உப்பு நிலத்தில் தனித்தலையும் முத்தம் - பூர்ணா | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

உப்பு நிலத்தில் தனித்தலையும் முத்தம் - பூர்ணா

ஓவியம்: கருப்பசாமி

நீலம் ஏறிய நெடுந்திரையில்
வலை மீன் போன்று துள்ளும் துயில்
புங்கைப்பூக்கள் குவிந்த நிழலென்றபோதிலும்
நீயின்றி வெயிற் போற்றும் ஏகாந்தம்
மீன் ஊறுகாயாய் நாவில் ஊறும் நினைப்பு
உப்பிட்டு உலரும் மீனொத்து
சொற்கள் பூசி வெயில் காயும்பொழுது
மீன் கொழுப்பினால் சமைந்த நெய்யைக் கிளிஞ்சலில் நிரப்பி
இரவு திறக்கப்பட்டது அப்பொழுது.
இரவு தொண்டையில் மீன் முள்ளாய் இப்பொழுது
விழித்தெழுந்த புலரியில் ஆகிருதியெங்கும்
மீன் கவுச்சியாய் உன் வாசனை
நொய்மணலின் மீன்கள் குன்றில்
முந்தைய கங்குலின் பிரியங்கள்
இற்செறிப்பு ஆண்மைக்கும் நடக்கும்
நாரையின் வளர்ந்த காலடியில்
குளம் தொலைந்து
நீந்தும் கானல்மீன்
மீனவனுக்காக மீனவச்சியின் அந்தி
தாழை மரத்தின் நுனிக்கிளையில்
அமர்ந்திருந்தது
துப்பாக்கிக் குண்டுச் சப்தத்தில்
அதிர்ந்து விழுந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick