நெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: பிரேம் டாவின்ஸி

மகால மக்களை ஈர்க்கும் பேச்சாளர், குறைந்தபட்சம் இரண்டு நக்சல்பாரி இயக்க ஆதரவு இதழ்களுக்கு (மனிதன், செந்தாரகை) ஆசிரியராக இருந்தவர், மனித உரிமைப் போராளி, தொழில்சங்கத் தலைவர், நகர வளர்ச்சித் துறை எனும் அரை அரசு நிறுவனமொன்றில் (CIT) பணி புரிந்தவர், அந்தப் பணியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டவர், பிழைப்புக்கு முட்டைக் கடை  நடத்திய பார்ப்பனர், கட்சியிலிருந்து சற்றே ஒதுங்கி வாழ நேர்ந்தபோதெல்லாம் நிதி நிறுவனங்கள் சிலவற்றில் ‘மேனேஜராக’ இருந்தவர் எனப் பல பரிமாணங்களை உடையவர் தோழர் கோவை ஈஸ்வரன் அவர்கள். தமிழ்த் தேசியத்தில் தொடங்கியவராயினும் வாழ்வின் பெரும்பகுதியை அரசுகளால் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்ட நக்சல்பாரி இயக்கங்களோடு குடும்ப சகிதம் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்ந்தவர். இறுக்கமான கட்சிக்காரராகவே அடையாளம் காணப்பட்டபோதும் மிகவும் நெகிழ்ச்சியான சிந்தனை உடையவர். அதனாலேயே, எந்தக் கட்சிக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தாரோ, அந்தக் கட்சியாலேயே ‘குட்டி முதலாளிய அறிவுஜீவி’, ‘கிராமத்துக்குச் சென்று ஐக்கியமாகத் தயாராக இல்லாதவர்’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டபோது சற்றே நொந்துபோனவர். எனினும் தொடர்ச்சியாக இறுதிவரை பல்வேறு குழுக்களாகச் சிதைந்துபோயிருந்த நக்சல்பாரி இயக்கத்தை ஒருங்கிணைக்க முயற்சித்தவர்.

 அவரது வாழ்க்கை குறித்த ஓரளவு விரிவான பதிவாக நமக்குக் கிடைப்பது அவரது ‘தீராநதி’ நேர்காணல் (ஜூன் 2012) என்றுதான் நினைக்கிறேன். அவரின் அன்பு மனைவியும் உற்ற தோழருமான ரத்னா அவர்களை அவர் இழந்திருந்த நேரம் அது. மீனா, அந்த நேர்காணலைச் செய்தபோது, கூட இருந்தது நானும் ஈஸ்வரனின் மைத்துனரும், ரத்னாவின் சகோதரருமான பி.வி.சீனிவாசனும்தான். ‘பி.வி.எஸ்’ என அழைக்கப்பட்ட சீனிவாசனும் நக்சல்பாரி இயக்கத்துக்கெனத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்தான். சென்ற ஆண்டு மறைந்தார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick