வீழ்ந்துபடும் சூரியனும் - கார்த்திகா முகுந்த்

ஓவியம் : செந்தில்

காலை நடைப்பயிற்சிக்குச் செல்லும் பூங்கா அது.
அலுவலகம் சென்றுவரும் பரிச்சயமான வழி அது.
அன்றாடம் பல நூறு வாகனங்கள் கடந்து செல்லும் பாதை அது.
கலையோ கட்டடமோ என
செந்நிறச் சுவர்களுடன் மையத்தில் நிற்கும் 
மிகப்பழைய நூலகம்.
மாலையில் தந்தையருடன் குழந்தைகள் விளையாடும் பூங்கா அது.
சுற்றுலாப் பயணிகள் தவறவிடாத இடம் அது.
பள்ளிப் பிள்ளைகள் பேருந்தில் – தம்
ஆசிரியர்களுடன் வரும் இடம் அது.
மனம் கவரும் பூஞ்செடிகள் அழகு சிந்தும் இடம் அது.
கோடைகளில் நிழல் பரவும் பெருமரங்கள் நிறைந்திருக்கும் இடம் அது.
நாளைய நிழல் தரும் தருக்களை விற்கும்
நாற்றங்கால்களைக் கொண்ட இடம் அது.
நேற்று முன்தினம் என் சிறு மகளோடு
செல்லநடை பயின்ற இடம் அது.
யாரோ ஒருவரின் செல்ல மகளாக வளர்ந்துவிட்ட பெண் அங்கு
சிதைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் ஏதுமற்று
பசிய வெளிச்சத்தில் பொலிந்து நின்றது.
இத்தனை நாள் நான் அறியவில்லை –
இரவுக்கு வேறு முகம்
இரவுக்கு வேறு குணம்
இப்போது அங்கு உதிர்கிற
இலைகளின் மலர்களின்
சாயல் கொஞ்சம் மாறிவிட்டது.
இன்று அவ்விடத்தைக் கடக்கையில் கண்டேன்
நடுங்கிக்கொண்டு வீழ்ந்த ஒரு சூரிய கிரணத்தை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick