ஊழிக்கு பிந்தைய புணர்ச்சியின்போது… - ம.செந்தமிழன்

ஓவியம் : செந்தில்

ன் தலைக்கு மேலுள்ள
வானத்தை
இங்கிருந்து பார்த்தபடி நானும்
என் நாசி நுகர்ந்த காற்றை
அங்கிருந்து முகர்ந்தபடி நீயும்
புணர்தலில் ஈடுபடுகிறோம்.

கணத்திற்குக் கணம்
பிறந்துகொண்டிருக்கின்றன
நம் குழந்தைகள்
நட்சத்திரங்களாக
தாவரங்களாக
தேன்சிட்டுக் குருவிகளாக...

பிரிக்க முயன்ற வெளி
தோற்றோடித் தற்கொலை செய்துகொள்கிறது.

இரவென்றும் பகலென்றும்
வெயிலென்றும் குளிரென்றும்
அதுவென்றும்
இதுவென்றும்
அதன் மரணப் படிநிலைகளை
உலகம் பெயரிட்டு அழைக்கிறது...

வெளியின்
இறுதி நாளை எதிர்நோக்கிய
அச்சம் மூச்சடைப்பாக
மாரடைப்பாக
பெயரிட இயலாதவையாக
காற்றில் பரவி பலிகள்கொள்ள...

வெளியின் மரணமோ
சாவகாசமாக
ஆனால்
சர்வ நிச்சயமாக
நிகழ்ந்துகொண்டுள்ளது...

அது கிடக்கட்டும்
வா...
நாம் தொடங்குவோம்.

எனக்கு
செம்போத்துப் பறவைகளும்
மூக்குத்திப்பூக்களும்
பிள்ளைகளாக வேண்டும்...

எங்கும் திரும்பாமல்
எச்சொல்லையும் கேளாமல்
மனதின் துளைக்குள் நுழை
உயிரின் நீளத்தை வளை
இன்னும் ஆழமாக
இன்னும் நீளமாக
இயங்கிக்கொண்டே இரு

ஒவ்வோரியக்கத்தின் முடிவிலும்
ஒவ்வோர் உயிரினம் பிறப்பதைப் பார்
பரவசக் கள் பருகு
மீண்டும் நுழை
மீண்டும் வளை

அதோ மரம்
அதோ குருவி
அதோ கயல்
அதோ அரிமா
அதோ மண்புழு
இயங்கு இயங்கு இடைவிடாதே

இம்முறை மனிதர் மட்டும் வேண்டாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick