ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ந்த உலகத்தில் எனக்குப் பிடித்த இடம் எதுவெனக் கேட்டால், ஞானியின் வீடு என்பேன். ஆயிரம் புத்தகங்களுக்கு நடுவே ஆலமர்ச்செல்வன்போல் அவர் அமர்ந்திருக்க, எதிரில் அமர்ந்து இலக்கியமும் வரலாறும் தத்துவமும் அரசியலும் கேட்டுக்கொண்டிருப்பதுவும், பேசிக்கொண்டிருப்பதுவும் ஒரு பேரனுபவம். அது எனக்கு வாய்த்திருக்கிறது. ஒருமுறை இருமுறை அல்ல. பற்பல முறை, பற்பல நாட்கள், பற்பல ஆண்டுகள். ஒரு காலத்தில் என் மாலை நேரங்கள் அனைத்தும் ஞானியின் வீட்டில்தான் கழிந்தன. சில சமயங்களில் காலையிலேயே சென்றுவிடுவேன். இரவு வரை பேசிக்கொண்டிருப்போம். என்னென்ன பேசினோம் என்பதற்கு அளவே இல்லை. வானத்துக்குக் கீழ் உள்ள எல்லா விஷயங்கள் குறித்தும் பேசுவோம். எவ்வளவு பேசிவிட்டு வந்தாலும் பலநாள் பேசாதவன்போல மறுநாள் செல்வேன். அவரும் சளைக்காமல் பேசுவார். எங்கள் இருவருக்கும் பொதுவான விஷயங்கள் நிறைய இருந்தன. குறிப்பாக, இலக்கியம், வரலாறு, அரசியல், தத்துவம்.

அது 2000-ம் வருடத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை. கோவை, கொடிசியா அரங்கில் ஒரு கூட்டம். மேடையில் அ.மார்க்ஸ் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பேசப் பேச ஒரு சலசலப்பு. அரங்குக்குள் நுழைகிறார் ஞானி. அவரைக் கைப்பிடித்து அழைத்துவருகிறார் பாலைநிலவன். ஓர நாற்காலிகளில் அமர்ந்திருந்த பலரும் எழுந்து வணக்கம் சொல்லி, தங்கள் பெயரைச் சொல்லிக் கைகொடுக்கிறார்கள். அப்போதுதான் அவரை முதன்முதலாகப் பார்க்கிறேன். அதற்கு முன்பே அவரின் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். சிற்றிதழ்களில் அவர் பெயர் அடிக்கடி புழங்கும். மதிப்பிற்குரிய மனிதர் என்பதாகவே அந்தச் சித்திரங்கள் இருக்கும். ஆனால், அவரை நெருங்க மெல்லியத் தயக்கம் இருந்தது. ‘நமக்கெல்லாம் என்ன தெரியும்னு அவர்கூட பேசறது’ என்று நினைத்துக்கொள்வேன். பிறகு ஒரு காலம் வந்தது. என் வாசிப்பின் மீது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டபோது, நானே அவரைத் தேடிச் சென்றேன். ஞானி மிக எளிமையாக இருந்தார். விஷயஞானம் உள்ளவர்கள், அல்லாதவர்கள் என யாரும் அவரைத் தேடிச் செல்ல முடியும் என்பதை அப்போது உணர்ந்தேன். அவரவர் ஆழங்களுக்கு ஏற்ப அவரிடம் உரையாட விஷயமும் சொற்களும் இருந்தன. 

இதுதான் ஞானியின் பலமே. தன்னைத் தேடி வரும் எந்த ஒரு மனிதரோடும் உரையாடக்கூடியவராய் இருந்தார். ராமச்சந்திர குஹா, காந்தியை ‘மாபெரும் விவாதங்களின் தாய்’ என வர்ணிக்கிறார். இது ஒருவகையில் ஞானிக்கும் பொருந்தும். எவ்வளவு மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களோடும் அவரால் உரையாட முடிந்திருக்கிறது. அவரின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமலும் வந்தவரைக் காயப்படுத்தாமலும் தன் கருத்துகளைத் தெளிவாக, திட்டவட்டமாக எடுத்துவைப்பார். அவர் பேசும் கருத்துகள் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அவர் உரையாடும் தொனி தவிர்க்க இயலாததாக இருக்கும். ஆங்கிலத்தில் ‘டிஸ்கோர்ஸ்மென்ட்’ என்று ஒரு சொல் உண்டு. ஞானியின்   உரையாடல்கள் அதற்கு இலக்கணமானவை. அவர் பேசும் பாங்கு தனிச் சிறப்பானது. முதலில் வந்தவரைப் பேசச் செய்வார். அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்பார். இடையிடையே சில கேள்விகள் இருக்கும். அந்தக் கேள்விகளால் உரையாடலை வழிநடத்துவார். ஒரு கட்டத்தில் நாம் எந்தப் புள்ளியில் இருந்து பேசிக்கொண்டிருந்தோமோ, அங்கிருந்து விலகி வேறு ஓர் இடத்துக்கு வந்திருப்போம். சில சமயங்களில் அபத்தமாக நேர் எதிரான இடத்தில் இருப்போம். உரையாடலின் ஒரு பெரிய திருப்பத்தில் அந்தரத்தில் நம்மைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டுப் புன்னகைப்பார். நாம் திகைப்பில் ஆழ்ந்திருப்போம். ஒரு நல்ல உரையாடலில் இது நிகழ வேண்டும். ஞானியுடன் பேசும் ஒரு நுட்பமான மனதுக்கு அடிக்கடி இது நிகழும். உண்மையில், ஞானி கேள்வி மட்டுமே கேட்பது இல்லை. அந்தக் கேள்விகளின் வழியாகத் தன்னையும் தொகுத்துக்கொள்வார். நம்மையும் தொகுத்துக்கொள்ளச் செய்வார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick