நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால்... - ந.முருகேசபாண்டியன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

னது பத்தாவது வயதில் தற்செயலாக வாசித்த குழந்தைகளுக்கான நாவலொன்று ஏற்படுத்திய விநோத அனுபவம் இன்று வரையிலும் தீரவில்லை. புதிய நாவலின் அட்டையைப் பார்த்தவுடன் மனதில் கொப்பளிக்கிற உற்சாகம் அளவற்றது. ஒரு தீவிரமான நாவலை வாசித்து முடித்தவுடன், பித்துப் பிடித்ததுபோல வேறு உலகிற்குள் பயணிக்கத் தொடங்குவதற்கான காரணம் இன்னும் புலப்படவில்லை. நாவல் இலக்கியக் கதையாடல் ஏன் இவ்வளவு கவர்ச்சிகரமாக இருக்கிறது? அண்மையில் கடலூரில் நடைபெற்ற ஆம்பல் இலக்கியக்  கூட்டத்தில் எனக்கு முன்னர் பேசிய நாவலாசிரியர் சு.தமிழ்ச்செல்வி, “ஒவ்வொரு நாவலை எழுதி முடித்தவுடனும், அதிலிருந்து வெளியேறும்போது, நான் வேறு ஆளாக மாறிவிடுகிறேன்” என்றார். அவருடைய கூற்று, வாசகர்களுக்கும் அப்படியே பொருந்தும். நாவல் என்பது காப்பிய வடிவத்தின் நீட்சி என்றாலும் நவீன வாழ்க்கையின் முரண்/இசைவு, நாவல் சித்திரிக்கிற உலகில் நுட்பமாக வெளிப்படுகின்றன. நாவல் இல்லாத உலகினை என்னால் ஒருபோதும் கற்பனை செய்ய இயலவில்லை. நாவல் தருகிற போதைக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால், அதிலிருந்து மீள்வது சிரமம். இன்று உலகம் முழுக்க நாவல்கள்தான் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. இது ஒரு நாவல் காலம் என்பதில் எனக்கு முழுக்க உடன்பாடு. 1879-ம் ஆண்டு முதலாகத் தமிழில் வெளியான நாவல்களை அணுகினால், அண்மைக்காலத்தில் பிரசுரமாகிற நாவல்கள், ஒப்பீட்டளவில் காத்திரமானவை. இளையர்கள் தங்களுடைய முதல் நாவலாக்கத்திலேயே பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். வேறுபட்ட கதையாடல்களுடன் வெளியாகிற தமிழ் நாவல்கள், உலகத்து நாவல்களுடன் போட்டியிடுகிற வகையில் உள்ளன. அண்மையில் பிரசுரமாகியுள்ள குறிப்பிடத்தக்க நாவல்களில் எனக்குப் பிடித்த ஐந்து நாவல்களைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒருவகையில் சவால்தான். வாசித்து முடித்தவுடன் எனக்குள் மிதக்கிற ஐந்து நாவல்களை வகைமாதிரிகளாக இங்கே குறிப்பிட்டுள்ளேன். இந்தப் பட்டியலின் நீட்சியாக இடம்பெறத்தக்க அளவில், நாவல்கள் இன்னும் கணிசமாக இருக்கின்றன. இணையத்தின் பயன்பாடு காரணமாக உலகமெங்கும் இலக்கியத்தின் செயற்பாடுகளைக் கண்டறிவது இளைஞர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. குடும்பக் கதையாடலுக்கு மாற்றாகப் புதிய போக்குகளுக்கு முக்கியத்துவம் தருகிற பிறமொழி நாவல்களை வாசிக்கிற படைப்பாளரால் தமிழ் நாவலின் போக்குகள்  மாறியுள்ளன.

ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன் 

புலம் பெயர்ந்தவர்களின் வலியையும் அவலத்தையும் முன்னிலைப்படுத்தும் புனைவுகள் வெளியான காலகட்டத்தில், சரவணன் சந்திரனின், ‘ஐந்து முதலைகளின் கதை’ நாவல் சித்திரிக்கிற உலகம் தமிழுக்கு மிகவும் புதிது. காட்சி ஊடகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த சரவணன் சந்திரன் சர்வதேசப் பின்புலத்தில் அரசியலை முன்வைத்து எழுதியுள்ள முதல் நாவலான ‘ஐந்து முதலைகளின் கதை’, வாசிப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தெற்காசியாவிலுள்ள தைமூர் நாட்டில் தொழில் தொடங்கி, அந்த நாட்டின்  பொருளியல் வளத்தைச் சுரண்டலாம் எனத் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய கதைசொல்லியின் அனுபவங்கள் தனித்துவமானவை. காலனியாதிக்கத்தின் கீழ் பல்லாண்டுகள் கடுமையாகச் சுரண்டப்பட்ட தைமூரில் மக்களின் வாழ்க்கை மோசமான நிலையில் உள்ளது. அந்த நாட்டின் இயற்கை வளத்தைக் கொள்ளையடிப்பதற்காகப் பன்னாட்டு முதலீட்டாளர்கள், இரையை விழுங்கிட அலைகிற முதலைகளாக நுழைகின்றனர். அடுத்தவேளை உணவிற்காகச் சிரமப்படுகிற மக்கள் நிரம்பிய நாட்டில், முதலீடு என்ற பெயரில் கொடூரமான செயல்கள், வரன்முறையற்று நிகழ்த்தப்படுகின்றன. துரோகம் என்பது இயல்பானதாகக் கருதப்படுகிற சூழலில், எப்படியாவது பணத்தைக் குவித்திட பண முதலைகள் துடிக்கின்றன. மார்க்ஸிய ஆசான் மார்க்ஸ்  ‘மூலதனக் கொடுங்கோன்மை’ எனச் சொன்னது இங்கு முழுக்கப் பொருந்துகிறது. கதைசொல்லி, தைமூரில் செழிப்புடன் இருக்கிற தொழில் முனைவர்களான முதலைகளுடன் கூட்டுச் சேர்ந்து செய்கிற ஒவ்வொரு முயற்சியிலும் தடங்கல் ஏற்படுகிறது. கடல் அட்டைகள், காஃபி லூவாக்,  கூட்டு உழவாரன் பறவைக் கூடு எனத் தேடியலைகிற வாழ்க்கையில், பொருளீட்ட முயலுவதைத் தவிர்த்து, ஒழுங்கு எதுவும் இல்லை. தொழில், முதலீடு என விரிந்திடும் புதிய காலனியாதிக்கத்தில் சக முதலீட்டாளர்களுடனான உறவென்பது நம்பிக்கைத் துரோகம், வஞ்சகம், கொண்டாட்டம், காமம், வெறுப்பு என உருமாறுகிறது. எங்கும் முதலைகள் வாயைப் பிளக்கின்றன. அவற்றின் வாய்களில் வைரச் சுரங்கங்களும் எண்ணெய்க் கிணறுகளும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick