இசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை - அனார் | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

இசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை - அனார்

வெண் சாம்பலின் நினைவிலிருந்தது
இசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை

ஒற்றையாய் சுவரில் சாய்ந்தும்
இருவர் இறுக்கமாய் சாய்க்கப்பட்டும் நிற்கும்போது
பரிசுத்தமான ஒளியில்
தாழ்ந்து…..
ஆழம் சென்று மீள்கிறோம்

தன்னை சிலாகித்தபடியே
மற்றொரு சமமான செருக்குமிகும்
பதிலீட்டை.
எச்சிலால் கோர்க்கிறான்
கர்வமிகும் பெண் உதடுகளுக்கு

மூடியிருந்த முத்தத்தை
பிரித்தெடுத்த ஒளித்திரவத்தை
சுவரில் தெளிக்கிறாள்

சூஃபியின் தனித்த புல்லாங்குழலிலிருந்து வழியும்
தனிமையின் பித்து
புனிதத் தவப்பெருக்கின் உயிரை
அப்படியே சாரமாய் சுவருக்கு ஊதுகிறது

அவளோடு சேர்த்து இசையையும்
உறிஞ்சுகிற சுவரில்
செவிவைத்துக் கேட்டால்
சூஃபி
சுவருக்குள்ளிருந்தே
இசைத்துக்கொண்டிருப்பார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick