கேசம் - நரன்

ஓவியங்கள் : ரமணன்

1972  பங்குனி 

த்தியப்பனுக்கு உடலில் எறும்புகள் ஊர்வதுபோல் உணர்வு. காலையிலிருந்தே அப்படித்தான் இருந்தது. இப்படியான உணர்வுகள் வரும்போது அவர் மனதில் இனம்புரியாத சந்தோஷம் கொப்பளிக்கும். ஆண் யானைகளின் காதில் நீர் வடியும் மத்துக்காலத்துக்கு ஒப்பானது அது. ஆனால், இவ்வளவு நாட்களாக இல்லாமல் இன்று திடீரென ஏன் இப்படி என்று தெரியவில்லை. அவருக்கு 59 வயதாகிறது. வேம்பாரிலிருந்து வறுமையான தன் பதின்ம வயதில் விருதுநகருக்குப் பிழைக்க வந்தவர். பஞ்சுப்பேட்டையில் எடுபிடி பையனாக  வேலையில் சேர்ந்து அங்கேயே பஞ்சுத் தரகராக மாறி, குறைந்த லாபத்துக்கு சரக்கைக் கைமாற்றிவிட்டு, கொள்முதல் செய்யத் தொடங்கி என இன்று பேட்டையின் பெரிய வியாபாரம் அவருடையதுதான். இப்போது எல்லாம் மகன் கதிரேசன்தான் வியாபாரத்தைக் கவனித்துக்கொள்கிறான். அப்பாவின் பாதி வயது அவனுக்கு.

ஆத்தியப்பன் சராசரிக்கும் கூடுதல் உயரம், மழைக்கால பனைமர நிறம்.  வெள்ளை டெர்லின் வேஷ்டி, முழங்கை வரை சுருட்டிவிடப்பட்ட வெள்ளைச் சட்டை. தலையில் நிறைய பஞ்சு சொரிந்து கிடப்பது போன்ற அதிகமான வெண்முடிகள். ஆத்தியப்பனுக்கு சிறு வயதிலிருந்தே சரும வியாதி இருந்தது. ஆங்காங்கே மீன் செதில்களைப் போலிருந்த தோல் இப்போது உடலின் பெரும்பான்மையாக மாறிவிட்டது. பாதிநேரம் நமைச்சல் தாங்காமல் உடலைச் சொறிந்துகொண்டேயிருப்பார். அப்படிச் சொறிந்துகொள்ளும்போது கறுத்த அவரின் தோல்களிலிருந்து வெள்ளையாகச் செதில் செதிலாகக் கொட்டும். சொறிந்த இடத்தில் வெள்ளையாக வரிவரிக்கோடுகள் தெரியும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick