“கொஞ்சமாவது மக்களுக்கு கோபம் வேணாமா?” சந்திப்பு: தமிழ்மகன், வெய்யில், கதிர்பாரதி

நேர்காணல்: கி.ராஜநாராயணன்படங்கள்: புதுவை இளவேனில்

“என்னத்த கேக்கப் போறிய? ஒரு விவசாயக் குடும்பத்தில பொறந்திருந்தாலும், ‘முன்னத்தி ஏர்க்காரன்’னு பேர் எடுத்திருந்தாலும், ஏர்பிடித்து உழத் தெரியாதவன் நான். அரசியல்ல இருந்திருக்கேன்; அரசியலைப் பற்றி சரியாகத் தெரியாது. சங்கீதத்தில் இருந்திருக்கேன்; ஒரு கீர்த்தனைக்குச் சரியாத் தாளம் போடத் தெரியாது. பேனாவுக்குச் சொந்தக்காரன்; ஆனா இன்னும் பிழையில்லாம எழுதத் தெரியாது. வெட்டிக்கதை கதைப்பேன். என்ன பிரயோசனம்... பிரசங்கி இல்லை.”

புதுச்சேரியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வசித்துவரும் பல்கலைக்கழக வளாகக் குடியிருப்பில் சந்தித்தோம். ஜென் ஞானிக்கும்,  குறும்புக்காரச் சிறுவனுக்கும் இடையிலான மனநிலையில் இருந்தார்.

94 வயது கி.ரா-வின் குரல் இது. 

 “உங்களின் இலக்கியப் பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ அறிவிச்சி்ருக்காங்க. எப்படி உணர்றீங்க?


“இந்த விருது எனக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கிற முதல் அங்கீகாரம். சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா, அந்த நாட்டுக்கு வரச் சொல்லிட்டாங்கன்னா... கஷ்டமாபோயிடும். வயசாயிடுச்சுல்லா... முன்னாடில்லாம் வெளிநாட்டுக்குப் போனா, அபூர்வமான காட்சிகளைப் பார்க்கலாம். புதுப்புது மனிதர்களைச் சந்திக்கலாம். புது விஷயங்களைத் தெரிஞ்சிக்கலாம். எல்லாத்துக்கும் மேல மனசு குதூகலமாகும்னு ஒண்ணு இருந்துச்சு. இப்போல்லாம் அப்பிடி இல்லை. அதான் எல்லாத்தையும் டி.வி-ல காமிச்சிருதான்லா. நாம நேர்ல போய் பாக்கிறதைவிடவும் டி.வி-ல பாக்கிறது ரொம்ப நல்லாருக்கு. வித்தியாசமாவும் இருக்கு. விருதை வாங்க நேர்ல கூப்பிடாம இருக்கணும்னு தோணுது.”

“உங்களோட ஒரு நாள் எப்படிப் போகுது?”

``ஒரு நாள்போல இன்னொரு நாள் இருக்காதுன்னாலும், செஞ்சதையே தெனமும் திரும்பத் திரும்பச் செய்யவேண்டியிருக்கு. இப்போ இருக்கிற மனுஷனுக்கு காலையில வெளிக்குப் போறதே ஒரு சாதனையா இருக்கு. முக்குறான், முனகுறான். பின்னாடி தட்டிக்கொடுத்துக்கிறான், வயித்துல குத்திக்கிறான். காலையில, கலகலன்னு வெளிக்குப் போச்சுன்னு ஒரு மனுஷன் சொல்லிட்டான்னா, அவனைப் பார்த்துப் பொறாமைப்படவேண்டியதா இருக்கு. காலையில எழுந்ததும் வாயைக் கொப்பளிச்சுத் துப்புறதுபோல வயித்தைக் கொப்பளிச்சுத் துப்புறதுக்கு இனிமா எடுத்துக்கிடணும். நான் 60 வருஷமா இனிமா எடுத்துக்கிறேன். இதைச் சொன்னா டாக்டர்கள் மிரள்றாங்க. வினோபா பாவேவின் சர்வோதயா சங்கத்துல இருந்துதான் இதைக் கத்துக்கிட்டேன். ஒரு நாள் வயிறு சுத்தமானாப் போதும்... அந்த நாள் சுத்தமானதுபோல அவ்வளவு புத்துணர்ச்சியா இருக்கு. மத்தபடி சொல்லிக்க புதுசா ஒண்ணுமில்லை... நாம பேசாம இருந்தாலும், நாட்கள் அதுபாட்டுக்கு வருது போவுது. நாமதான் அதுகிட்ட சூதானமா இருக்கவேண்டியிருக்கு.’’

“இத்தனை ஆண்டு தமிழோட புழங்கினதுல இந்த மொழியில நீங்க வியக்கிற விஷயம் என்ன?”

``தமிழ் ஒரு மொழி. அவ்வளவுதான். அதுல வியக்கிறதுக்கு என்ன இருக்கு? இதே நான் தமிழ் பண்டிட்டா இருந்திருந்தேன்னா,  ஆகா... தமிழில் இருக்கிற ‘ழ’கர சிறப்பு வேறு எந்த மொழியில் இருக்குன்னு சொல்லிருப்பேன். இது மாதிரியான சிறப்பு எல்லா மொழிகளிலுமே இருக்கத்தான் செய்யுது. உலக மொழிகளில் தமிழ் மொழி மிகத் தொன்மையானதுன்னு எல்லாரும் ஒப்புக்கிறாங்களேன்னு நீங்க கேட்கலாம். ஆனா, எல்லா மொழிகளுக்குமே இந்தத் தொன்மை இருக்கத்தான் செய்யுது. ஒரு இடத்துல எப்போ மனுஷன் தோன்றினானோ, அப்பவே சப்தங்களும் மொழியும் தோன்றிருது. ஆப்பிரிக்கா நாட்டுல எல்லாரும் ஒரு மொழியா பேசுறான்? இலக்கணத்தை எழுதின தொல்காப்பியனே ‘பழையன கழிதல்’னு சொல்றான். இது எல்லாத்துக்கும் தெரியும். புதியன புகும்கிறதும் தெரியும். ஆனா, ஒப்புக்க மாட்டேங்கிறான். கோயில்கள்ல ஒரு சாதியினரை மட்டும் உள்ளேவிடாம அழிச்சாட்டியம் பண்றோம்ல. அதுபோலத்தான் இதை நீங்க பார்க்கணும். சைகை மொழி படிச்ச அம்மா ஒருத்தங்க... வாய்பேச முடியாதவங்களைவெச்சு ஒரு நாடகம் போட்டாங்க. அவங்ககிட்ட ‘இந்த மொழியைக் கத்துக்கிட்டா உலகம் முழுக்க ஒரு பிரச்னையும் இல்லாம சுத்தலாமே’ன்னு  சொன்னேன். அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க... ‘மொத்த உலகத்துக்கும் பொதுவான சைகை மொழின்னு ஒண்ணு இல்லை. இங்கிலாந்துல வேற சைகை மொழியாம். அமெரிக்காவுல வேற சைகை மொழி.’ அடப்பாவிங்களா அதைக்கூட பிரிச்சுவெச்சுட்டீங்களானு இருந்தது. மைல் கல்லுல எல்லாருக்கும் புரியற மாதிரி ஒண்ணு போடறதுக்குப் பதிலா `க’ போடறதுல என்ன பெருமை இருக்கு?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick