காமிய தேசத்தில் ஒரு நாள் - ஆதவன் தீட்சண்யா

ஓவியம் : ரமணன்

அதிகாலை 2.31 மணி.

திகாரபூர்வமாக கண் விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டித் தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாக நகரும் நோவாகித் தன்னைப் பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான்.

நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32 மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது அந்நேரம்தான் என்பதால், சாலைகளில் மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல். திருத்தியமைக்கப்பட்ட புதிய வேலைநேரம் அமலுக்கு வந்த கடந்த 18-ம் தேதியிலிருந்து இதே அக்கப்போர்தான். வேலைக்கு வரும்போதும் திரும்பும்போதும் சாலையின் ஒவ்வோர் அங்குலத்திலும் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. புகையும் அழுக்கும் படிந்த உடம்பை நசநசப்புத் தீரக் கழுவிக்கொள்ளவும் முடியாத அசதி. தூளியில் உறங்கும் குழந்தையின் முகத்தைக்கூட பார்க்கத் தோன்றவில்லை. சாப்பிட்டு முடித்த கையோடு படுக்கையில் விழும்போது மணி ஒன்றைத் தொட்டிருந்தது. உடலும் மனமும் இயல்புக்குத் திரும்பினால்தானே ஆழ்ந்த உறக்கத்திற்குள் செல்ல முடியும்? ஆனால், அதற்குள்ளாகவே நேரம் தீர்ந்து பதறியடித்துக்கொண்டு விழிக்க வேண்டியதாகிவிட்டது.

படுக்கைக்கு நேர் மேலே கூரையின் உட்புறத்தில் பதிக்கப்பட்டிருந்த டிஜிட்டல் கடிகாரம் 2.31 மணி எனக் காட்டியது. மல்லாந்து படுத்திருந்தால் பார்க்கத் தோதானது அது. எந்தப் பக்கம் திரும்பினாலும் பார்ப்பதற்காக நாற்புறச் சுவர்களிலும் பதிக்கப்பட்டிருந்த கடிகாரங்களும் அதே நேரத்தைத்தான் காட்டின. அடுத்த 29-வது நிமிடத்தில் அவை எழுப்பப்போகும் ஒலிக்காக அவன் காத்திருக்கத்தான் வேண்டும். அதிகப்படியான நேரம் தூங்குவதைப்போலவே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாகக் கண்விழிப்பதும் அரச நிந்தனை என்பதை அறியாதவனல்ல அவன். அந்தக் குற்றத்திற்குரிய அபராதத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் தப்பிக்கும் உபாயமாக, தான் இன்னமும் தூங்கிக்கொண்டிருப்பதாகவே நினைத்துக்கொண்டான். மட்டுமன்றி, அவன் தானே தன்னை நம்புவதற்காக வேண்டுமேன்றே செயற்கையாகக் குறட்டைவிடவும் பழகியிருந்தான். ஆனால், தூங்கிவிடக் கூடாது என்பதில் கவனம் தோய்த்து அலாரத்திற்காகக் காத்திருந்தான்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick