எரியும் குடிசைகளை ஜோதி என்றும் சொல்லலாம் - லிபி ஆரண்யா

மோவாய் என்றா சொன்னீர்கள்
தாவாங்கட்டை என்பது சிறப்பு

நிலக்கடலை நிலக்கடலை எனக் கூவுகிறான் அவன்
எத்தனை நாராசம்
வேர்க்கடலைகூடத் துல்லியமில்லை
மல்லாட்டை மல்லாட்டை
கொஞ்சம் கூவிப் பாருங்கள்
இசைமை இசைமை

வட்டக் குதத்தை வடிவேல் காக்க
சங்கட்டமாயில்லை இப்படிப் பிரார்த்திக்க
சின்னத் திருத்தம்தான்
ஆசனவாயை ஆறுமுகன் காக்க
சட்டெனக் கலை கூடி வரவில்லையா
சஷ்டி கவசத்திற்கு

அடித்தான் அடித்தான் என்று
அலறித் துடிப்போரே
ஒருமுறை ஒரேமுறை
ஓங்கித் தட்டினான் என்று உச்சரித்துப்பாருங்கள்
வலி மங்கிக் காயம் சொஸ்தமாகும்


சொல்தான் எல்லாம் சொல்தான்
சுட்டான் சுட்டான் என்பது பயங்கரம்
பொட்டிலொரு சன்னத்துளை என்றால் பாந்தம்

கொன்றான் கொன்றானெனத்
திணை மயக்கங் கொள்ளாதீர்
சம்பவ ஸ்தலத்தையொட்டி ரெண்டு பதங்கள்
நிலமும் நிலம் சார்ந்துமெனில் ஜீவசமாதி
கடலும் கடல் சார்ந்துமெனில் ஜலசமாதி

தவிர
வன்புணர்ச்சி என்பதுகூட
மொழிப் போதாமைதான்

சொல்தான் எல்லாமே சொல்தான்

இனப்படுகொலை என்றேதான்
சொல்ல வேண்டுமா என்ன
ரத்தக் கொதிப்பு வேறு  உங்களுக்கு
நல்லதற்கே சொல்கிறேன்

கமலக் கண்களை மூடுங்கள்
மூச்சை  நன்றாக இழுத்துவிடுங்கள்
ஒரு சொல்தான் ஒரே சொல்தான்
வழுவழுப்பான சில்லிடும்
மாற்றுச் சொல்லொன்று கிட்டும் வரை
சமாதி நிலையில் இருங்கள்
ஓம் சாந்தி ஓம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick