சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சென்னை என்பது உலகின் குட்டி ‘மாதிரி பூமி’. அதனால்தான், தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் இயல்பான உள்ளத்திலும், இடம்பெயர்ந்தேனும் தமது வாழ்வைச் செம்மையாக்கிக்கொள்ள விரும்பும் அனைத்து மக்களிடமும், சென்னை நகரம் குறித்தான ஒரு கனவை உருவாக்கி அதை நோக்கி நகரவும், அதைக் கண்டடையவும் தூண்டுகிறது. வந்து வாழ்ந்து பழகிய பின், ஒருவிதமான சலிப்பையும் முகச்சுழிப்பையும் உண்டாக்குகிறது. அதற்கான காரணங்களும் இருக்கவே செய்கின்றன.

கிராமத்தின் அமைதியை, இயற்கைச் சூழலை சென்னை நகரச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்த்து ஏங்குபவர்களும் உண்டு. ஆனால், வாழ்வோ, பிழைப்போ பல வாய்ப்புகளை அள்ளித்தரும் சென்னை நகரம் பல உள்ளங்களுக்குப் புத்துணர்ச்சியையும், புது இலக்கையும், புது வாழ்க்கைக்கான வழியையும் காட்டுகிறது. அதேசமயம், சென்னையின் உண்மையான முகம், சமூகத்தின் மிக ஆழத்திலிருந்து மேல் மட்டம் வரையிலும் இன்று மிகவும் மாறிவிட்டது. அதன் பழைமையான, இயல்பான பொலிவு இன்றைய  ‘வளர்ச்சிபெற்ற’ நகரின் அடியில் சிக்கித் திணறுகிறது.

கடற்கரை நாகரிகம், நதிக்கரை நாகரிகம் என இரண்டு வகையான நாகரிகங்களை சென்னையில் உணர முடியும். இந்த இரண்டு வகை நாகரிகங்களில் இருந்தும் விலகி வேறு ஒரு வளர்ச்சியுற்ற பலநிலைத் தோற்றமுள்ள நாகரிகத்தையும் சென்னையில் காண முடியும். இந்த இடைவெளிகளோடும்  முரண்களோடும்தான் இந்த நகரம் மின்னி மிளிர்கிறது. சென்னையின் நிஜத் தோற்றத்தை அதன் இயல்பை இலக்கியமாக்குவது மிகவும் கடினமான ஒன்று. அந்த முயற்சி, மிக நீண்டகாலமாக நடந்தபடியேதான் இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick