செவ்வகம் - ஜான்சுந்தர்

ஓவியம் : மணிவண்ணன்

செவ்வகத்திலிருந்து வருவதால்
நானுமோர் செவ்வகனாகிறேன்
கட்டில் மரத்தூளியெனவான
செவ்வகங்களில் ஜனித்து
செவ்வக நிலவும்
செவ்வகக் கதவுமுள்ள
செவ்வக வீட்டின்
செவ்வகத் திண்ணையிலிருந்து
செவ்வகப் பையில்
செவ்வகச் சிலேட்டு
செவ்வகப் புத்தகஞ்சுமந்து
செவ்வகப் பள்ளியின் 
செவ்வக மைதானத்தில் துள்ளி
செவ்வகக் கோப்புகள்கொண்ட
செவ்வக அலமாரிகள் சூழ்ந்த
செவ்வகக் கணினி வைத்த
செவ்வக மேசையை அடைந்து
செவ்வகக் கைப்பேசியில்
செவ்வக ஆணைகளிடுவேன்
செவ்வகக் கட்டடங்களின்
செவ்வகச் சன்னல்களில்
செவ்வகச் சூரியன் மறைந்து
செவ்வகச் சாலைகளில்
செவ்வக விளக்குகள் ஒளிர
செவ்வகத் தலைப்பாகைச் சிப்பந்தி
செவ்வகத் தட்டில்
செவ்வக லேபிள் ஒட்டிய
செவ்வகப் போத்தலைக் கொணர்வான்
செவ்வகத் தொலைக்காட்சியில்
செவ்வக லஞ்சம் குறித்த செய்திகளை
செவ்வகச் சிப்பங்களுடன் அருந்திக்கொறித்து

ஆனதும்
செவ்வகச் சிட்டைக்கு
சிப்பந்திச் சட்டையின் செவ்வகப் பையில்
சிச்சிறு செவ்வகங்களைத் திணிக்க
செவ்வகமாகும் அவன் சிரிப்பு
செவ்வகக் கொடிகள் படபடக்க
செவ்வக வூர்திகள் பரபரக்கும்
செவ்வகக் கட்டடங்கள் நிறைந்த
செவ்வக நகரமோ
முக்கோணமும் வட்டங்களுமான ஸ்த்ரீக்களை
செவ்வகத்தாலடித்து செவ்வகத்திலடைத்து
செவ்வகத்தில் சரிப்பதை செவ்வனே செய்கிறது
வட்டரே கட்டஞ்சதுரரே நீவிர்
செவ்வக அட்டையுரசி
செவ்வகப் பணமெடுத்து
செவ்வகங்களில் கொடூரங்களை
கொட்டிச்சேர்த்த பின்பு
செவ்வகப்படங்கள் முன் பாவனையாய்
செவ்வக முதுகு வளைத்து கைகூப்பி
சேவித்தும் ஆவதென்ன
சர்வ நிச்சயந்தானே சகலருக்கும்
அகலமும் நீளமுமானதொரு ஆறடிச்செவ்வகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick