முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மூகத்தின் நினைவுகளுக்கு உயிரூட்டி அது செயலூக்கம் கொள்வதற்கான சாத்தியங்களை நாடகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. எல்லா கலாசாரங்களிலும் நாடகத்துக்கு ஒரு தனித்த இடம் இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வடிவங்களும், செயல்பாடுகளும் மாற்றமடைந்துவருவதை நாம் பார்க்க முடியும். இன்றைய சினிமாகூட நாடகத்தின் ஒரு வடிவம்தான்.  ஆனால், அது தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கிறது. நாடகமோ என்றைக்கும் மனித உடலைச் சார்ந்திருக்கிறது.  உடல்களின் அசைவுகளும், ஓசைகளும் காலம்காலமாக மனித மனத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கின்றன.  அசைவுகளையும் ஓசைகளையும் அடிப்படையாகக்கொண்ட நாடகம் போன்ற நிகழ்கலைகள் பல்வேறு சுவையுணர்வுகளை எழுப்பிச் சமூகத்தில் பரவலாக மதிப்பீடுகள் உருவாகக் காரணமாக அமைகின்றன. ராமாயணம், மகாபாரதம் போன்ற நம்முடைய காப்பியங்களின் கதையாடல்கள் கூத்து போன்ற நாட்டுப்புற நிகழ்வடிவங்களில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே அக்காப்பியங்களின் கலாசார மதிப்பு பரவலாக ஊடுருவிச் சென்றுள்ளதை நாம் பார்க்க முடியும்.

இன்று நாடகத்தின் களன் மாறியுள்ளது.  தனிமை, மனஅழுத்தம், உறவுகளின் சிதைவு, மரணபயம் இவற்றால் பீடிக்கப்பட்டுள்ள தனிமனிதனுக்கு ஸ்பரிசம் மற்றும் கூட்டுணர்வுக்கான தளங்களை நாடவேண்டிய தேவை உள்ளது. அண்மையில் மெரினாவில் கூடிய இளைஞர்களின் சங்கமத்தை இத்தகைய ஒரு தேவையின் வெளிப்பாடாகவே நாம் பார்க்கமுடியும்.  இன்று ஒற்றைக் குரல்களின் ஆதிக்கங்களும், அபாயங்களும் பெருகியுள்ள நிலையில் பன்மைக் குரல்கள் மற்றும் சிறுகதையாடல்கள் செயல்படும் தளம் குறித்த தேவை அதிகமாக உள்ளது. அண்மையில் காஷ்மீர் இளைஞர்களின் எதிர்ப்புக் குரல்கள் குறித்த ஓர் ஆவணப்படத்தில் ஓர் இளம்பெண் இசைத்தன்மையுடன்கூடிய ஒரு பாடலை முழக்கமிடும்போது ஒரு பெரும் ஒருங்கிணைப்பு உருவானதைப் பார்க்க முடிந்தது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் கலாசாரப் பிடிப்புகள்கொண்ட மனிதவள மேம்பாடு குறித்த விழிப்புஉணர்வு பரவலாகி வருகிறது. சமூகம் மேலும் மேலும் தொழில்நுட்பத்தைச் சார்ந்துவரும் நிலையில், மனிதன் தன்னுடைய உடலின் உள்ளார்ந்த ஆற்றல்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான களன்களை நாடவேண்டிய தேவை உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick