ஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம் - ரவிக்குமார்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, ஒரு போர்க்குரலாக மாறி தமிழ்நாட்டின் அரசியல் வெளியையும் ஊடகங்களையும் ஆக்கிரமித்தது. வரலாறு காணாத வகையில் பருவமழை பொய்த்து, தமிழகத்தை வறட்சி அச்சுறுத்தும் இந்த நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலையிலும் அதிர்ச்சியிலும் உயிர் இழந்துள்ள சூழலில், விவசாயத் தொழிலாளர்களைப் பட்டினிச் சாவு பயமுறுத்தும் நேரத்தில் தமிழகம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காகக் கொந்தளித்து நின்றது. அயல்நாடுகளில் வாழும் தமிழர்களும்கூட ஆர்ப்பாட்டங்களை நடத்தி, தமது ஆதரவைத் தெரிவித்தார்கள்.

‘அரபு வசந்தம்’, ‘ஆக்குபை வால்ஸ்ட்ரீட்’ போராட்டங்களோடு ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு இளைஞர்களும் மாணவர்களும் தமிழக நகரங்களின் தெருக்களில் கூடினார்கள்.

இந்தப் போராட்டங்கள், ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் நடத்தப்படும் விளையாட்டு என்பதை மாற்றி, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்துக்குமான பண்பாட்டு அடையாளம் என்பதாக அதை மாற்றியிருக்கின்றன.

பொருளாதாரப் பிரச்னைகளைவிட பண்பாட்டுப் பிரச்னைகள் முன்னுரிமை பெற்றுவிடுவது தமிழ்நாட்டுக்குப் புதிது அல்ல. அறுபதுகளில் நிலத்துக்காகவும் கூலி உயர்வுக்காகவும் நடத்தப்பட்ட போராட்டங்கள் நாடு முழுவதும் அலை அலையாகப் பரவிக்கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் காவிரிப் படுகையும் அத்தகைய போராட்டங்களால் கனன்றுகொண்டிருந்தது. ஆனால், அவை எல்லாம்  பின்தள்ளப்பட்டு தமிழ்நாடு முழுவதும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முன்னிலை பெற்றது. அதை ஆதரித்தவர்கள் எப்படி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தார்கள் என்ற வரலாறு நமக்குத் தெரிந்ததுதான். அதே நிலை இப்போதும் தொடர்கிறது என்பதைத்தான் ஜல்லிக்கட்டுக்கான இந்தப் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எல்லாவற்றையும் பொருளாதாரப் பிரச்னையாக மட்டுமே சுருக்கிப் பார்ப்பவர்கள், இப்படியான பண்பாட்டுக் கொந்தளிப்புகளை ஏதோ ஒருசிலர் திட்டமிட்டு அரங்கேற்றும் சதித் திட்டம் என்றே புரிந்துகொள்வார்கள். அது சரியான பார்வை அல்ல.

ஜல்லிக்கட்டு, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம் என்பவர்கள் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரையில் குறிக்கப் பட்டிருப்பதும், ஏறுதழுவுதல் என கலித்தொகை, பட்டினப்பாலை ஆகிய இலக்கியப் பிரதிகளில் சுட்டப்பட்டிருப்பதும்  ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் தற்போது நடத்தப்படுவதும் ஒன்றுதான் என வாதிடுகின்றனர். சங்க இலக்கியப் பிரதிகளை வாசித்தவர்களுக்கு, இந்த வாதத்தை ஏற்பது சற்றுக் கடினமாகவே இருக்கும். இப்படிச் சொல்வதாலேயே உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என அர்த்தம் ஆகாது.
 
ஜல்லிக்கட்டு அரசியலைப் புரிந்துகொள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியர் பூர்தியூ (1930 – 2002)வின் ‘கலாசார மூலதனம்’ குறித்த கோட்பாடு நமக்கு உதவும். கல்வித் தளத்தில் மாணவர்கள் புரியும் சாதனைகளுக்கும் அவர்களது பலதரப்பட்ட குடும்பப் பின்புலங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்த பியர் பூர்தியூ, மாணவர்களின் வெற்றி தோல்வி என்பது அவர்களது உள்ளார்ந்த ஆற்றலோடு தொடர்புடையது என்ற பொதுப்புத்தியின் நம்பிக்கையை நிராகரித்தார். மாணவர்களின் கல்விக்கு எனச் செலவிடப்படும் பணத்தோடு வெற்றி தோல்வியைத் தொடர்புபடுத்திப் பார்த்த பொருளாதாரப் பார்வையையும் அவர் மறுத்தார். ஒரு மாணவனின் வெற்றி தோல்வி அவனது குடும்பம் உருவாக்கியிருக்கும் கலாசார மூலதனத்தோடு தொடர்புகொண்டது என அவர் விளக்கினார். கலாசார மூலதனம் மூன்று வடிவங்களில் இருக்கிறது - அகவயப்படுத்தப்பட்ட நிலை (Embodied state), புறவயப்படுத்
தப்பட்ட நிலை (Objectified state), நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலை (Institutionalised state) என்பவையே அந்த மூன்று நிலைகள்.

அகவயப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் கலாசார மூலதனம் என்பதில், நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் பண்பாட்டு நடவடிக்கையை பியர் பூர்தியூ உள்ளடக்குகிறார். அது, ஒருவரது உடலிலும் மனதிலும் என்றென்றைக்குமாகப் படிந்திருப்பது. அதை அடைவதற்குத் தொடர்ச்சியான உழைப்பும் பயிற்சியும் முன்நிபந்தனைகளாக இருக்கின்றன. கலாசார மூலதனத்தை அகவயப்படுத்து வதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. அதை ஒருவர் தனிப்பட்ட முறையில்தான் பெற முடியும். 

தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், ஒரு சில சமூகப் பிரிவினருக்கு ஜல்லிக்கட்டு அத்தகைய கலாசார மூலதனங்களில் ஒன்றாக இருக்கிறது. 1914-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது வெளியிடப்பட்ட மதுரை மாவட்ட கெஜட்டியரில் ஜல்லிக்கட்டு குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் செய்தி இதை உறுதிப்படுத்துகிறது...

‘ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஒரு நாள் குறிக்கப்படும். அந்தச் செய்தி வாரச் சந்தைகளில் தண்டோரா போட்டு எல்லோருக்கும் அறிவிக்கப்படும். கொம்புகளில் துணி அல்லது கைக்குட்டை கட்டப்பட்ட மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும். கட்டை வண்டிகளை நிறுத்தி உருவாக்கப்பட்ட சந்துக்குள் அந்த மாடுகள் ஓடிவரும். அப்போது, பலத்த சப்தத்தோடு மேளங்கள் முழக்கப்படும், கூடியிருப்போரும் ஆரவாரம் செய்வார்கள். ஓடும் மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் துணியை லாகவமாக அவிழ்க்க வேண்டும். அதற்கு, விரைவாக ஓடும் ஆற்றலும் பறித்தெடுக்கும் திறனும் தேவை. வெற்றிபெறுகிறவர்கள் அந்த நேரத்தின் நாயகர்களாகக்  கொண்டாடப்படுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick