உடலின் அலைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் | Short Stories - Vikatan Thadam | விகடன் தடம்

உடலின் அலைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்

ஓவியம் : செல்வம் பழனி

லாய் சந்தேஷ் என்ற பெங்காலி ஸ்வீட்டை உங்களுக்குப் பிடிக்குமா?

நான் அதைச் சாப்பிடுவதே இல்லை. என் மனைவி ஸ்வீட் ஸ்டாலுக்குப் போகும்போது எல்லாம் ‘அது நன்றாக இருக்கும், வாங்கலாம்’ என்பாள். எப்படி அவளிடம் சொல்வது, மலாய் சந்தேஷ் என்பது வெறும் இனிப்பில்லை... அதன் பின்னே சொல்ல முடியாத நினைவுகள் சேர்ந்திருக்கின்றன என்று.

அப்போது நான் கரக்பூரில் வேலையில் இருந்தேன். அது ஒரு தொழிற்சாலை நகரம். இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.ஐ.டிகளில் ஒன்று கரக்பூரில் இருக்கிறது. அது ஒரு தனி உலகம். கரக்பூர், ரயில்வேயின் முக்கியக் கேந்திரம். நூறு ஆண்டுகளுக்கும் முன்பே அங்கே ரயில் நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது என்றார்கள். கரக்பூர் ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் இந்தியாவிலேயே மிகப் பெரியது. அங்கு உள்ள ரயில்வே பணிமனையில் வங்காளிகள், தெலுங்கர்கள், தமிழர்கள், பஞ்சாபிகள், பீகாரிகள் எனப் பல்வேறு மாநிலத்தவர் வேலை செய்கிறார்கள்.

கடும்கோடையும் கடும்குளிரும் கொண்ட ஊர் அது. இவ்வளவு தொழிலாளர்கள் வாழ்கின்றபோதும் அந்த ஊரில் பொழுதுபோக்கு விஷயங்கள் குறைவே. இரண்டே இரண்டு திரையரங்குகள். அதில், பெரும்பாலும் பெங்காலி அல்லது தெலுங்குப் படங்களைத் திரையிடுவார்கள்.

உள்ளூர் நூலகத்தில் பெரிதும் வங்காளப் புத்தகங்களே இருந்தன. கரக்பூரில் துர்கா பூஜை காலத்தில் இசை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்வலங்கள் நடப்பது உண்டு. சூதாட்டமே நகரின் முக்கியமான பொழுதுபோக்கு. தனியார் சூதாட்ட விடுதிகள் இருந்தன. அங்கே இரவெல்லாம் சீட்டாட்டம் நடக்கும்.

மற்றபடி என்னைப்போல அங்கு வேலைக்காக வந்துள்ள இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷம், குடியும் பெண்களும்தாம். இரண்டும் எளிதாகக் கிடைத்தன. அதிலும் குறிப்பாக, உள்ளூரில் காய்ச்சி விற்கப்படும் நாட்டுச் சாராயம் மலிவான விலையில் கிடைத்தது.

கரக்பூரில் நான், ஸ்டீல் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 25 கிலோமீட்டர் தள்ளி எங்களின் தொழிற்சாலை இருந்தது. ஆகவே, தங்கியிருந்த அறையிலிருந்து பைக்கில் போய்வருவேன். அந்த அறை எனது தொழிற்சாலையில் கணக்காளராக உள்ள வெங்கல்ராவுடையது.

அவன், கரக்பூரிலேயே ஒரு வங்காளப்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துவிட்டான். ஆகவே, அந்த அறையில் நான் தங்கிக்கொள்ளும்படி செய்தான். அறை என்று அதைக் கூற முடியாது. தனி வீடு. பழைய காலத்துக் கட்டடம். இரண்டு அறைகளும் ஒரு பெரிய ஹாலும் இருந்தன. ஹாலின் மேற்கூரை மிக உயரமானது. நீண்ட இரும்புக் குழலில் மின்விசிறியைப் பொருத்திஇருந்தார்கள். அறைகளின் சுவர்களில் செய்யப்பட்டிருந்த பூவேலைப்பாடுகள் நிறம் மங்கி, உதிர்ந்துபோயிருந்தன. தரையும் ஆங்காங்கே பெயர்ந்து குழியாகியிருந்தது. அகலமான ஜன்னல்கள். அதில், பச்சை வண்ணமடித்த ஜன்னல் கம்பிகள்.

இரண்டு ஜன்னல்களையும் திறந்துவைத்தால், கடற்கரையில் வீசுவதுபோலக் குபுகுபுவெனக் காற்று வீசும். வெயில் காலத்தில் அந்த ஜன்னலின் மீது போர்வையை நனைத்துப் போட்டுவிடுவேன். அது, கோடை வெக்கையைத் தடுக்கும் ஒரு வழி.

கரக்பூரில் எனக்கு நண்பர்கள் எவரும் இல்லை. உடன் வேலை செய்பவர்களில் தமிழ் பேசுகிறவர்கள் குறைவு. ஆகவே, தட்டுத்தடுமாறி தெலுங்கு பேசக் கற்றுக்கொண்டிருந்தேன். பெங்காலி பேசுவதற்கு வரவில்லை. ஆனால், சில வார்த்தைகள் புரிந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick