நத்தையின் பாதை - 3 - தன்னை அழிக்கும் கலை - ஜெயமோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் :எல்.ராஜேந்திரன்

றைந்த காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியுடன் எனக்கு ஒரு விருப்பு-விலக்க உறவு எப்போதும் உண்டு. அவருடைய பழைமையான சமூகநோக்கு மேல் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன். அவரை எளிமையான பக்திக் கதைகள் வழியாக தெய்வமாக ஆக்கும் போக்கை விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால், மரபை அறிவதற்கான நல்லாசிரியராகவும் அவரைக்கொண்டிருக்கிறேன். எப்போதும் நான் அறியாத, அறிந்திருக்கவேண்டிய ஏதோ ஒன்றை அவருடைய சொற்கள் சொல் கின்றன. முற்றிலும் புதிதாகத் திறக்கின்றன.

ஓர் உரையாடலில் அவர் சொல்லியிருந்தார். “எழுத்தாளர்கள் புதிய காலகட்டத்தின் பௌராணிகர்கள். இந்த யுகத்திற்குரிய விழுமியங்களை உருவாக்குவதே அவர்களின் பணி, அவர்கள் அகங்காரமில்லாமல் அதைத் தேடிச் செல்ல வேண்டும்” என்று. பத்தாண்டுகளுக்கு முன் இலக்கியத்தின் மீதே நான் நம்பிக்கையிழந்து ஏறத்தாழ ஓராண்டு காலம் எழுதாமலிருந்தேன். அந்தத் தருணத்தில் அந்த வரி நினைவிலெழுந்து ஓர் உலுக்கலை உருவாக்கியது.

புராணங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் நவீன இலக்கிய ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள முதன்மையான வேறுபாடு என்ன? பல புராண ஆசிரியர்களின் பெயரே தெரியவில்லை. பிறவற்றில் பெயர் மட்டும்தான் தெரியவருகிறது. அவர்கள் தங்களை முன்னிறுத்தவில்லை. தங்கள் பேசுபொருளாகிய சான்றோர்களை, மாவீரர்களை, மிகப்பெரிய மானுடத் தருணங்களை, அவை உருவாக்கிய விழுமியங்களை மட்டுமே முன்னிறுத்தினர். ஆனால், நவீன எழுத்தாளனின் அத்தனை படைப்புகளும் அவனையே மையமாகக்கொண்டிருக்கின்றன.

நவீன இலக்கியம் உருவாகிவந்தபோது எழுந்த மிகப்பெரிய சிக்கலே இதுதான். “படைப்பாளி, பிண அறுவை மேடைமேல் தன் சடலத்தை முன்வைக்கிறான்’’ என்றார் நவீனத்துவத்தைத் தொடங்கிவைத்த டி.எஸ்.எலியட். படைப்பாளி தன்னை அளவு கோலாக வைத்து உலகை ஆராய்வதும், தன் உள்ளத்தை நேரடியாக முன்வைப்பதும் மரபான வாசகர்களுக்கு ஒவ்வாமையை அளித்தது. அது ஒரு துடுக்கு, திமிர் என்றே அவர்கள் எண்ணினர். அந்தக் காலகட்டத்தில் மதம், தத்துவம், அதிகாரம் ஆகியவற்றின் முன்  இலக்கிய ஆசிரியன் கைகட்டி நின்றிருந்தான். அவர்களைப் போற்றி அவர்களின் ஆணைப்படி அவன் எழுதவேண்டியிருந்தது. இன்றும்கூட இலக்கியத்திற்கு வெளியே உள்ள பெரும்பான்மை மக்களுக்கு இலக்கியவாதி குறித்து இருக்கும் சித்திரம் இதுவே – பாராட்டிப் பிழைப்பவன், மதமும் தத்துவமும் அதிகாரமும் சொல்வனவற்றைத் தேனில் முக்கி விளக்குபவன். இலக்கியவாதி, தன் கருத்து என எது சொன்னாலும் “சொல்வதற்கு இவன் யார்?” என்ற கேள்வி நம் பொதுப்புத்தித்தளத்தில் தவறாமல் எழுவதைப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick