நாம் என்ன செய்யப் போகிறோம்? - ஃபைஸ் அகமது ஃபைஸ் | Foreign literature Poetry in Tamil - Vikatan Thadam | விகடன் தடம்

நாம் என்ன செய்யப் போகிறோம்? - ஃபைஸ் அகமது ஃபைஸ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தமிழில்: ரவிக்குமார்

ண்ணற்ற ஏக்கங்கள்
சமைந்து கிடக்கின்றன
உனது விழிகளில் எனது விழிகளில்
வகிரப்பட்ட இருதயங்கள்
திருகிக்கொண்டு கிடக்கின்றன
உனது தேகத்தில் எனது தேகத்தில்
மரத்துப்போன விரல்கள்
செயலற்ற எழுதுகோல்கள்
விறைத்துச் சிதைந்த மனங்கள்
நமது விருப்பத்துக்குரிய நகரின்
ஒவ்வொரு வீதியிலும்
சமாதியாக்கப்பட்டுள்ளன
உனது தடங்கள் எனது தடங்கள்

நமது இரவு விண்மீன்கள்
திறந்த புண்கள்
நமது காலை ரோஜாக்களின்
உதிர்ந்த இதழ்கள்
இருட் காற்று சூறையாடி
பிய்த்தெறியப்பட்ட விழித்திரைகள்
குணப்படுத்த முடியாதவை
நமது வாதைகள்
ஆற்ற இயலாதவை
நமது காயங்கள்
சிலவற்றின் மீது
நிலவின் சாம்பல்
வேறு சிலவற்றின் மீது
காலைப் பனியின் ரத்தம்
இது நிஜமா?
இது பிரமையா?
இது
உனது எனது மூடநம்பிக்கையெனும்
சிலந்தி பின்னிய வலை மட்டும்தானா?

இது உண்மையென்றால்
நாம் என்ன செய்யப்போகிறோம்?
இது உண்மையில்லையென்றால்
நாம் என்ன செய்யப்போகிறோம்?
எனது புத்தியில் கூர் ஏற்று.
எனக்குப் புரிதலை உண்டாக்கு.
சொல்!

தாலாட்டு

அழாதே மகளே
அழுது அழுது உன் அம்மா
இப்போதுதான் உறங்கப்போனாள்
அழாதே மகளே
சற்று முன்னர்தான் உன் அப்பா
வேதனையிலிருந்து விடுதலை பெற்றார்

அழாதே மகளே
கனவுகளின் பட்டாம்பூச்சிகளைத் துரத்திச் சென்ற
உன் சகோதரன் வெகுதூரம்
இன்னொரு நாட்டுக்குப் போய்விட்டான்
அழாதே மகளே
உன் அக்காவின் திருமண வண்டி
அன்னிய நாட்டுக்குச் சென்றுவிட்டது
அழாதே மகளே
செத்துப்போன சூரியனைக் குளிப்பாட்டுகிறார்கள்
உனது முற்றத்தில்
நிலவை இப்போதுதான் நல்லடக்கம் செய்தார்கள்
அழாதே மகளே
அம்மா, அப்பா, அண்ணன், அக்கா
சந்திரன், சூரியன் எல்லோரும்
உன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நீ அழுதால் அவர்கள் உன்னை மேலும் அழச்செய்வார்கள்
நீ புன்னகைத்தால், சிலவேளை
அவர்கள் எல்லோரும் ஒருநாள் வேறோர் உருவில்
உன்னோடு விளையாட வருவார்கள்

தனிமை

யாரோ கதவுக்கு அருகில், நெஞ்சே!
ஆனால், இல்லை எவரும் இல்லை
அது யாராவது வழிப்போக்கனாக இருக்கலாம்
அவன் போவான் தளர்ந்து கஷ்டப்பட்டு தனது வழியில்
இரவு கரைந்து
ஆவியாகிக் கலந்தது மெல்லிய காற்றில் நட்சந்திரங்களால் ஒளிரும் மேகங்களில்
அரண்மனைகளில் தங்கச் சங்கிலிகளில் தொங்கும்
விளக்குகளில் நடுங்குகின்றன சுடர்கள்
தனித்த பாதைகள் மூழ்குகின்றன அவநம்பிக்கையில்
நேசமின்மையின் தூசு
அழிக்கிறது பாதத் தடங்களை
தனிமையின் கசந்த மதுவை
கோப்பைகளில் நிரப்பு மண்டி வரை அருந்து
உனது உறக்கமற்ற கதவுகளைப் பூட்டு. அன்பு நெஞ்சே!
எவரும் திரும்ப வர மாட்டார்கள்
இனி

பேசு

பேசு – உன் உதடுகள் சுதந்திரமானவை
பேசு – உனது நாக்கு இன்னும் உன்னுடையதாகத்தான் இருக்கிறது
பிரமாண்டமான இந்த உடல்
இன்னும் உன்னுடையதுதான்.
பேசு – உனது வாழ்க்கை உன்னிடம்தான் இருக்கிறது
உலைக்கு உள்ளே பார் – தாவும் தீக்கொழுந்துகள், பழுத்து சிவந்த இரும்பு.
விலகுகிறது தாழ்ப்பாள் திறக்கின்றன தாடைகள்
உடைகின்றன சங்கிலிகள்
பேசு – நேரம் கொஞ்சம்தான் இருக்கிறது
கொஞ்சம்தான் இருக்கிறதெனினும்
அது போதும்
நேரம் போதும்
உடல் மட்கிப்போவதற்கு முன்னால்
நாக்கு துவண்டுபோவதற்கு முன்னால்
பேசு – இன்னும் உயிர்த்திருக்கிறது உண்மை
பேசு நீ பேச வேண்டியதைப்
பேசு.


ஃபைஸ் அகமது ஃபைஸ் (1911-1984): மேற்கு பஞ்சாப்பைச் சேர்ந்த சியால்கோட் என்னுமிடத்தில் பிறந்த ஃபைஸ், கல்லூரிப் படிப்பை முடித்து பிரிட்டிஷ் ஆட்சியின்போது ராணுவத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். 1947-ல் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பின்னால் நிறுவப்பட்ட ‘பாகிஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1951-ம் ஆண்டு ராவல்பிண்டி சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த ராணுவப் புரட்சிகளும் ஆட்சிக் கவிழ்ப்புகளும் பத்திரிகை நடத்தும் சூழலைக் கெடுத்துவிட்டதால், திரைத் துறைக்குள் நுழைந்தார். கதாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராகத் தனது முத்திரையைப் பதித்தார். பாகிஸ்தான் அதிபராக இருந்த பூட்டோ தூக்கிலிடப்பட்ட பின் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி 1978 முதல் 1982 வரை பெய்ரூத்தில் தங்கியிருந்து, அங்கிருந்து வெளிவந்த ஆப்பிரிக்க, ஆசிய எழுத்தாளர்களின் பத்திரிகையான ‘லோட்டஸ்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். யாசர் அராபத்தின் நெருங்கிய நண்பராக இருந்த ஃபைஸ் 1984-ல் காலமானார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick