கவிதைகள் - அ.ரோஸ்லின்

தணலின் பாடல்

தணலின் வெதுவெதுப்பை
மழை அவன் கரங்களுக்குக் கடத்தியிருந்தது.
வான் துளிகளின்
நீர்மை சுமக்கும் சிற்றிலைகள்
அவன் பிரியத்தின் மகத்துவத்தைப்
பொழுதிற்கு வழங்கியிருந்தன.
இந்த நாள்
இப்படிக் கடந்து செல்லும் என
அவள் நினைத்திருக்கவில்லை.
நீர்மையற்ற தாழ்ப்பாள்களுக்குள்
அடைத்துவைத்திருக்கிறாய்
சின்னஞ்சிறு தேவதைக்கான
ஒரு சொல்லை.
இசைக்கருவியின் நாண்களில்
ஔிந்திருக்கும் அவள் கீதம்
புத்தம்புது பாடல்களை இசைக்கிறது.
மீட்டும் இசைக்கம்பியிலிருந்து
மெல்லிய அதிர்வுகள்
புறப்பட்டு எழுகின்றன
கானகத்தின் பசும் நெடியுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick