காதலும் கடந்து போகும்: முப்பது வருடங்களில் காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

னக்கு 17 வயதிருக்கும்போது நானும் சில இலக்கிய நண்பர்களுமாய் ஓர் அரசியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள ரயிலில் சென்னைக்குக் கிளம்பினோம். நண்பர்கள் வயதில் என்னைவிட இருபது முப்பது வருடங்கள் மூத்தவர்கள். கூட்டங்களிலோ, நேரிலோ சந்திக்கையில், அவர்கள் அரசியல், இலக்கியம், சமூகம் அன்றி வேறெதையும் உரையாடியது இல்லை. ஆனால், ரயிலில் ஒன்றுசேர்ந்ததும் பேச்சு முழுக்க பெண்கள் பற்றியதாக மாறியது. தீவிர விஷயங்களை முழுக்க உதறி, அவர்கள் தம் பால்யத்துக்குத் திரும்பினார்கள். ஓர் இடதுசாரி அறிஞர் தான் பார்த்த ‘புளூ ஃபிலிம்’ பற்றி பேசினார். வேறு சிலர் தம் இளமைக்காலக் காதலிகள் பற்றி அசைபோட்டபடி திளைத்துக் கொண்டிருந்தார்கள். நான் இவர்கள் மத்தியில் தனி ஆளாய் தத்தளித்தேன். சற்று நேரம் கழித்து நானும் என்னைவிட பத்து வயது மூத்த ஒரு கவிஞருமாய் எழுந்து ரயிலுக்குள் உலாத்தத் துவங்கினோம். செகண்ட் கிளாஸ் இருக்கையில் வெள்ளைக்கார இளைஞர் ஒருவர் அமர்ந்திருப்பது பார்த்து ஆர்வம்கொண்டு அவரிடம் சென்று பேச்சுக்கொடுத்தோம். அவருக்கு வயது இருபதுக்குள் இருக்கும். அப்போது அவர் இந்தியா முழுக்கப் பயணம் மேற்கொண்டிருந்தார். நாங்கள் எடுத்த எடுப்பிலே “நீங்கள் முதன்முதலில் எந்த வயதில் செக்ஸ் வைத்துக் கொண்டீர்கள்?” என்று உடைந்த ஆங்கிலத்தில் அவரிடம் கேட்டோம். அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் “பதினாலு வயதில் என் முதல் செக்ஸ் அனுபவம் நிகழ்ந்தது” என்றார்.  ஏதோ முதன்முதலில் சைக்கிள்விடப் பழகியதைபோல் அதைப் பற்றி அவர் குறிப்பிட்ட விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. இன்று இருபது வருடங்களுக்குப் பிறகு இதே பதிலை ஓர் இந்திய இளைஞன் கொஞ்சம் அலட்டல், கர்வத்தோடு கூறுகிறான். இன்று பெண்ணுடலோ, செக்ஸோ, யாருக்கும் திகைப்பான காரியம் அல்ல.

மனித உடலை, சமூகம் கண்காணிக்கும் நெருக்கடியில் செக்ஸ் என்பது காணாப்பொருளாய், அபூர்வமாய், அதனாலே அச்சமூட்டுவதாய், புனிதமானதாய் நமக்கு முன்பு தோன்றியது. இன்று அது தலைகீழாகிவிட்டது. செக்ஸ்தான் காதலின் அடிப்படை. அதனால், காதலையும் சேர்த்து பிற விஷயங்களும் இன்று சாதாரணமாகி விட்டன.

பெண்ணுடன் உரையாடுவது அபூர்வமாய் இருந்த சமூகச்சூழலில் அது தவமிருந்து பெற்ற வரமாய் கருதப்பட்டது. எண்பது, தொண்ணூறுகளின் சினிமாவில் இந்தச் சித்திரம் காதல் பற்றி இருந்தது. ஒரு பெண்ணிடம் ஒரு சொல்லை மனம்திறந்து பேசும் தன்னம்பிக்கை இல்லாத ‘முரளிகள்’ ஏராளம் தோன்றினார்கள். அவர்கள் கடைசிவரை மருகிக்கொண்டே இருந்தார்கள். இலக்கியத்தில் இத்தகைய ஓர் ஆண்நிலையை தி.ஜானகிராமன் ‘மோகமுள்’ நாவலில் உருவாக்கினார்.

தொண்ணூறுகளின் இறுதியில் தாராளமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி, ஊடகப் பெருக்கம், பன்னாட்டு நிறுவனங்கள் என நம் சூழலைப் புரட்டிப்போட்டன. இந்தப் புதுச் சமூக வெளிகளில் ஆணும் பெண்ணும் தடையின்றி ஓரளவு உரையாட முடிந்தது. இந்தக் கட்டத்தில் செக்ஸ் குறித்த திகைப்பு விலக ஆரம்பித்தது. காதல் என்பது ஒரு பெண்ணைத் துரத்தி அடையும் காரியம் அல்ல. காதல் ஒரு பெண்ணுடன் பகிரும் அன்பு, இச்சை, உரையாடல் எனும் புதுச் சித்திரம் ஒன்று ஆண்களுக்கு ஏற்பட்டது. சினிமா, தமிழ்ச் சமூகத்தின் ஒரு முக்கியமான பிரதிபலிப்புக் கருவி என்கிற அடிப்படையில் இயக்குநர் ஷங்கரின் ‘காதலன்’ படத்தை  ‘பாய்ஸ்’ உடன் ஒப்பிட்டால், தொண்ணூறுகள் துவங்கி இரண்டாயிரத்தின் முதல் பாதி வரையிலான இந்த மாற்றத்தை நாம் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியும். ‘காதலன்’ படத்தில் தன் காதலியை நெருங்கிப் பேசவே நாயகன் போராடி பல நாட்கள் காத்திருப்பான். காதலியின் ஒரு மயிரிழையைப் பாதுகாத்து அதைப்பற்றி பாடி, டான்ஸ் எல்லாம் ஆடுவான். ஆனால், ‘பாய்ஸில்’ பதின்வயதுப் பையன்கள் தம் காதலியர்களோடு அறிமுகமான குறைந்த காலத்திலேயே தியேட்டர், மால் என ஜாலியாய் சுற்றுகிறார்கள். சுவாரஸ்யமாக, இந்தப் பெண்கள் ‘காதல் வேண்டாம், நட்பு போதும்’ எனும் நிபந்தனையின் பேரில்தான் உறவை ஏற்பார்கள். பையன்கள் தொடர்ந்து இந்தப் பெண்களைத் தொட முயன்றுகொண்டே இருப்பார்கள். நட்புக்கும் இச்சைக்கும் இடையிலான காதலின் கட்டம் இது. இந்த உறவுநிலை மாற்றம் மூன்று விதமான சிக்கல்களை உருவாக்கின.

பெண்ணுடல், அதன் மீறல், மீறலின் ஒழுங்கீனம் குறித்து சமூகத்தில் பரவலாய் சர்ச்சைகள் தோன்றின. நாற்பது வயதுக்கு மேலானோர் இளம் தலைமுறையின் கட்டுப்பாடின்மை குறித்து பதற்றம் கொண்டனர். ‘பாய்ஸ்’ படத்தின் ஆபாசம் குறித்து அன்று நிகழ்ந்த சர்ச்சைகள் இதன் விளைவுதான். பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகமாகின. பொறியியல் கல்லூரிகளில், தனியார் பள்ளிகளில், பொதுவெளிகளில் பெண்கள் கடுமையாய் கண்காணிக்கப்பட்டனர். இந்தக் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள கல்லூரிகளில்  தம் மகள்களைச் சேர்ப்பதில் பெற்றோர் சிரத்தை எடுத்தனர். இருபது வருடங்களுக்கு  முன்பு வரை சமூகத்துக்கு இந்தக் கவலை இருந்தது இல்லை.

காதலின் சுதந்திரம் அடுத்து நம் சாதியமைப்பைச் சற்றே அசைத்துப் பார்த்தது. உளவியல்படி மனித மனம் சுலபத்தில் வேறு குழுவைச் (சாதியை) சேர்ந்தவர்கள்மீது இச்சைகொள்ளும். இதனால்தான் மற்ற விஷயங்களில் இறுக்கமான சாதியவாதிகளாய் இருக்கின்ற நாம் மாற்றுசாதியினர்மீது காதல் கொள்வது அதிகமானது. காதலுக்கு முன்பும் பின்பும் நாம் சாதியத்தைக் கடைபிடிக்க தவற மாட்டோம். காதல் செய்யும் காலம் மட்டுமே விதிவிலக்காக இருக்கும். கௌரவக் கொலைகள், காதலை ஒட்டிய சாதிய வன்முறைகளின் காலம் உச்சம் பெற்றது. சாதி மீறிய காதலர்களை சமூகம் ஊர் ஊராய் துரத்தி நிர்மூலமாக்கியது. பிணங்களைக் காட்சிப்படுத்தி எச்சரிக்கை செய்தது. இந்தக் கொடுமை இன்று வரை தொடர்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick