சிவப்புக் கிளி - வசுதேந்திரா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கன்னடத்திலிருந்து மலையாளத்தில் மொழிபெயர்த்தவர்: ஏ.கே.ரியாஸ் முகம்மதுமலையாளம் வழி தமிழில்: யூமா வாசுகி ஓவியங்கள் : கே.எஸ்.அனில்

நான் பள்ளியில் மிகவும் புத்திசாலிப் பையன் என்று பெயரெடுத்தவன். எப்போதும் முதல் ஸ்தானத்தை விட்டுக்கொடுக்காத, அம்மாவின் பெருமைக்குரிய மகன். எல்லா ஆசிரியர்களுக்கும் மிகவும் பிடித்தமானவன் நான். அப்படி இருக்கும்போது ஒருநாள் கன்னட ஆசிரியர், “உன் தலை முழுதும் சாணியை நிறைத்து வைத்திருக்கிறாயேடா…” என்று எல்லா மாணவர்களுக்கும் முன்னால்வைத்து என்னைத்  திட்டினார். என் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது.

 பண்ட்ரி வாத்தியார் அன்று எதனாலோ பாடம் சொல்லிக்கொடுக்கும் மனநிலையில் இல்லை. எல்லா பிள்ளைகளிடமும் ‘எங்கள் விவசாயத் தோட்டம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதும்படிச் சொல்லிவிட்டு கையில் தடியைப் பிடித்துக்கொண்டு வெறுமனே அங்கும் இங்கும் நடக்கத் தொடங்கினார். என் அப்பாவுக்கு எட்டு ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால், ஒருபோதும் அப்பா என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றதில்லை. ஒரு தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்துவந்த அப்பா, எப்போதேனும் அங்கே சென்றதாகவும் எனக்கு நினைவில்லை. ஆயினும், கட்டுரை எழுதாமல் சும்மா இருக்க முடியுமா? பேருந்தில் பயணம் செய்யும்போது ஊரில் உள்ள மற்ற விவசாய இடங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்றாலும் எங்கள் விவசாயத் தோட்டம் மிகவும் சாதாரணமானது என்று எழுதுவதற்கு எனக்குக் கொஞ்சம்கூட மனமில்லை. எனக்குத் தோன்றியதுபோல உறைப்பும் புளிப்புமெல்லாம் சேர்த்து எழுதினேன். வாத்தியார் ஒரு பக்கம்தான் எழுதச் சொல்லியிருந்தார் என்றாலும், நான் இரண்டு பக்கங்கள் எழுதினேன்.

இதுதான் நான் எழுதிய கட்டுரை:

 “எங்கள் தோட்டத்தில் உள்ளி விளையும். ஒவ்வோர் உள்ளி மரமும் மாமரம் அளவுக்கு உயரமாக இருக்கும். இலைகளுக்கிடையே உள்ளிகள் தொங்கிக்கொண்டிருக்கும். ஒரே மரத்திலேயே பல நிறங்களில் உள்ளிகள் காய்க்கும். வெறும் வெள்ளை, சிவப்பு மட்டுமல்ல. நீலம், மஞ்சள், பச்சை, கறுப்பு நிறங்களிலுள்ள உள்ளிகளும் எங்கள் தோட்டத்தில் விளையும். இந்த மரங்களுக்கு நடுவில் உள்ள வழியில் ஒவ்வோர் அடி தூரத்திலும் தாமரைப்பூச் செடிகளை நட்டு வளர்த்திருக்கிறோம். தோட்டத்தில் ஓடி விளையாடும்போது மண்ணில் கால் படுவதாகவே தோன்றாது. தாமரைப் பூக்களின் மேலே மிதித்துக்கொண்டு நாங்கள் ஓடி விளையாடுவோம். சில நேரங்களில் லட்சுமி, சரஸ்வதி,  பிரம்மாவும் புஷ்பக விமானத்தில் வந்து இறங்கி தாமரைப்பூக்களுக்கு மேலே அமர்ந்து வீணை வாசித்தவாறும் கானங்கள் பாடிக்கொண்டும் நாமம் ஜெபித்தபடியும் இருப்பார்கள். லட்சுமி அடிக்கடி கரங்களை உயர்த்தி தங்க நாணயங்களைப் பொழிவாள்.

 தன் பிள்ளைகள் சாப்பிடுவதற்காக மட்டும் என்று அப்பா நிறைய சாக்லேட் மரங்கள் நட்டு வளர்த்திருக்கிறார். இந்த மரங்களில் கையெட்டும் தூரத்தில் சாக்லேட்டுகள் தொங்கிக்கொண்டிருக்கும். இஞ்சி மிட்டாய், பெப்பர்மின்ட், தேங்காய் மிட்டாய், காட்பரீஸ் சாக்லேட் நிறையக் காய்க்கும். அந்த சாக்லேட்டுகளை நாங்கள் மட்டும் தின்பதில்லை, வீணை வாசித்தும் கானங்கள் பாடியும் நாமம் ஜெபித்தும் சலிப்படையும்போது சில சமயங்களில் லட்சுமியும் சரஸ்வதியும் பிரம்மாவும் சாக்லேட்டுகளைப் பறித்துத் தின்பார்கள். ஒவ்வொருவருக்கும் பத்து, பதினாறு கரங்கள் உள்ளதால், சில நேரம் மரங்களில் உள்ள பெரும் பகுதி சாக்லேட்டுகளையும் பறித்து பேராசையுடன் தின்பார்கள். பிரம்மாவோ நான்கு வாயிலும் சாப்பிடுவார். சரஸ்வதி தன் அன்னத்துக்கும் சாக்லேட் ஊட்டுவாள். எங்கள் தோட்டத்துக்கு நடுவில் ஒரு சிறிய கடல் இருக்கிறது.

விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை இங்கிருந்துதான் எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியுடன் இந்தக் கடலில் நீந்தி விளையாடுவோம். கடலில் அடிக்கடி பெரிய கப்பல்கள் வந்துபோகும். கப்பலில் உள்ளவர்கள், நாங்கள் விளைவித்த பொருட்களை விலைக்கு வாங்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்குக் கொண்டுசெல்வார்கள்.”

இதைப் படித்தால் எந்த வாத்தி

யாருக்குத்தான் கோபம் வராது?  அவர் என் காதைப் பிடித்துத் திருகி, பிருஷ்டத்தில் பளிச் பளிச்சென்று இரண்டு அடி கொடுத்தார். நான் எழுதியதை எல்லா மாணவர்களுக்கும் படித்துக்காட்டினார். “மரத்திலிருந்து உள்ளி உதிர்ந்து விழும், அல்லவா!? இந்த பெல்லாரி மாவட்டத்தின் நடுவில் கடல் இருக்கிறது, அப்படித்தானே? நீ எப்போதாவது தோட்டத்துக்குச் சென்று பார்த்திருக்கிறாயா?” என்று கோபத்துடன் கத்தினார். ஒரு நிமிடம் அமைதியாக இருந்த பிள்ளைகள் அனைவரும் என் அறியாமையை நினைத்து குபீரென்று சிரித்தார்கள். வாத்தியார் என் கட்டுரையில் பெரியதொரு பூஜ்ஜியமும் அதன் பக்கத்தில் ஒரு பெருக்கல் குறியும் இட்டு திருப்பிக் கொடுத்தார். எனக்குப் பெரும் அவமானமாக இருந்தது.

வீட்டுக்கு வந்த அப்போதே நீளப் பையை மூலையில் எறிந்து, அழுதபடியே உட்கார்ந்திருந்தேன். அம்மா வந்து பக்கத்தில் அமர்ந்து, முத்தம் கொடுத்து, “என்ன ஆயிற்று என் தங்கமே? என்ன நடந்தது என் ஈஸ்வரா?” என்று முழுமையாக சமாதானப்படுத்திய பிறகு, நடந்த விஷயத்தைச் சொல்லி கட்டுரையை அம்மா கையில் கொடுத்தேன். அதைப் படித்து முடித்துவிட்டு அம்மாவும் சிரிக்க ஆரம்பித்தார்கள். அம்மா சிரிப்பதைப் பார்த்து எனக்குக் கோபம் வந்தது. “நீங்கள் ஒன்றும் சிரிக்க வேண்டாம்…” என்று சொல்லி என் குட்டிக் கைகளால் அம்மாவை அடிக்கத் தொடங்கினேன். சிரிப்பை நிறுத்திய அம்மா தன் தலையில் அடித்துக்கொண்டு, “நூறு ஏக்கர் நிலத்தில் விதைத்தவர்களின் பிள்ளைகளுக்கு இப்படியொரு கதி வந்துவிட்டதே” என்று கலக்கமடைந்தார்கள்.

 “நீ எதற்கு அழுகிறாய்… விட்டுவிடு என் முத்தே… ஏதோ உனக்குத் தெரிந்ததை நீ எழுதியிருக்கிறாய்” என்று என்னிடம் சொல்லி, அருமையான தயிரால் செய்த மொசரவலக்கியைக்  குழைத்து, அதன் மேலே சட்னிப் பொடியும் தூவி எனக்குத் தந்தார்கள். அவலக்கியை சிறுசிறு உருளைகளாக்கி நான் சுவைக்கத் தொடங்கினேன்.

 அப்பா வந்தார். அம்மா விஷயங்களை எல்லாம் சொல்லி அப்பா படிப்பதற்காக அந்தக் கட்டுரையைக் கொடுத்தார்கள். படித்து முடித்ததும் அப்பா, “எல்லாம் உன்னால்தான்” என்று அம்மாவைத் திட்டினார். அம்மா, “நான் என்ன செய்தேன்?” என்று கேட்டு சண்டைபோட முற்பட்டார்கள். “மாத்யரின் வீடு, உள்ளி விலக்கப்பட்டது என்றெல்லாம் சொல்லி உள்ளியை வீட்டுக்குக் கொண்டுவரக் கூடாது என்று சொன்னது நீதானே… உள்ளி எப்படி விளைகிறது என்றெல்லாம் பிள்ளைகளால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? வீட்டிலோ எப்போதும் பூஜை, ஹோமம், ஈஸ்வரன், முன்னோர் என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறாய்… பார்… அதனால்தான் அவன் பிரம்மா, லட்சுமி, சரஸ்வதி என்றெல்லாம் எழுதிவைத்திருக்கிறான். பிரம்மா நான்கு வாயிலும் சாக்லேட் தின்பார் என்று கதாகாலட்சேபக்காரனைப் போல எழுதிவைத்திருக்கிறான். உள்ளி நிலத்தில் விளைகிறது என்று தெரியாதாம்… முண்டேகண்டா…” என்று திட்டிவிட்டு, மெதுவாக அவலக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த என் தலையில் ஒரு குட்டுவைத்தார். நான் மெள்ள ராகம்போடத் தொடங்கினேன். ஆயினும், சாப்பிடுவதை அப்படியே தொடர்ந்தேன். அது மிகவும் சுவையாக இருந்தது.

 “அவனை எதற்கு வீணே அழவைக்கிறீர்கள்… விடுங்கள். அந்தத் தொல்லைபிடித்தவன் வீட்டுக்கு உள்ளி கொண்டுவந்த நேரத்திலேயே அது எப்படி விளையும் என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா? `ஐயய்யோ’ என்றால், யாராவது செத்துவிட்டார்களா என்று கேட்பது போலிருக்கிறது இது. முடிந்தால் அதை எப்படி அரியலாம் என்று செய்துகாட்டலாம். அவ்வளவுதான். நாளை அந்தக் கோளாறு பிடித்த வாத்தியார் ‘நம் வீட்டுக் கோழி’ என்று கட்டுரை எழுதிவரச் சொன்னால் என்ன செய்வது? மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். வாய்க்குக் கடிவாளம் இல்லையென்பதால், அவனைத் தொந்தரவு செய்வது எதற்கு? வெளியில் எங்கெங்கோ அலைந்து திரிந்து வருகிறீர்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். வீட்டில் உள்ள ஆண்கள் அடிக்கடி குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று உலகத்தைக் காட்ட வேண்டும். ஆபீஸ் என்று சொல்லி, நாள் முழுதும் அந்தச் சுடுகாட்டிலேயே சும்மா குந்தியிருக்கிறீர்கள். குழந்தைகளுக்கு எப்படிப் புரியும்? நான் ஏதோ ஈஸ்வரன், முன்னோர் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்ததால், என் குழந்தை அதையெல்லாம் அழகாக எழுதியிருக்கிறான். பிரம்மா, லட்சுமி, சரஸ்வதி ஆகியவர்களை மட்டும் தாமரைப் பூக்களுக்கு மேலே குடியிருத்த வேண்டும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஈஸ்வரனை அழைத்து வந்தால்கூட… சொல்லுங்க…” என்று அம்மா என் புராண அறிவைப் புகழ்ந்தார்கள். அப்பா-அம்மாவின் சண்டை அப்படியே தொடர்ந்தது. தயிர் கெட்டியாகி, அவலக்கி சற்று உறைந்தது. அதனால் கெட்டியான அவலக்கியைக் கொண்டு நான் இரண்டு பொம்மைகள் செய்தேன். ஒரு பொம்மை அப்பா என்றும் இன்னொன்று அம்மாவென்றும் மனதில் நினைத்துக்கொண்டேன். சட்னிப்பொடியை எடுத்து அம்மா பொம்மையில் பெரியதொரு குங்குமம் வைத்தேன். பிறகு ஒரு துளையிட்டு வாய் அமைத்தேன். என் தலைமுடி ஒன்றைப் பிடுங்கி, அப்பா பொம்மையின் வாய்க்கு மேலே ஒரு மீசை ஒட்டி காதுகளைப் பெரிதாக வைத்தேன். பிறகு இரண்டையும் மோதத் தொடங்கினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick