பெரியாரின் பூதக்கண்ணாடி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

குத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், தமது 95-ம் வயதிலும் தனது சுற்றுப் பயணத்தையும், மக்களின் சிந்தனையைத் தூண்டும் உரைகளையும் நிறுத்தவே இல்லை.

1973, டிசம்பர் 19-ம் தேதி, சென்னை தியாகராயர் நகரில்தான் இறுதி முழக்கமிட்டார். அதன் பிறகு உடல் உபாதை ஏற்பட்டு, வேலூர் C.M.C. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி டிசம்பர் 24 காலை காலமானார்.

அவரது தொண்டு பற்றி அவர்களே கூறினார்கள்:

“ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல், மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அத்தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றிவருகிறேன்”

என்று முழங்கிய அவருக்கு முதுமை தந்த இடையூறுகள் பலப்பல!

அதுபற்றி அவர்களேகூட பலமுறை எழுதியுள்ளார்கள். என்றாலும் அவரது முதுமைக்கேற்ற உடற்கூறுப்படி, ரத்தக் கொதிப்போ, சர்க்கரை நோயோ, நினைவாற்றல் இழப்போ இறுதி வரை அய்யா அவர்களுக்கு இருந்தது இல்லை. ஆனால், பற்பல நேரங்களில் விடாமல் பழைய புராணங்களின் பதிப்பு முதல், தமிழ் அகராதி வரை - அன்றாடச் செய்தித்தாள்கள் உட்பட - படிப்பதைத் தன்னுடைய முக்கிய பழக்கப் பணியாகவும், கடமையாகவும் கருதி வாழ்ந்தவர்.

தனது கண்வலி, ரத்தக் கொதிப்பு என்று அவர் எவற்றைக் கூறுகிறார்? சமுதாயத்தின் நோய்களையே தன் நோயாக்கிக்கொண்ட தன்னிகரற்ற தன்மானத் தலைவர் பெரியார். இதோ அவரே கூறுகிறார். கேளுங்கள்:

“தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்குக் கண்வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சக மனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்ணோய்க்குப் பரிகாரம்.”

(‘விடுதலை’ 15.10.1967)

“இவ்வளவு பாடுபட்டும் இன்னும் இந்தக் காலத்திலும் ‘பார்ப்பான்’ இருக்கிறான்; ‘சூத்திரன்’ இருக்கிறான்; ‘பறையன்’ இருக்கிறானே! உலகிலெல்லாம் மார்க்சிசம் பரவிய இந்தக் காலத்திலா, இத்தகைய பேதங்கள் இருப்பது?...

...தொழிலாளிக்கு அடி உதை. அதோடு மட்டுமா? தொழிலாளர் குடும்பப் பெண்கள் எத்தனை பேர்கள் கற்பழிக்கப்பட்டார்கள்! எத்தனை பெண்டுகளை மயிரைப் பிடித்து இழுத்துத் தெருவிலே கொண்டு வந்து, போட்டு அடித்தார்கள்! இவ்வளவு பாடுகள் படச் செய்தும் அவர்களது இழிவு நீங்கப்படவில்லை. குறைந்த கஷ்ட நஷ்டத்தில் அதிகப்படியான லாபத்தை யல்லவா பெற வேண்டும்! இதை நினைத்தால் எனக்கு மனம் பதறுகிறது. நம் மக்கள் இப்படி ஏமாற்றப்படுகிறார்களே என்கின்ற ஆத்திரத்தால் சில சமயங்களில் ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick