இந்த நாள் உன்னைப் பற்றி எழுதச் சொல்கிறது - வேல் கண்ணன்

முன் அந்தியில் பேரலைகளைக் கண்டு வியந்த இத்தருணத்தில்
முதல்முறை கைகளைப் பற்றிக்கொண்டதை நினைத்துக்கொள்கிறோம்.
நதியின் குளிர்மை வானமெங்கும் விரவியிருப்பதை உணர்கிறோம்.
கீச்சொலிகளின் சங்கமம் சிற்றோடையின் ரீங்காரத்தைக் கடத்துகின்றன.
தூய மெல்லுடலின் கனிவு முன்பனியை மலர்த்தியது.
மோனத் தகிப்பு நிலமெங்கும் புனைவதைத் தேகச் சூடு உணர்த்துகிறது.
மேனியெங்கும் மேவிய விழி வருடல் ரோமங்களில் மீச்சிறு துளியை உதிர்க்கிறது.
வார்த்தை தள்ளாடுகையில் தூவலாய் தெளிக்கிறது கதகதப்பான பசலை.
சர்ப்பம் நிகர்த்த பெருமூச்சு நம்மிடையேயான இடைவெளியைச் சுக்குநூறாய் நொறுக்குகிறது.
விரல் சேர்ப்பில் செவ்வந்தி தளர்ந்து இருள் போர்வையில் ஒடுங்குகிறது.
இந்நாள்வரை துயின்ற மழையொலி சிலிர்த்து எழுகிறது
பிழம்பின் பொறிகளென.
இரவின் பேருரு
தீண்டலற்ற
தனிமையின் அகாலத்தை அசை போடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick