நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர் | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்... - ஷங்கர்

ஓவியங்கள்: செந்தில்

ருத்தியின் சந்தை மதிப்பை நிர்ணயிக்கும்
புராதன கோயிலொன்றைக்கொண்ட ஊர் அது
பெரும்பாலும்
விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாத நாட்களை
அவர்கள்
திண்ணையில் டிரான்சிஸ்டரோடு கழிப்பது வழக்கம்
கொட்டத்துப் பசுக்கள் கயிறுகளில் திமிறிக்கொண்டிருந்தன
மண் சுவர்களையொட்டிய பந்தலில்
வளரும் புடலைகளின் நுனியில் கற்களைக் கட்டுவது
குடும்பப் பெண்களின் வழக்கம்
தயிர்க் கிழவி வாரமொருமுறை
மச்சுவீட்டில் வசிப்பவர்களுக்கு நெய் ஊற்றுவாள்
கெக்கலித்தபடிக் கோழிகளைத் துரத்தும் சேவல்களைப் பார்த்தபடி
சீருடையில் கல்விக்கூடத்துக்குச் செல்வோம்
தோட்டப் பாத்திகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த
தம்பு அண்ணா
கிணற்று மோட்டார் அறைகளில் இளைஞர்களை ஆற்றுப்படுத்துவார்
இதுபோன்ற நேரங்களில்
வளர்ப்பு நாயான ஜிம்மியுடன் அமர்ந்துகொண்டு
மவுத் ஆர்கன் வாசிப்பது உற்சாகமானது
தெருவோரம் மற்றும் பொட்டல்களெங்கும்
நுனியில்
பீங்கான் பூச்சுக் கிண்ணங்கள் பொருத்திய கழிகள்கொண்டு சிலர்
காய்ந்த பன்றி விட்டைகளைச் சேகரிப்பர்
மாலையில்
ஜின்னிங் பேக்டரி மற்றும் கட்டடப் பணி முடித்த பெற்றோர்கள்
இல்லங்களுக்குத் திரும்புகையில்
கிழிந்த புறநகர் உந்துகள் செல்லும் சாலையோரம்
தவணை ஏஜென்ஸியில்
வால் கிளாக்குகள் மற்றும் ஸ்டீல் கட்டில்களை விசாரித்துக்கொண்டும்
பெட்ரோமாக்ஸ் வெளிச்சப் புரோட்டா கடை வாசல்களில்
பொறுமையின்றியும் மக்கள் புழங்குவார்கள்
இதற்கிடையே
பரணில் இருந்த என் குதிரை தொலைந்திருந்தது
விடுமுறை தினங்களின்போது
தானியங்கள் உலர்த்தும் களத்துக்கருகே
இரட்டை ஜடை பின்னிய குமரிகளின் சைக்கிள் பழக்கம்
அமைதியான மதியநேரங்களை
கரட்டையொட்டிய கிணற்றில் பெருக்கமடைந்திருந்த
தண்ணீர்ப் பாம்புகளின் மீது
சேகரித்திருந்த கற்களை எறிந்தபடி தீர்ப்போம்
வீதியில் ரிங்பால் ஆட்டம் நடக்கும்போது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick