மிகக் கடைசியான மிருதுவான கதைகள் - ஜீவன் பென்னி

ஓவியம் : மணிவண்ணன்

1.
ஆசீர்வாதங்களால் நிரம்பியிருக்கின்ற இம்மாநகர சுரங்கப்பாதையில்
ஒரு ஞாபகத்தின் பிரார்த்தனை கையேந்துகிறது
மிக மிருதுவான கைகளவை
பழக்கூறுகளுடன் நசிந்துகொண்டிருக்கும் இப்பாலித்தீன் வாழ்வின்
மிகக்கடைசியான மிருதுவது.
மெல்லிய இசையொன்றில் நெருங்கிய உறவாகிக்கொள்ளுமது
தன் கதைகளில் திரும்பத்திரும்ப மென்மையாகி
சரிந்துடைகிறது,
கடைசிப் பாடல் முடிவடையும்போது
கடைசி இரயில் கடந்துவிட்டிருந்தது
சாலைகள் யாருமற்றிருந்தன,
மேலும்
இருளப்பிக் கிடக்கும் இவ்வுலகம் சில பூக்களைப்போல்
மணத்தும் கிடக்கின்றன.
எப்பொழுதும்போல்
இவ்விரவை மேலும் அர்த்தமாக்குவது
அதன் இருள்தான்.
                                                 
2.
பழைய ஆடைகளைத் துவைத்துத் தேய்த்து விற்பவன்
அந்நகரின் பழைமையான உடல்களையே விற்கிறான்
அவற்றின் மெலிந்த ஆன்மாக்களைத்தான்
கைவிடப்பட்ட எல்லா உதிரிகளுக்குமானதாக
ஒன்றன் மீது ஒன்றாக அழகாக அடுக்கிவைத்திருக்கிறான்.
நகரம் பழையனவற்றை வெளியேற்றுகிறது
அவனோ
பழையனவற்றிலிருக்கும் நகரின் புதிய கனவுகளை
எல்லோருக்குமானதாக்குகிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick