அடுத்து என்ன? - இரா.முருகவேள் | Murugavel Interview - What's next? - Vikatan Thadam | விகடன் தடம்

அடுத்து என்ன? - இரா.முருகவேள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படம் : தி.விஜய்

டுத்து எழுதிக்கொண்டிருப்பதும் ஒரு நாவல்தான்.

மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஓர் இயக்கத்தை அல்லது கட்சியை அரசு எப்படி ஊடுருவியும், வெளியிலிருந்து அழுத்தங்கள் கொடுத்தும் சிதைக்கிறது என்பதை ஆழமாகக் காட்சிப்படுத்துவதுதான் நோக்கம். நாவல் ஒரு த்ரில்லராக மாறும் வாய்ப்புஇருக்கிறது. நேரடியாக ஓர் அமைப்புக்குள் ஊடுருவி உளவு பார்ப்பது வழக்கமாக நடப்பது. புத்தகங்கள், ஊடகங்கள் மூலம் நமது சிந்தனையைக் கட்டுப்படுத்துவது இன்னொரு முறை. இந்த முறை சிக்கலானது. மிகக் கூர்மையான அறிவும் நிதானமும் வலைப்பின்னலும் வேண்டும். அரசு இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறது. அது நாம் அறியாமலேயே நமது கையைப் பிடித்து, தான் விரும்பும் திசையில் நம்மை அழைத்துச் செல்கிறது. அரசின் கையைப் பிடித்து நடந்தபடியே விடியலை நோக்கி நடை போடுவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

பெரும் எழுச்சிகள் நடக்கத் தொடங்கிவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால், அவர்கள் சிரிக்கிறார்கள். ஒரு பிரஷர் குக்கரில் ஆவியை வெளியேற்றுவதைப் போல நம்மைப் பயன்படுத்தி, கோபத்துக்கு ஒரு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இதைத்தான் அவர்கள் விரும்பினார்கள் என்று புரிந்துகொள்ளும்போது காலம் கடந்துவிடுகிறது. சில முடிச்சுகள் ஒருபோதும் அவிழ்வதே இல்லை.

நண்பனையும் பகைவனையும், ஒளியையும் இருளையும், உண்மையையும் பொய்யையும் பிரித்து உணர முடியாத ஒரு மாய வெளி நம் முன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த விசித்திரமான பிரதேசத்தைத்தான் நாவலின் களமாக்க முயல்கிறேன்.

அரசு என்பது எது? அதிகாரவர்க்கமா, கார்ப்பரேட்டுகளா அல்லது நம்மை ஆள்வதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகளா? எதுவுமே மாறக் கூடாது என்று நினைப்பதில் இவர்கள் ஒவ்வொருவரின் பங்கும் என்ன? எந்த அளவுக்கு இவர்கள் உடன்பட்டும் முரண்பட்டும் இயங்கு
கிறார்கள் என்றெல்லாம் நாவலில் பேச வேண்டும். ஆனால்,  இது பற்றித் தேடும்போது அரசு இயந்திரத்தின் பிரமாண்டம் மலைப்பூட்டுகிறது. முயன்று பார்க்கலாம்.

நாளை பொழுது விடிவதற்குள் உலகை மாற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடங்கி, பின்பு தனிமைப்படுத்தப்பட்டு வேட்டையாடப்பட்டவர்களான எனது நண்பர்கள்தான் கதை மாந்தர்கள். அவர்கள் எதிர்கொள்ளும் விரக்தியும் வெறுமையும், பிடிவாதமான நம்பிக்கைகளையும் ஓரள
வாவது  எழுத்தில் கொண்டுவருவதில் நான் வெற்றி பெற்றுவிட்டால், நாவல் உங்களுக்குப் பிடித்து விடும் என்று நினைக்கிறேன்.

`அஸ்வத்தாமன்’ என்று பெயர் வைக்கலாம் என்று எண்ணம் இருக்கிறது. `கண்ணாமூச்சி விளையாட்டு’ என்ற பெயர்கூடப் பொருத்தமானதாகத்தான் தோன்றுகிறது. இன்னும் முடிவு செய்யவில்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick