை. சீனிச்சர்க்கரைப் புலவர் சொல்லும் புகையிலையின் கதையை அறிந்துகொள்ளும் முன்னர், புகையிலை கண்டறியப்பட்டு இந்தியாவுக்கு வந்த கதையைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வோம்.

1492-ம் ஆண்டு புகையிலை கண்டுபிடிக்கப் பட்டது. அதே ஆண்டுதான் அமெரிக்காவும் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதகுலத்தை அடிமைப் படுத்தத் துடிக்கும் இரு பெரும் சக்திகளின் கண்டுபிடிப்பில் இருக்கும் தற்செயல், நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதுமட்டுமல்ல, இரண்டின் மீதான போதையும் இன்னும் விட்டபாடு இல்லை.

கியூபா எனும் தீவைப் பரிசோதித்துவர அனுப்பப்பட்ட கொலம்பஸ் `வாசனையுள்ள தழைகளைத் தங்கள் மேல் அணிந்து, தீப்பற்றியெரியும் கொள்ளிக்கட்டைகளை வாயில் கவ்வியபடி உலவும் மனிதர்களை அங்கே கண்டேன்’ என்று எழுதியதில் இருந்து தொடங்குகிறது புகையிலையின் வரலாறு. பின்னர் ஸ்பெயின் நாட்டு அரசரால் அனுப்பப்பட்ட ஃபிரான்சிஸ்கோ ஃபெர்னாண்டஸ் என்னும் பெயர் கொண்ட ஸ்பானியர், இந்த அற்புதத்தை கியூபாவில் இருந்து ஸ்பெயினுக்குக் கொண்டுவந்தார்.

பிரெஞ்சு ஜனாதிபதி ஜீன் நிக்காட் என்பவர், 1560-ம் ஆண்டு இந்தப் புகையிலைச் செடியை ஸ்பெயின் நாட்டிலிருந்து ஃபிரான்ஸுக்குக் கொண்டுசேர்த்தார் (புகையிலையின் பொதுப் பெயராகிய `நிக்கோட்டின்’ என்பது நிக்காட் என்னும் இவரது  பெயரில் இருந்தே  வந்திருக்கவேண்டும் என்ற கருத்து உண்டு.)

1565-ம் ஆண்டில் வால்டர் ராலே என்பவர், இங்கிலாந்துக்குப் புகையிலையை அறிமுகப்படுத்தி, பெரும் வணிகப் பொருளாக மாற்றி வெற்றிகண்டார். இவரைப் பற்றிய கதையொன்று உள்ளது. இங்கிலாந்துக்கு புகையிலை அறிமுகமாகத் தொடங்கிய அந்த ஆரம்ப காலத்தில், தனது அழகு நிரம்பிய மாளிகையில் ஒரு மாலை நேரத்தில் இவர், புகையிலையை மிகவும் ரசித்து பிடித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது தொண்டை வறண்டு, தாகமெடுத்துள்ளது. தனது வேலைக்காரனை, குடிக்க பீர் கொண்டுவரும்படி சத்தம் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பணியாளர் கையில் பீர் நிரம்பிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அறைக்குள் வந்திருக்கிறார். வந்தவுடன் கண்ணில்பட்ட காட்சி அவருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தனது முதலாளியின் வாயிலும் மூக்கிலும் இருந்து புகை அடர்ந்து மேலெழும்பி இருக்கிறது. அய்யோ தனது முதலாளி மீது நெருப்பு பற்றியெறிகிறதே என்று பதறிப்போன அவர், தான் கொண்டுவந்த பாத்திரத்தில் இருந்த பீரை அப்படியே முதலாளியின் தலையில்  கவிழ்த்தாராம்.

கதையின் தொடர்ச்சி எழுதப்படவில்லை, ஆனால், புரிந்துகொள்வது கடினம் அல்ல. முதலாளி மீது பற்றியெறிந்தது நெருப்பல்ல என்பதை அவருக்குப் புரியவைத் திருப்பார்கள். சிறிது கால இடைவெளியில், மீண்டும் அவர் மீது அந்த நெருப்பு பற்றி எரிந்திருக்கும். எரிவது நெருப்பு அல்ல என்ற விழிப்புஉணர்வை அவரைச் சுற்றியிருந்தவர்களும் சமூகமும் அப்போது அடைந்திருக்கும். இந்தக் கதையே விழிப்புஉணர்வுக்காக உருவாக்கப்பட்டதாகக்கூட இருக்கலாம். அறியாமையில் இருந்து மக்களை மீட்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறதல்லவா! அவர்கள் அதனைச் செவ்வனவே செய்திருப்பார்கள்.

இவ்வாறாக, புகையிலையின் காரப்புகை இங்கிலாந்தைச் சூழத் தொடங்கிய சிறிது காலத்தில், அரசர் முதலாம் ஜேம்ஸின் உத்தரவின் பேரில் தாமஸ் ரோ என்பவர் 1615-ம் ஆண்டு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மொகலாயச் சக்கரவர்த்தி, ஜஹாங்கீரை அவரது அரசவையில் வந்து சந்தித்தார். அப்போது அவர் புகையிலையையும் அயர்லாந்தின் உருளைக்கிழங்கையும் கொண்டுவந்தார். தாமஸ் ரோ கொண்டுவந்த ருசி மிகுந்த அந்தப் பொருட்களை இந்திய மக்கள் சுவைத்து மகிழ்ந்தனர். வெகுசில காலத்திலேயே உருளைக்கிழங்கு நம் மண்ணிலும், புகையிலைச் சுருட்டு நம் வாயிலும் ஆழப் புதைத்து நட்டுவைக்கப்பட்டன.

புகையிலைக் கண்டறியப்பட்டு இந்தியாவுக்கு வந்த வரலாறு இப்படி இருக்க, சீனிச்சர்க்கரைப் புலவரோ புகையிலைக்கான புதியதொரு கதையை தனது தூது இலக்கியத்தில் சித்தரிக்கிறார்.

முன்பொரு காலத்தில் சிவன், திருமால், பிரம்மா மூவருக்குள்ளும் ஒரு வழக்கு உண்டாயிற்று. அதனைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு தேவர்களின் இந்திரசபைக்குச் சென்று தங்களது வழக்கை எடுத்து வைத்துள்ளனர். அவற்றைக் கேட்ட தேவர்கள், “உங்களது வழக்கைப் பிறகு கவனிப்போம்” என்று சொல்லி அந்த மூவர்களிடத்திலும் வில்வம், திருத்துழாய், புகையிலை என்னும் மூன்றையும் கொடுத்து, அவற்றை மறுநாள் கொண்டுவரச்சொல்லி அனுப்பியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick