உடல் இளைத்த மிளா - மௌனன்

ஓவியம் : டிராட்ஸ்கி மருது

மான்களைத் தாகித்தலையவைக்கிற கோடையில்

இக்கொடிய பாதையில் உடன்போக்குச் சென்றோம்.

நமது ஊரின் விளிம்பில் நின்ற

பனை மரங்களில்

குருவிகள் போய்விட்ட கூடுகள்

பிய்ந்து தொங்கியதை

அபசகுணமாய் கண்டு பேதலித்த

உன் நடுக்குற்ற கரங்களை

நம்பிக்கையை உறுதிப்படுத்தவென

அழுந்தப் பற்றியிருந்தேன் நான்.

உடல் இளைத்த மிளா ஒன்றை

என்னிடம் நீ காட்டியபோது

அது உன்னைப்போல் இருப்பதாகத் தோன்றியது.

நீர்த்தன்மை அழிந்திருந்த கத்தாழைப்போல்

இருவரும் துவண்டிருந்தோம்.

நம் நிலத்தின் படர்க்கொடிபோல்

பின்னிக் கிடக்க வேண்டுமெனும் ஆவல்

நமக்கு ஏனோ வந்தது.

நாம் அந்த முன்னந்தி வெயிலில்

கண்ணீர் மல்க அணைத்துக் கொண்டோம்.

கொதி மணலின் கானல்

மெல்லக் குறையத் தொடங்கியது.

நாம் இந்த முன்னறியா ஊருக்கு வந்தபோது

முழுமையான வெளிர் நீலத்திலிருந்த ஆகாயத்தையும்

வளர்ந்து கொண்டிருந்த நிலவையும்

உன்னிடம் காட்டினேன்.

நீ ஏதோ பேச தழுதழுத்தாய்.

உன் உன்னத காதலின் கசிவினால்

அது நேர்ந்ததென்று எனக்குத் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick