ஒரு ராஜா வந்தாராம் - லக்ஷ்மி சரவணகுமார்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
(சிறுகதையாளனின் வாசிப்புக் குறிப்புகளில் இருந்து.)

`எப்போது எழுதத் தொடங்கினோம்?’ என்ற கேள்விக்கு ஒருவருக்குச் சொல்வதற்குத் தெளிவான ஒரு தருணம் இருப்பதைப்போல், `எப்போது வாசிக்கத் தொடங்கினோம்?’ என்ற கேள்விக்கு பெரும்பாலும் இருப்பது இல்லை. ஒருமுறை பஷீரிடம், `எது உங்களை எழுதவைத்தது?’ எனக் கேட்டபோது, யோசிக்காமல் ‘பசி’ என்றார். அதுபோல என்னை வாசிக்கவைத்ததும் பசியாக இருந்தது. ஆதரவற்றோருக்கான விடுதியில் வார இறுதிநாளில் நடைபெறும் பைபிள் வகுப்புக்கு ஒழுங்காகச் செல்கிறவர்களுக்கும் வசனங்களைத் தெளிவாக ஒப்புவிக்கிறவர்களுக்கும் அன்பளிப்பாகத் தரப்படுகிற, ‘க்ரீம் பன்’ மட்டுமே அன்றைய நாளில் தேவ அப்பம். ஆக, அந்தப் பன்னுக்காக பைபிளை வாசித்ததில் தொடங்கியது வாசிப்புப் பழக்கம். கதை சொல்லவும் கதை கேட்கவும் மனதின் அடியாழத்தில் யாருமறியாமல் விதைகளைத் தூவியது ஜீசஸும் ரோஸி ஆன்ட்டியும்தான். அவள் சொன்ன கதைகளின் வழியாகவே கதை என்னும் இந்தத் தனித்த உலகு மீதான எல்லா பைத்தியக்காரத்தனங்களும் தொடங்கின.

 எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற எளிய விருப்பம் தலைதூக்கிய நாளில் எல்லோரையும்போல் கவிதை எழுதவே விளைந்தேன். என்றாலும், அது எனக்கான வடிவமில்லை என்ற தெளிவு பிறக்க, மிகச் சில மாதங்களே போதுமானதாக இருந்தது. மற்ற வடிவங்களைவிட ஒரு மொழியில் மேலதிகமான பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்துபார்க்க ஏதுவானதாக, என்னளவில் சிறுகதைகளையே நினைக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick