இறந்த பூனைக் குட்டியிடம் ஒரு மன்னிப்பு - மனுஷி

ஓவியம் : செல்வம் பழனி

பூனைக்குட்டிகளின் உலகத்திற்குள்
நத்தையைப்போல நகர்ந்து செல்கிறேன்.

எச்சில் சுவடுகளெங்கும் வெள்ளி இழைகள்
நீண்டு பெருக
சின்னஞ்சிறு குட்டிகளைத் தடவுகிறேன்.

அவை நக்கிச் சுவைக்க
எனது விரல்களைத் தருகிறேன்.

பால் வாசம் வீசும்
சின்னஞ்சிறு வாய்முகட்டினை முத்தமிட்டு
அவற்றை உறங்கச் செய்கிறேன்.

பிஞ்சுக் குரல்களெழுப்பி ஊர்ந்துவருகையில்
தேவதைகள்
பூனைக்குட்டிகளாகிவிட்டனவா என
அவற்றின் காதுகளில் கிசுகிசுக்கிறேன்

இந்த முறை
பூனைக்குட்டிகளுக்கு யாதொரு பெயரும் வைப்பதில்லை என
பூனைகளின் உலகத்தில் சத்தியம் செய்துவிட்டேன்.
பெயர்களற்ற அவற்றின் உலகத்திற்குள்
எனக்கும் பெயர் எதுவுமில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick