யவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : அய்யப்ப மாதவன்

வனிகா ஸ்ரீராமை முதன்முதலாக காஞ்சிபுரத்தில் சந்தித்தேன். இலக்கியவட்டம் நாராயணன் என்னுடைய `புலன்வேட்டை’ கவிதைத் தொகுப்புக்கும் யவனிகாவின் `இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுப்புக்கும் விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். அநேகமாக அந்தக் கூட்டம் நடந்து 20 ஆண்டுகள் இருக்கலாம். அன்றிலிருந்து இன்று வரை யவனிகாவுடனான இலக்கிய நட்பு தொடர்கிறது.

வழக்கமான தமிழ்க் கவிதைகளிலிருந்து விலகிச் சிந்திக்கும் மனஅமைப்பு இயல்பிலேயே அவருக்கு இருந்தது. அதற்கு இசைவாக, எளிமையாக,  சுயேச்சைத்தன்மையுடன் அவரது வாழ்க்கைமுறை அமைந்திருந்தது. வணிகப் பின்னணியுடைய குடும்பத்திலிருந்து வந்திருந்த அவர், செல்வம் சேர்ப்பது குறித்துச் சிந்திக்காமல் கவித்துவ மனதோடு அலைந்து திரிபவராக இருந்தார். இத்தகைய அவரின் இயல்பு எனக்கு நெருக்கமானதாக இருந்தது. அவர்தான், என்னை பாலகுருசாமியிடம் அழைத்துச் சென்றார். பாலகுரு, `மருதா’ பதிப்பகத்தைத் தொடங்கியிருந்த நேரம் அது. அப்போது வேறு பெரிய பதிப்பகங்களில் எங்களது கவிதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், அது நிறப்பிரிகைக் குழு, பின்நவீனத்துவம் உள்ளிட்ட மாற்றுச் சிந்தனை முறைகளை உரையாடிக்கொண்டிருந்த தருணம். நாங்கள் எளிய மாற்றுசக்திகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தோம். அதன்பொருட்டே மருதா பதிப்பகத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஜாம் பஜாரில் உள்ள மருதா அலுவலகத்தில் யவனிகா, பாலகுருவோடு கழித்தவை பொற்காலங்கள். சதாகாலமும் கவிதை பேசிக்கொண்டே இருப்போம். கவிஞர்கள் கலகக்காரர்களாக இருக்கலாம், பதிப்பாளர் அப்படி இருக்கக் கூடாது. பாலகுருவால் தொடர்ந்து பதிப்பகத்தை நடத்த முடியாமல் போனது. ஆனாலும், யவனிகா உடனான நெருக்கம் அதிகரிக்கவே செய்தது. சென்னையிலிருந்து புதுவை வழியாகத் திரும்புகிறவர், அங்கு ரமேஷ், பிரேம், மாலதிமைத்ரி வீட்டில் ஓரிரு நாள்கள் தங்கிவிட்டு, பிறகு விருத்தாசலம் வருவார். எங்களது இல்லத்தில் சில நாள்கள் தங்குவார். அப்போதெல்லாம் ஒரு விருந்தினரைப் போலில்லாமல்  இயல்பாகக் குழந்தைகளோடு மகிழ்ந்திருப்பார்.கவிதையைப்போல சமையலிலும் கைதேர்ந்தவர் யவனிகா. அசைவம் பிரமாதமாகச் சமைப்பார். எனது துணைவி, தமிழ்ச்செல்விக்குச் சுவையாக பிரியாணி தயாரிக்கும் முறையைச் சொல்லித் தந்தது யவனிகாதான். கவிதையை என்னில் பித்துநிலையாகக் கொள்ளச் செய்ததில் யவனிகாவுக்கும்  பங்கிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick