நத்தையின் பாதை - 7 - இருண்ட சுழற்பாதை - ஜெயமோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

1987, கேரளத்தில் இடைவெளியில்லாமல் மழை பெய்யும் ஜுன் மாதம், காசர்கோடு அருகே கும்பளா என்னும் சிற்றூரில் ஒரு பழைய வாடகை வீட்டில் நான் தங்கியிருந்தேன். முற்றத்தில் நின்றால் கடலைப் பார்க்க முடியும் என்பது அந்த வீட்டின் மீது எனக்குக் கவர்ச்சியை உருவாக்கியது. மிகப் பழைய மரச் சாமான்கள், அவற்றினூடாக இரவெல்லாம் ஓசையிட்டுக்கொண்டிருக்கும் எலிகள், எப்போதும் மாறாத இருட்டு என அதற்குள் வாழ்வதை ஒரு வகை தவம் என்று எனக்குக் காட்டிய பிற சில கவர்ச்சிகளும் இருந்தன. இன்று நோக்குகையில், அவை ஆழ்ந்த உளச்சோர்வு நோயின் அறிகுறிகள் என்றே தோன்றுகின்றன. ஒருவேளை உளச்சோர்வும் படைப்பூக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாகக்கூட இருக்கலாம். சோர்வும் கொந்தளிப்பும் மாறி மாறி அலையடித்த அந்தக் காலத்தில்தான் வெறிகொண்டு படித்திருக்கிறேன். இரவும் பகலும் நகரில் சுற்றியலைந்திருக்கிறேன். பொருளற்றவை, பொருள்மிக்கவை என எழுதிக் குவித்திருக்கிறேன். எழுத்தாளன் என்று என்னை உணரும் இடம் வரை வந்துசேர்வதற்கு, அந்த இருண்ட சுழற்பாதை உதவியிருக்கிறது.

மழையைப் பார்த்தபடி, திண்ணையில் அமர்ந்து அத்தொகுதியைப் புரட்டியபோது, சாமர்ஸெட் மாஃம் எழுதிய ‘The Rain’ என்னும் கதையைக் கண்டேன். ஒரு கீழைநாட்டுக்  கடற்கரையில்  கொள்ளைநோய் காரணமாகத் தடுத்துவைக்கப்பட்ட கப்பலில் கதை நிகழ்கிறது. கடும் நோன்புகொண்ட பாதிரியார் ஒருவரின் கதை, அவரைக் கூர்ந்து நோக்கும் சகபயணியின் விழிகளினூடாகச் சொல்லப்படுகிறது. அக்கப்பலில் வந்து தங்கும் ஒரு விலைமாதால் பாதிரியார் சீண்டப்படுகிறார். அவளைத் திருத்த முயல்கிறார். இருண்ட புகை படிந்த அவளின் ஆன்மாவைத் தன் பிரார்த்தனையால் தூய வெண்மை கொள்ளச் செய்தேன் என அவர் மகிழ்கிறார். ஆனால், சில நாள்களில் அவர் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு இறந்துபோகிறார். விலைமாது மீண்டும் பழையவளாக ஆகிறாள். சிரித்தபடி “ஆண்களாகிய நீங்கள் அனைவருமே ஒன்றுதான்” என்கிறாள்.

அந்த எளிய மனிதரின் நோன்பு, காமத்தால் - அதைத் தன் உள்ளங்கையில் ஏந்தி வந்த அகங்காரத்தால் முற்றிலும் தோற்கடிக்கப்படுவதன் கதை அது. ‘நான் புனிதன்’ என்பவனை, காமம் தீயாகச் சூழ்ந்துவிடுகிறது. பேயாகப் பிடரியில் ஏறி அமர்ந்துவிடுகிறது. நூலை அப்படியே ஈரத் தரையில் வீசிவிட்டு, எழுந்து உடல் நடுங்க நின்றதை நினைவுகூர்கிறேன். பின்னர் மழையில் இறங்கிக் கடற்கரைக்குச் சென்றேன். ஐந்தடிக்கு அப்பால் எதுவும் தெரியாத மழையில் கொந்தளிக்கும் கடற்கரை மணலில் கால்புதைய கைகளைக் கட்டி தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick