அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்

ஓவியங்கள் : செந்தில்

சிலம்பு ஊருக்குத் திரும்பியபோது ஊரைச் சூழ்ந்திருக்கும் காட்டிலிருந்த மரங்கள் இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. நாகத்தோப்பில் இருக்கிறவர்களிலேயே சிலம்பு ஒருவன்தான் இங்கு ஆறுமாதமும், ரெட்டித்தோப்பில் ஆறு மாதமும் இருப்பவன்.

நாகத்தோப்பில் உள்ள பலரும் பெங்களூருக்கும் திருப்பூருக்குமாக வேலை தேடிப் போய்வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அவர்களில் யாருடைய போக்குவரத்திலும் சிலம்புவின் காலக்கிரமத்தையோ ஒழுங்கையோ பார்க்க முடிவதில்லை.

அவன் ஊருக்குள் வருகிறான் என்றால், சனங்கள் அதைப் பங்குனி மாதம் என்று நிச்சயமாகச் சொல்லிவிடுவார்கள்.பிற்பாடு மீண்டும் ஆம்பூருக்குப் போவதற்கான தனது முஸ்தீபுகளை மேற்கொள்கிறான் என்றால், அது காற்றடிக் காலத்துக்குப் பிந்தைய ஆவணி. பல ஆண்டுகளாக இது மாறியதில்லை.

அன்று காலையில், முகத்தில் படியும் பக்குவத்தில் வெயில் இருந்தபோது, மேட்டுப்பள்ளி நாலுவழிச் சாலையில் டவுன் வண்டியில் வந்து இறங்கி, ஊரைப் பார்த்து நடந்தான் சிலம்பு.அந்த இடத்திலிருந்து தொடங்குகிற காட்டு வழியில் நாகத்தோப்புக்குப் போகவேண்டுமென்றால், மூன்று மைல் நடக்க வேண்டும்.

நேற்று அவன் ரெட்டித்தோப்பில் இருந்தான். மேகராணி அவனுடன்  பேசியதிலிருந்து அவன் மனம் அஞ்சனாவதியின் மீது அதிகப்படியான வாஞ்சையைக்கொண்டுவிட்டிருந்தது.சிலம்புடன் இரண்டு நாள்களுக்கு மனத்தாங்கலாக இருந்த மேகராணி, அவனை நேருக்கு நேர் முகம்கொண்டு பார்த்ததும்  ‘களுக்’கெனச் சிரித்துப் பேசிக்கொண்டாள்.

“உங்கூட இந்த ரெண்டு நாளைக்கிப் பேசாம இருந்தது ஏதோ ஆயுசு முழுசும் இருந்த மாதிரியில்ல இருக்கு?”

சிலம்புவுக்குச் சுருக்கென்றது. மேகராணியின் சொற்கள் அவனை முட்டித்தள்ளி தலைக்குள்ளிருந்த எதையோ ஒன்றைத் திறந்துவிட்டன. இம்முறை ஊருக்குப் போகும்போது அஞ்சனாவதியிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும்.தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick