கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள் : ஜி.ராமமூர்த்தி

ரலாறு பெயர்களால் ஆனது இல்லை. ஆனால் பெயர்களின்றி வரலாறு இல்லை. சில பெயர்களைப் பற்றி வரலாற்றில் குறிப்புகள் ஏதும் இல்லாவிட்டாலும், அவை வரலாற்றின் பெயர்களாக இருப்பதை மறுக்க முடியாது. குறிப்புகளற்ற பெயர்களின் பின்னால் இருக்கும் வரலாற்றுக்கு எப்போதும் ஈர்ப்புசக்தி அதிகம்.

அப்படி ஒரு பெயர்தான் ‘மாயக்காள்’. இந்தப் பெயரைப் பற்றி எழுதப்பட்ட வரலாற்றில் இருக்கும் குறிப்புகள் சில வரிகள்தாம். ஆனால் எழுதவேண்டிய பக்கங்கள் எண்ணற்றன. 

தமிழகத்தில் போலீஸ் தாக்குதலுக்குப் பலியான முதல் பெண் மாயக்காள். குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழ் பெருங்காமநல்லூர் கள்ளர்களைப் பதிவுசெய்யச் சென்ற போலீஸ் படை, பதிய மறுத்தவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

அந்தத் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர் மாயக்காள்.

இந்த நிகழ்வு தொடர்பாக அரசு அறிக்கைகளும் விவாதக் குறிப்புகளும் பத்திரிகைச் செய்திகளும் நீதிமன்றத் தீர்ப்புகளுமாகப் பலநூறு பக்க ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றை முழுமையாக இங்கு விவாதிப்பது இயலாத காரியம். ஆனால், அந்த ஆவணங்களில் அங்குமிங்குமாகச் சிற்சில வரிகளில்தான் மாயக்காளைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அவற்றையெல்லாம் சேர்த்து இணைக்கிறபோது கிடைக்கும் வரலாற்றுச் சித்திரத்தை வரைவதே இந்தக் கட்டுரை.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து ஓராண்டு நிறைவுபெற சரியாக 10 நாட்களே மீதம் இருந்த நிலையில், 1920-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி அன்று நள்ளிரவு மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றில் இருந்து சென்னை மாகாண கவர்னருக்கு ஒரு தந்தி அனுப்பப்பட்டது. தந்தியில் இருந்த வாசகம், ‘குற்றப்பரம்பரை சட்டப்படி பதிய மறுத்த 70 நபர்கள் திருமங்கலம் தாலுகாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். உடனடியாக நிவாரணம் வேண்டுகிறேன்’.

தந்தியை அனுப்பியவர் பெருங்காமநல்லூரைச் சேர்ந்த முத்துமாயத்தேவர். கவர்னருக்குத் தந்தியை அனுப்பும் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இருந்தவர், பாரிஸ்டர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப்.

தந்தியைக் கண்ட கவர்னர் அலுவலகம் உடனடியாக விழித்துக்கொண்டு தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியது. கவர்னருக்குத் தந்தி சென்றுசேர்ந்த அதே நள்ளிரவில் மதுரை மாவட்ட கலெக்டருக்கும் முத்துமாயத்தேவர் தந்தி அனுப்பியுள்ளார். கவர்னரின் பார்வைக்குச் செய்தி எட்ட, அவர் உள்துறைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். உள்துறைச் செயலாளரோ காவல்துறை ஐ.ஜி-யிடமும், மதுரை மாவட்ட கலெக்டரிடமும் விளக்கம் கேட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick