காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்

ன்று உலகத்திலுள்ள வளிமண்டல விஞ்ஞானிகளில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் வீரபத்ரன் இராமநாதன், மதுரையைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் முனைவர் பட்டத்தை முடித்த பின்னர் வளிமண்டல ஆய்வுகளில் ஈடுபட்டு பல விருதுகளைத் தன் ஆராய்ச்சிக்காகப் பெற்றவர். அமெரிக்காவின் National Academy of Sciences-ல் இவர் அங்கத்தவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இது ஒரு விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய அதிஉயர் கௌரவம். ‘சூழ்நிலை சீர்கேட்டால் புவி வெப்பமடைவதும், காலநிலை மாற்றமும்தான் சமீப காலங்களில் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் எதிர்கொள்ளும் ஆகப்பெரிய அச்சுறுத்தல்’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாடு நாடாகப் பறந்துகொண்டிருப்பவரை தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்புகொண்டேன்.

“உங்கள் சிறுவயது ஞாபகங்கள் பற்றி கூறுங்கள்...”

“என் சிறுவயதில் திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில்தான் படித்தேன். என்னுடைய மூதாதையர் வாழ்ந்த கும்பகோணத்தில் விடுமுறைகளைக் கழித்தேன். கோடைகாலத்தில் மறக்கமுடியாத நினைவு, என்னுடைய தாத்தாவோடு மாட்டு வண்டியில் அவருடைய விவசாய நிலங்களைப் பார்வையிடப் போனதுதான். 11 வயதில் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்காக என்னை பெங்களூருக்கு அனுப்பினார்கள். அதுவரையில் தமிழில்தான் படித்துவந்தேன். பெங்களூரிலோ எல்லாமே ஆங்கிலம்தான். ஆசிரியர்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லை. படிப்பில் முதல் நிலையில் இருந்த நான், கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னுடைய சொந்தப் பயிற்சியில் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலப் பாடத்தைக்கூட நானாகவே விளங்கிப் படித்தேன். இதனால் ஒருவிதத்தில் எனக்கு நன்மையே கிடைத்தது. பிற்காலத்தில் ஆராய்ச்சிகள் செய்தபோது சொந்தமாகச் சிந்திக்கும் திறன் எனக்குக் கைகொடுத்தது.”

“வளிமண்டல விஞ்ஞானியாகும் எண்ணம் எப்படித் தோன்றியது?”

“அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தை 1965-ல் நிறைவுசெய்தேன். பொறியியலாளர் வேலை எனக்குப் பொருத்தமில்லை என்று பட்டது. நான் ஒன்றிலும் திறமை இல்லாதவன் என்ற எண்ணமும் தோன்றியது. ஒரு வெறுப்பில் விஞ்ஞானம் படித்து அதில் முதுகலைப் பட்டம் பெற்றேன். இங்கேதான் ஒளியியல் சார்ந்த கருவி ஒன்றை நான் கண்டுபிடிக்க நேர்ந்தது. துல்லியமாக வெப்ப நிலையை அளக்கக்கூடிய இந்தக் கருவி என் சொந்தச் சிந்தனையில் உருவானது. இது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. ஆராய்ச்சிதான் என்னுடைய எதிர்காலம் என்று தீர்மானித்தேன். அமெரிக்காவுக்கு முனைவர் படிப்புக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக என்னுடைய பேராசிரியர், வெள்ளி, செவ்வாய் கிரகங்களின் வளிமண்டல ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்தினார். அதுவே தொடர்ந்தது. ஒரு விபத்துபோல என் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.”

“உங்கள் 31வது வயதில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஒன்றைச் செய்தீர்கள். அதை நீங்கள் வெளியிட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? உங்கள் கண்டுபிடிப்பை உலகம் உடனேயே ஏற்றுக்கொண்டதா?”

“1975-ம் வருடம். நான் (குளோரோ ஃபுளோரோ கார்பன்) CFC ஆராய்ச்சியில் மூழ்கினேன். பகல் முழுக்க வேலைசெய்துவிட்டு வீடு வந்ததும் இரவிரவாக ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். பெறுபேறுகளை அலசியபோது என்னால் நம்பமுடியவில்லை. ஆறு தடவை கணக்கீடுகளைச் சரிபார்த்தேன். ஒரே விடைதான் வந்தது. நூறு வருடங்களாக விஞ்ஞானிகள் நம்பிவந்த ஒன்றை என் ஆராய்ச்சி தகர்த்தது. பூமி வெப்பமடைவதற்குக் காரணம் பசுமைக்கூட வாயுக்கள், முக்கியமாக கரியமிலவாயு என்றே நம்பப்பட்டது. எனக்குக் கிடைத்த விடை அதிர்ச்சி தந்தது. ஒரு டன் CFC, 10,000 டன் கரியமிலவாயுவிலும் பார்க்ககூடிய தீமையை விளைவித்தது. ஆராய்ச்சி முடிவை கட்டுரையாக மதிப்புமிக்க ‘சயன்ஸ்’ பத்திரிகையில் எழுதினேன். நியூயார்க்் டைம்ஸ் அந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே வெளியிட்டது. சி.பி.எஸ் தொலைக்காட்சியினர் என்னை நேர்கண்டனர். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் பேட்டி கண்டபோது, அவர்கள் என் ஆராய்ச்சியை நிராகரித்தனர். நான் கொடுத்த பேட்டி, தொலைக்காட்சியில் வெளிவரவே இல்லை. முதன்முதலாக ஸ்வீடன் நாடு 1978-ல் என் கண்டுபிடிப்பை ஏற்று, CFC- ஐத் தடைசெய்தது. தொடர்ந்து மற்ற நாடுகளும் தடை செய்தன. நான் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் படித்த சாதாரண மாணவன்தானே என்று விஞ்ஞான சமூகம் என்னை உதாசீனம் செய்திருக்கலாம். என் அறிக்கையை உடனேயே ஏற்றிருந்தால், வீணாக மூன்று வருட காலதாமதம் ஆகியிருக்காது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick