யட்சியின் வனம் - மனுஷி

னது வழித்தடமெங்கும்
பெருமழையைச் சுமந்து போகும் யட்சி
ஒரு நகரத்திலிருந்து
இன்னொரு நகரத்திற்கு
இடம்பெயர்கிறாள்.
கடிகார முட்களின் பிடியில்
அவளது அதிகாலை சிறைப்படுகிறது.
அவளது கனவுகளில்
பறந்துகொண்டிருக்கும் பட்சிகள்
இளைப்பாற மரங்களற்று
பெருநகரக் கட்டடங்களின்
பால்கனியில் அமர்ந்து
வனமிழந்த துயரத்தைப் பாடுகிறது.
நகரத்தின் பேரிரைச்சல்
பழகிக்கொள்ளும் பொருட்டு
வாகன நெரிசல் மிகுந்த சாலையில்
சிறுபிள்ளையைப்போல்
நடந்து போகிறாள்.
சிக்னலைக் கடந்த பின்
பரந்து விரிந்த மரமொன்று
அவளது வனத்தின் எச்சமாய்
செம்மாந்து நிற்கிறது
பசிய கரங்களை அசைத்தபடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick