போர் ஓய்ந்த பூமியின் சிப்பாய் - வாசுதேவன் (இலங்கை)

போர் ஓய்ந்த பூமியின் முகாமுக்கு
புதிதாய் வந்திருந்தான் சிப்பாய்.
போர் ஓய்ந்த பூமியின் மக்களை
புதினமாய் பார்க்கலானான் அவன்.
முகாமின் கடைநிலை ஊழியர்
அதிகாரிகளிடம் நடந்துகொள்வதைப்போல
அவர்கள் நடமாடித் திரிவதையும்,
தொட்டாற் சுருங்கிபோல்
வாழப் பழகிவிட்டிருப்பதையும் கண்டான்.
விலங்குகள்
தமிழ் பேசித் திரிவது போலவும்
அவனுக்குத் தென்பட்டது.
துப்பாக்கி ஒன்று
தன்னுடன் இருப்பதன் ஊட்டத்தால்
தன்னுள் கிளரும் எந்தவோர் ஆர்வத்தையும்
இந்த நிலத்தின்
யார் ஒருவர் மீதும்
எந்த வொன்றின் மீதும்
எதிர்ப்புகள் ஏதுமற்ற இசைவுடன்
நிகழ்த்திவிட முடியுமென்றும் அவனுக்குத் தோன்றியது.
போர் ஓய்ந்த பூமியில்
துப்பாக்கியொன்றை தான் சுமந்து திரிவதற்கு
அவசியம் இல்லை என்று நினைத்தான்.

மழை பெய்த ஒரு மாலையில்
காற்றில் பரவி வந்த மண்புழுதி வாசனையும்
காட்டுப் பூக்களின் மணமும்
அவன் நாசியில் இறங்கியபோது
தன் வாழ்நாளில் முதல் தடவையாக
அப்படியொரு வாசனையை
நுகரக் கண்டு வியக்கலானான்.
பெயர் தெரியாத வண்டொன்றின் இரைச்சல்
காதுக்குள் புதிதாய் பாய்ந்தது.
மழையின் வேகமும் தோரணையும்கூட
மாறுபட்டதாய் இருப்பது தெரிந்தது.
காற்றின் அடர்த்தியுள்
தான் சிக்குவதுபோலவும் இருந்தது.
அடிவயிற்றில் மெலிதாய் ஒரு கலவரம்
தன்னியல்பாய் மூள
தன் ஊரின் நினைவுகள் துளிர்த்துவர
போர் ஓய்ந்த பூமியில்
தனையோர் அன்னியனாய் உணரத் தொடங்கினான்

அத்தனை இலட்சம் துப்பாக்கி ரவைகளாலும்
ஆயிரமாயிரம் எறிகணைகளாலும்
விமானக் குண்டுகள் பீரங்கிகளாலும்
தோற்கடிக்கப்படாத ஏதோவொன்று
போர் ஓய்ந்த பூமியில்
இன்னும் மீதமிருப்பதாக உணர ஆரம்பித்தான்.

ரவைகளால் நிரப்பப்பட்ட துப்பாக்கியை
எப்போதும் தலைமாட்டில் வைத்திருக்குமாறு
தனக்குப் பணிக்கப்பட்டிருப்பதற்கும்,
முகாமின் களஞ்சியத்தில்
போதுமான ஆயுதங்கள்
பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதற்கும்,
காவலரண் சிப்பாய்
இரவில் மர நிழல் அசைவு கண்டு
துணுக்குறுவதற்குமான காரணங்கள்
மெல்ல மெல்ல அவனுக்கு விளங்கத் தொடங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick